Job 15
15:1 அப்போது தேமானைச் சார்ந்த எலிப்பாஸ் யோபுக்குப் பதிலாக,
15:2 “யோபுவே, நீ உண்மையாகவே ஞான முள்ளவனாக இருந்தால், நீ பிரயோஜனமற்ற வெறும் வார்த்தைகளால் பதில் கூறமாட்டாய். வெப்பக் காற்று நிரம்பியவனாக ஞானவான் இருக்கமாட்டான்.
15:3 பொருளற்ற பேச்சுக்களாலும் தகுதியற்ற வார்த்தைகளாலும் ஒரு ஞானவான் விவாதிப்பானென்று நீ நினைக்கிறாயா?
15:4 யோபுவே, நீ கூறும்படி நடந்தால், ஒருவனும் தேவனை மதித்து, அவரிடம் ஜெபிக்கமாட்டான்.
15:5 நீ கூறும் காரியங்கள் உனது பாவத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன. யோபுவே, உனது புத்திசாலித்தனமான சொற்களால் உனது பாவங்களை நீ மறைக்க முயன்றுக்கொண்டிருக்கிறாய்.
15:6 நீ செய்வது தவறென நான் உன்னிடம் நிரூபிக்கத் தேவையில்லை. உனது வாயினால் கூறும் சொற்களே உனது தவற்றைச் சுட்டிக்காட்டுகின்றன. உனது சொந்த உதடுகளே உனக்கு எதிராகப் பேசுகின்றன.
15:7 “யோபுவே, பிறந்தவர்களில் நீதான் முதல் மனிதன் என எண்ணுகிறாயா? மலைகள் தோன்றும் முன்னே நீ பிறந்தாயா?
15:8 நீ தேவனுடைய இரகசிய திட்டங்களுக்குச் செவிசாய்த்தாயா? நீ மட்டுமே ஞானமுள்ளவனென நினைக்கிறாயா?
15:9 யோபுவே, உன்னைக் காட்டிலும் நாங்கள் மிகுதியாக அறிவோம். உனக்குப் புரிகின்றக் காரியங்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
15:10 நரைமயிருள்ளோரும் வயது முதிர்ந்தோரும் எங்களோடு ஒத்திருக்கிறார்கள். ஆம், உனது தந்தையைக் காட்டிலும் வயது முதிர்ந்தோரும் எங்கள் பக்கத்தில் இருக்கிறார்கள்.
15:11 தேவன் உனக்கு ஆறுதல் கூற முயற்சிக்கிறார், ஆனால் அது உனக்குப் போதவில்லை. தேவனுடைய செய்தியை நயமாக நாங்கள் உனக்குக் கூறினோம்.
15:12 யோபுவே, ஏன் நீ புரிந்துகொள்ளவில்லை? ஏன் நீ உண்மையைக் காண இயலவில்லை?
15:13 நீ கோபமான இந்தச் சொற்களைப் பேசும்போது நீ தேவனுக்கு எதிராக இருக்கிறாய்.
15:14 “ஒரு மனிதன் உண்மையில் தூயவனாக இருக்க முடியாது. பெண் வயிற்றில் பிறந்த ஒருவன் நியாயமுள்ளவனாக இருக்க முடியாது.
15:15 தேவன் அவரது தூதர்களைக்கூட நம்புகிறதில்லை. வானங்களும் அவரது பார்வையில் துய்மையானவை அல்ல.
15:16 மனிதன் இன்னும் கேவலமானவன், மனிதன் அழுக்கானவனும் அழியக்கூடியவனும் ஆவான். தண்ணீரைப்போன்று அவன் கொடுமையைப் பருகுகிறான்.
15:17 “யோபுவே, எனக்குச் செவிகொடு, நான் உனக்கு விவரிப்பேன். எனக்குத் தெரிந்ததை நான் உனக்குக் கூறுவேன்.
15:18 ஞானவான்கள் எனக்குக் கூறியவற்றை நான் உனக்குச் சொல்வேன். ஞானவான்களின் முற்பிதாக்கள் அவர்களுக்கு இவற்றைக் கூறினார்கள். அவர்கள் எந்த இரகசியங்களையும் என்னிடமிருந்து மறைக்கவில்லை.
15:19 அவர்கள் மட்டுமே அவர்களின் நாட்டில் வாழ்ந்தார்கள். கடந்து செல்லும்போது அந்நியர்கள் அங்கு இருக்கவில்லை. எனவே ஒருவரும் அவர்களுக்கு வேடிக்கையான கருத்துக்களைச் சொல்லவில்லை.
15:20 தீயவன் வாழ்க்கை முழுவதும் துன்புறுகிறான். கொடியவன் வரையறுக்கப்பட்ட அவன் ஆயுள் முழுவதும் துன்புறுகிறான்.
15:21 ஒவ்வொரு சத்தமும் அவனை அச்சுறுத்துகிறது, அவன் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணும்போது அவனது பகைவன் அவனைத் தாக்குவான்.
15:22 தீயவன் நம்பிக்கையற்றுக் கலங்குகிறான், மரண இருளிலிருந்து தப்புவதற்கு அவனுக்கு எந்த நம்பிக்கையுமில்லை. அவனைக் கொல்லக் காத்துக் கொண்டிருக்கும் வாள் ஒன்று எங்கோ உள்ளது.
15:23 அவன் அங்குமிங்கும் அலைந்துத் திரிகிறான், ஆனால் அவன் உடல் பருந்துகளுக்கு இரையாகும். அவனது மரணம் மிக அருகாமையிலுள்ளது என்பதை அவன் அறிகிறான்.
15:24 கவலையும் துன்பமும் அவனை அச்சுறுத்தும். அவனை அழிக்கத் தயாராயிருக்கிற அரசனைப் போன்று அவை அவனைத் தாக்கும்.
15:25 ஏனெனில், தீயவன் தேவனுக்குக் கீழ்ப்படியமறுக்கிறான். அவன் தனது கை முட்டியைத் தேவனுக்கு எதிராக உயர்த்தி, சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு எதிராகச் செயல்படுகின்றான். தோற்கடிக்க முயல்கிறான்.
15:26 தீயவன் மிகவும் அடம்பிடிப்பவன். அவன் கெட்டியான, வலிமையான கேடயத்தால் தேவனைத் தாக்க முயல்கிறான்.
15:27 அவன் செல்வந்தனும் கொழுத்தவனாகவும் இருப்பான்,
15:28 ஆனால் அவன் ஊர் அழிக்கப்படும், அவன் வீடு பாழாகும், அவன் வீடு வெறுமையாகும்,
15:29 தீயவன் பலகாலம் செல்வனாக இருக்கமாட்டான். அவன் செல்வம் நிலைக்காது. அவனது பயிர்கள் செழிப்பாக வளராது.
15:30 தீயவன் இருளிலிருந்து தப்பமாட்டான். நோயினால் மடியும் இலைகளையும் காற்றினால் பறக்கடிக்கப்படும் இலைகளையும் கொண்ட மரத்தைப் போலிருப்பான்.
15:31 தீயவன் தகுதியற்றவற்றை நம்பி தன்னை மூடனாக்கிக்கொள்ளக் கூடாது. ஏனெனில் அவன் எதையும் அடையமாட்டான்.
15:32 அவன் வாழ்க்கை முடியும் முன்பே, தீயவன் வயதாகி வாடிப்போவான். என்றும் பசுமையுற முடியாத, உலர்ந்த கிளையைப் போல அவன் இருப்பான்.
15:33 இன்னும் பழுக்காத திராட்சைக் கனிகளை இழக்கின்ற திராட்சைக் கொடியைப்போன்று தீயவன் இருப்பான். மொட்டுக்களை இழக்கும் ஒலிவ மரத்தைப் போன்று அம்மனிதன் இருப்பான்.
15:34 ஏனெனில் தேவனற்ற மனிதர்களுக்கு எதுவுமில்லை (ஒன்றுமில்லை). பணத்தை நேசிப்போரின் வீடுகள் நெருப்பால் அழியும்.
15:35 தீயனச் செய்து, தொல்லை விளைவிப்பதற்குத் தீயோர் வழிகளைத் திட்டமிடுகிறார்கள். ஜனங்களை ஏமாற்றும் வழிகளை அவர்கள் எப்போதும் திட்டமிடுகிறார்கள்” என்று கூறினான்.