Library · ta

Proverbs 31

31:1 இவை, லேமுவேல் அரசன் சொன்ன ஞான மொழிகள். இவற்றை அவனது தாய் அவனுக்குக் கற்பித்தாள். 31:2 ஜெபத்தின் மூலம் பெற்ற நீயே என் அன்பிற்குரிய மகன். 31:3 உனது வல்லமையைப் பெண்களிடம் இழக்காதே. பெண்கள் அரசர்களை அழித்திருக்கிறார்கள். எனவே உன்னை அவர்களிடத்தில் தராதே. 31:4 லேவமுவேலே, அரசர்கள் மதுவைக் குடிப்பது அறிவுள்ள செயல் அல்ல. ஆளுபவர்கள் மதுவை விரும்புவது அறிவுடையது அல்ல. 31:5 அவர்கள் மிகுதியாகக் குடித்துவிட்டு சட்டங்களை மறந்துவிடுவார்கள். பின் அவர்கள் ஏழை ஜனங்களின் உரிமைகளை எடுத்துவிடக்கூடும். 31:6 ஏழை ஜனங்களுக்கு மதுவைக் கொடு. திராட்சைரசத்தை துன்பப்படுகிற ஜனங்களுக்குக் கொடு. 31:7 பிறகு அவர்கள் அதனைக் குடித்துவிட்டு தாம் ஏழை என்பதை மறக்கட்டும். அவர்கள் குடித்துவிட்டு தம் எல்லா துன்பங்களையும் மறக்கட்டும். 31:8 ஒருவன் தனக்குத்தானே உதவிக்கொள்ள முடியாவிட்டால், நீ அவனுக்கு உதவவேண்டும். எவனால் பேசமுடியாதோ, அவனுக்காக பேசு. துன்பப்படுகிற அனைத்து ஜனங்களுக்கும் நீ உதவ வேண்டும். 31:9 சரியென்று தெரிந்தவற்றின் பக்கம் நில். நேர்மையாக நியாயம்தீர்த்துவிடு. ஏழை ஜனங்களின் உரிமையைக் காப்பாற்று. தேவையிலிருக்கும் ஜனங்களுக்கு உதவு. 31:10 “பரிபூரணமுள்ள மனைவியைக்” கண்டுபிடிப்பது கடினம். ஆனால் அவள் நகைகளைவிட அதிக விலைமதிப்புடையவள். 31:11 அவள் கணவன் அவளைச் சார்ந்திருப்பான். அவன் ஒருபோதும் ஏழையாகமாட்டான். 31:12 தன் வாழ்வு முழுவதும் அவள் தன் கணவனுக்கு நன்மையே செய்வாள். அவனுக்கு ஒருபோதும் துன்பம் உண்டாக்கமாட்டாள். 31:13 அவள் எப்பொழுதும் ஆட்டு மயிரையும் சணல்நூலையும் சேகரிப்பாள். தனது கைகளினாலேயே ஆடைகளை மகிழ்ச்சியோடு தயாரிப்பாள். 31:14 அவள் வெகுதூரத்திலிருந்து வரும் கப்பல்களைப் போன்றவள். எல்லா இடங்களிலிருந்தும் உணவு கொண்டுவருவாள். 31:15 அதிகாலையில் எழும்பி தன் குடும்பத்துக்கு உணவு சமைப்பாள். வேலைக்காரர்களுக்கு அவர்களுடைய பங்கைக் கொடுப்பாள். 31:16 அவள் நிலத்தைப் பார்த்து வாங்குவாள். அவள் பணத்தைச் சம்பாதித்துச் சேர்த்து திராட்சைக் கொடிகளை நடுவாள். 31:17 அவள் கடினமாக உழைப்பாள். அவள் தனது எல்லா வேலைகளையும் செய்யும் பலம் கொண்டவள். 31:18 தன் உழைப்பால் உருவான பொருட்களை விற்கும்போது எப்பொழுதும் அவள் லாபத்தை அடைவாள். அவள் இரவில் அதிக நேரம் வேலைச் செய்த பிறகே ஓய்வெடுக்கிறாள். 31:19 அவள் தனக்குத் தேவையான நூலைத் தானே தயாரிக்கிறாள். தனக்குத் தேவையான ஆடைகளைத் தானே நெய்கிறாள். 31:20 ஏழைகளுக்கு எப்போதும் அள்ளித் தருகிறாள். தேவையானவர்களுக்கு உதவி செய்கிறாள். 31:21 பனிக் காலத்தில் அவள் தன் குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டாள். ஏனென்றால் அனைவருக்கும் நல்ல வெப்பமான ஆடைகளை அவள் தந்துள்ளாள். 31:22 அவள் கம்பளங்களைச் செய்து படுக்கையில் விரிக்கிறாள். மிக அழகான புடவையை அணிகிறாள். 31:23 ஜனங்கள் அவளது கணவனை மதிக்கின்றனர். அவன் அந்நாட்டுத் தலைவர்களுள் ஒருவன். 31:24 அவள் ஒரு நல்ல வியாபாரி. அவள் ஆடைகளையும் கச்சைகளையும் தயாரிக்கிறாள். இவற்றை வியாபாரிகளிடம் விற்கிறாள். 31:25 அவள் போற்றப்படுவாள். ஜனங்கள் அவளை மதிக்கின்றனர். அவள் எதிர்காலத்தை நம்பிக்கையோடு நோக்குகிறாள். 31:26 அவள் ஞானத்தோடு பேசுகிறாள். ஜனங்கள் அன்போடும் கருணையோடும் இருக்கவேண்டும் என்று அவள் போதிக்கின்றாள். 31:27 அவள் ஒருபோதும் சோம்பேறியாக இருப்பதில்லை. தன் வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம் அக்கறையோடு பார்த்துக்கொள்கிறாள். 31:28 அவளது குழந்தைகள் அவளைப் பற்றி நல்லவற்றைக் கூறுவார்கள். அவளது கணவனும் அவளைப் பாராட்டிப் பேசுகிறான். 31:29 “எத்தனையோ நல்ல பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் நீதான் சிறந்தவள்” என்கிறான். 31:30 ஒரு பெண்ணின் தோற்றமும் அழகும் உன்னை ஏமாற்றலாம். ஆனால் கர்த்தருக்கு பயப்படுகிற பெண்ணே பாராட்டுக்குரியவள். 31:31 அவளுக்குப் பொருத்தமான பரிசைக் கொடு. எல்லோரும் அறியும் வகையில் அவளது செயல்களைப் பாராட்டு.