Library · ta

Matthew 1

1:1 இயேசு கிறிஸ்துவின் குடும்ப வரலாறு பின்வருமாறு: தாவீதின் வழி வந்த வர் இயேசு. தாவீது ஆபிரகாமின் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1:2 ஆபிரகாமின் மகன் ஈசாக்கு. ஈசாக்கின் மகன் யாக்கோபு. யாக்கோபின் பிள்ளைகள் யூதாவும் அவன் சகோதரர்களும். 1:3 யூதாவின் மக்கள் பாரேசும் சாராவும் (அவர்களின் தாய் தாமார்.) பாரேசின் மகன் எஸ்ரோம். எஸ்ரோமின் மகன் ஆராம். 1:4 ஆராமின் மகன் அம்மினதாப். அம்மினதாபின் மகன் நகசோன். நகசோனின் மகன் சல்மோன். 1:5 சல்மோனின் மகன் போவாஸ். (போவாசின் தாய் ராகாப்.) போவாசின் மகன் ஓபேத். (ஓபேத்தின் தாய் ரூத்.) ஓபேத்தின் மகன் ஈசாய். 1:6 ஈசாயின் மகன் அரசனான தாவீது. தாவீதின் மகன் சாலமோன். (சாலமோனின் தாய் உரியாவின் மனைவி.) 1:7 சாலமோனின் மகன் ரெகொபெயாம். ரெகொபெயாமின் மகன் அபியா. அபியாவின் மகன் ஆசா. 1:8 ஆசாவின் மகன் யோசபாத். யோசபாத்தின் மகன் யோராம். யோராமின் மகன் உசியா. 1:9 உசியாவின் மகன் யோதாம். யோதாமின் மகன் ஆகாஸ். ஆகாஸின் மகன் எசேக்கியா. 1:10 எசேக்கியாவின் மகன் மனாசே. மனாசேயின் மகன் ஆமோன். ஆமோனின் மகன் யோசியா. 1:11 யோசியாவின் மக்கள் எகொனியாவும் அவன் சகோதரர்களும். (இக்காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்கு அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.) 1:12 அவர்கள் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்: எகொனியாவின் மகன் சலாத்தியேல். சலாத்தியேலின் மகன் சொரொபாபேல். 1:13 சொரொபாபேலின் மகன் அபியூத். அபியூத்தின் மகன் எலியாக்கீம். எலியாக்கீமின் மகன் ஆசோர். 1:14 ஆசோரின் மகன் சாதோக். சாதோக்கின் மகன் ஆகீம். ஆகீமின் மகன் எலியூத். 1:15 எலியூத்தின் மகன் எலியாசார். எலியாசாரின் மகன் மாத்தான். மாத்தானின் மகன் யாக்கோபு. 1:16 யாக்கோபின் மகன் யோசேப்பு. யோசேப்பின் மனைவி மரியாள். மரியாளின் மகன் இயேசு. கிறிஸ்து என அழைக்கப்பட்டவர் இயேசுவே. 1:17 எனவே ஆபிரகாம் முதல் தாவீதுவரை பதினான்கு தலைமுறைகள். தாவீது முதல் யூதர்கள் அடிமைப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டதுவரைக்கும் பதினான்கு தலைமுறைகள். யூதர்கள் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டதிலிருந்து கிறிஸ்து பிறக்கும்வரை பதினான்கு தலைமுறைகள். 1:18 இயேசு கிறிஸ்துவின் தாய் மரியாள். இயேசுவின் பிறப்பு இப்படி நிகழ்ந்தது. மரியாள் யோசேப்புக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அவர்கள் திருமணத்திற்கு முன்பே மரியாள் தான் கருவுற்றிருப்பதை அறிந்தாள். பரிசுத்த ஆவியின் வல்லமையால் மரியாள் கருவுற்றிருந்தாள். 1:19 மரியாளின் கணவனாகிய யோசேப்பு மிகவும் நல்லவன். மக்களின் முன்னிலையில் மரியாளை அவன் அவமதிக்க விரும்பவில்லை. எனவே யோசேப்பு மரியாளை இரகசியமாகத் தள்ளிவிட நினைத்தான். 1:20 யோசேப்பு இந்த சிந்தையாயிருக்கும்பொழுது, கர்த்தருடைய தூதன் யோசேப்பின் கனவில் தோன்றி, “தாவீதின் மகனாகிய யோசேப்பே, மரியாளை உன் மனைவியாக ஏற்றுக்கொள்ளத் தயங்காதே. அவள் கருவிலிருக்கும் குழந்தை பரிசுத்த ஆவியானவரால் உண்டானது. 1:21 அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள். அக்குழந்தைக்கு இயேசு எனப் பெயரிடு. அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி இரட்சிப்பார்” என்றான். 1:22 இவையெல்லாம் தீர்க்கதரிசியின் மூலமாகத் தேவன் சொன்னவைகளின் நிறைவேறுதல்களாக நடந்தன. தீர்க்கதரிசி சொன்னது இதுவே: 1:23 “கன்னிப் பெண் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள். அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள்.” (இம்மானுவேல் என்பதற்கு, “தேவன் நம்முடன் இருக்கிறார்” என்று பொருள்.) 1:24 விழித்தெழுந்த யோசேப்பு, கர்த்தருடைய தூதன் சொன்னபடியே மரியாளை மணந்தான். 1:25 ஆனால் மரியாள் தன் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவளை அறியவில்லை. யோசேப்பு அவருக்கு “இயேசு” எனப் பெயரிட்டான்.