Psalms 118
118:1 கர்த்தரே தேவன் என்பதால் அவரை மகிமைப்படுத்துங்கள். அவரது உண்மை அன்பு என்றென்றைக்கும் தொடரும்!
118:2 இஸ்ரவேலே, இதைக்கூறு, “அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!”
118:3 ஆசாரியர்களே, இதைக் கூறுங்கள்: “அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!”
118:4 கர்த்தரைத் தொழுதுகொள்கிற ஜனங்களே, இதைக் கூறுங்கள்: “அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!”
118:5 நான் தொல்லையில் உழன்றேன். எனவே உதவிக்காகக் கர்த்தரைக் கூப்பிட்டேன். கர்த்தர் எனக்குப் பதிலளித்து என்னை விடுவித்தார்.
118:6 கர்த்தர் என்னோடிருப்பதால் நான் பயப்படமாட்டேன். என்னைத் துன்புறுத்த ஜனங்கள் எதையும் செய்யமுடியாது.
118:7 கர்த்தர் எனக்கு உதவி செய்கிறவர். என் பகைவர்கள் தோல்வியுறுவதை நான் காண்பேன்.
118:8 ஜனங்களை நம்புவதைக் காட்டிலும் கர்த்தரை நம்புவது நல்லது.
118:9 உங்கள் தலைவர்களை நம்புவதைக் காட்டிலும் கர்த்தரை நம்புவது நல்லது.
118:10 பல பகைவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள், ஆனால் கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடிப்பேன்.
118:11 பகைவர்கள் பலர் என்னை மீண்டும் மீண்டும் சூழ்ந்துகொண்டார்கள். கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடித்தேன்.
118:12 தேனீக்களின் கூட்டத்தைப்போல பகைவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள். ஆனால் வேகமாக எரியும் பதரைப்போல் அவர்கள் சீக்கிரமாக அழிந்துபோனார்கள். கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடித்தேன்.
118:13 என் பகைவர்கள் என்னைத் தாக்கி அழிக்க முயன்றனர். ஆனால் கர்த்தர் எனக்கு உதவினார்.
118:14 கர்த்தர் எனக்குப் பெலனும் வெற்றியின் பாடலுமாயிருக்கிறார். கர்த்தர் என்னைக் காப்பாற்றுகிறார்!
118:15 நல்லோரின் வீடுகளில் வெற்றியின் கொண்டாட்டத்தை நீங்கள் கேட்கமுடியும். கர்த்தர் தமது மிகுந்த வல்லமையை மீண்டும் காட்டினார்.
118:16 கர்த்தருடைய கரங்கள் வெற்றியால் உயர்த்தப்பட்டன. கர்த்தர் தமது மிகுந்த வல்லமையை மீண்டும் காட்டினார்.
118:17 நான் வாழ்வேன், மரிக்கமாட்டேன். கர்த்தர் செய்தவற்றை நான் கூறுவேன்.
118:18 கர்த்தர் என்னைத் தண்டித்தார், ஆனால் அவர் என்னை மரிக்கவிடமாட்டார்.
118:19 நல்ல வாயிற்கதவுகளே, எனக்காகத் திறவுங்கள், நான் உள்ளே வந்து கர்த்தரைத் தொழுதுகொள்வேன்.
118:20 அவை கர்த்தருடைய கதவுகள், நல்லோர் மட்டுமே அவற்றின் வழியாகச் செல்ல முடியும்.
118:21 கர்த்தாவே, என் ஜெபத்திற்குப் பதிலளித்ததற்காக நான் உமக்கு நன்றிக் கூறுவேன். நீர் என்னைக் காப்பாற்றியதற்காக நான் உமக்கு நன்றிக் கூறுவேன்.
118:22 கட்டிடம் கட்டுவோர் வேண்டாமெனத் தள்ளிய கல்லே மூலைக்கு தலைக்கல்லாயிற்று.
118:23 கர்த்தரே இதைச் செய்தார், அது அற்புதமானதென நாங்கள் நினைக்கிறோம்.
118:24 இந்நாள் கர்த்தர் செய்த நாள். இன்று நாம் களிப்போடு மகிழ்ச்சியாயிருப்போம்!
118:25 [ஜனங்கள்,] “கர்த்தரைத் துதிப்போம்! கர்த்தர் நம்மைக் காப்பாற்றினார்!
118:26 கர்த்தருடைய நாமத்தால் வருகிற மனிதனை வரவேற்றுக்கொள்ளுங்கள்” என்றார்கள். [ஆசாரியர்கள்,] “நாங்கள் உங்களைக் கர்த்தருடைய வீட்டிற்கு வரவேற்கிறோம்!
118:27 கர்த்தரே தேவன், அவர் எங்களை ஏற்றுக்கொள்கிறார். பலிக்காக ஆட்டுக்குட்டியைக் கட்டி, பலிபீடத்தின் கொம்புகளுக்கு சுமந்து செல்லுங்கள்” என்றார்கள்.
118:28 கர்த்தாவே, நீரே என் தேவன், நான் உமக்கு நன்றிக் கூறுகிறேன். நான் உம்மைத் துதிக்கிறேன்.
118:29 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள். அவரது உண்மை அன்பு என்றென்றைக்கும் நிலைக்கும்.