Library · ta

Job 11

11:1 அப்போது நாகமாவின் சோப்பார் யோபுவுக்குப் பதில் கூறினான். 11:2 “இவ்வார்த்தைப் பெருக்குக்குப் பதில் தரப்பட வேண்டும்! இத்தனை பேச்சுக்களும் யோபுவுக்கு நீதி வழங்குகின்றனவா? இல்லை? 11:3 யோபுவே, உனக்குச் சொல்ல எங்களிடம் பதில் இல்லை என்று நினைக்கிறாயா? நீ நகைத்து பேசும்போது உன்னை எச்சரிக்க ஒருவருமில்லை என நினைக்கிறாயா? 11:4 யோபுவே, நீ தேவனிடம், ‘என் விவாதங்கள் சரியானவை, நான் தூயவன் என நீர் காணமுடியும்’ என்கிறாய். 11:5 யோபுவே, தேவன் உனக்குப் பதில் சொல்லி, நீ கருதுவது தவறென உனக்குச் சொல்வார் என விரும்புகிறேன். 11:6 தேவன் ஞானத்தின் இரகசியங்களை உனக்குச் சொல்லமுடியும். ஏனெனில் ஞானத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு என்பதை அவர் உனக்குச் சொல்வார். தேவன் உன்னைத் தண்டிக்க வேண்டிய அளவிற்கு அவர் தண்டிப்பதில்லை. 11:7 “யோபுவே, நீ உண்மையாகவே தேவனைப் புரிந்துகொண்டதாக நினைக்கிறாயா? சர்வ வல்லமையுள்ள தேவனுடைய அறிவை நீ புரிந்துகொள்ள முடியுமோ? 11:8 அது பரலோகத்திற்கும் உயர்ந்தது. மரணத்தின் இடத்தைக் காட்டிலும் ஆழமானது. அதுபற்றி நீர் அறியக்கூடுமோ? 11:9 தேவனுடைய அறிவின் அளவு உயர்ந்தது. பூமியைக் காட்டிலும் கடல்களைக் காட்டிலும் பெரியது. 11:10 “தேவன் உன்னைச் சிறைபிடித்து நியாய சபைக்கு அழைத்துவந்தால், ஒருவனும் அவரைத் தடுக்க முடியாது. 11:11 உண்மையாகவே, யார் தகுதியற்றவரென்று தேவன் அறிகிறார். தேவன் தீமையைப் பார்க்கும்போது அதை நினைவுக்கூர்கிறார். 11:12 ஒரு காட்டுக் கழுதை மனிதனை ஈன்றெடுக்காது. மூடனான மனிதன் ஒருபோதும் ஞானம் பெறமாட்டான். 11:13 ஆனால் யோபுவே, உன் இருதயத்தை தேவனுக்கு நேராக தயார்ப்படுத்த வேண்டும். உன் கரங்களை அவருக்கு நேராக உயர்த்தி அவரைத் தொழுதுகொள்ள வேண்டும். 11:14 உன் வீட்டிலிருக்கும் பாவத்தை நீ அகற்றிப்போட வேண்டும். உன் கூடாரத்தில் தீமை தங்கியிருக்கவிடாதே. 11:15 அப்போது நீ தேவனை வெட்கமின்றிப் பார்க்கக்கூடும். நீ தைரியமாக நின்று, அச்சமில்லாது இருக்க முடியும். 11:16 அப்போது நீ உன் தொல்லைகளை மறக்கக் கூடும். வழிந்தோடும் வெள்ளத்தைப்போல் உன் தொல்லைகள் நீங்கிவிடும். 11:17 நண்பகலில் சூரியனின் பிரகாசத்தைக் காட்டிலும், உன் வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும். வாழ்க்கையின் இருண்ட நேரங்களும் காலை சூரியனைப் போன்று பிரகாசிக்கும். 11:18 அப்போது நீ பாதுகாவலை உணர்வாய். ஏனெனில், உனக்கு நம்பிக்கை உண்டு. தேவன் உன்னைக் கவனித்து உனக்கு ஓய்வளிப்பார். 11:19 நீ ஓய்வெடுக்கப் படுத்துக்கொள்வாய், யாரும் உனக்குத் தொல்லை தரமாட்டார்கள். பலர் உன்னிடம் உதவி நாடி வருவார்கள். 11:20 தீயோர் உன்னிடம் உதவியை எதிர்பார்ப்பர், அவர்கள் தங்கள் தொல்லைகளிலிருந்து தப்பமுடியாது. அவர்களின் நம்பிக்கை அவர்களை மரணத்திற்கு நேராக மட்டுமே வழிநடத்தும்” என்றான்.