Library · ta

Psalms 33

33:1 நல்லோரே, கர்த்தருக்குள் களிப்படையுங்கள்! நல்ல நேர்மையான ஜனங்களே, அவரைத் துதியுங்கள்! 33:2 சுரமண்டலத்தை இசைத்துக் கர்த்தரைத் துதியுங்கள்! பத்து நரம்பு வீணையை இசைத்து கர்த்தரைப் பாடுங்கள். 33:3 புதுப்பாட்டை அவருக்குப் பாடுங்கள்! மகிழ்ச்சியான இராகத்தை இனிமையாய் மீட்டுங்கள். 33:4 தேவனுடைய வாக்கு உண்மையானது! அவர் செய்பவற்றை உறுதியாக நம்புங்கள்! 33:5 நன்மையையும் நேர்மையையும் தேவன் நேசிக்கிறார். கர்த்தர் பூமியை அவரது அன்பினால் நிப்பியுள்ளார். 33:6 கர்த்தர் கட்டளையிட, உலகம் உருவாயிற்று. தேவனுடைய வாயின் மூச்சு பூமியிலுள்ள அனைத்தையும் உருவாக்கிற்று. 33:7 கடலின் தண்ணீரை ஒரே இடத்தில் தேவன் ஒன்று திரட்டினார். அவர் சமுத்திரத்தை அதற்குரிய இடத்தில் வைக்கிறார். 33:8 பூமியிலுள்ளோர் யாவரும் கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கவேண்டும். உலகில் வாழும் ஜனங்கள் எல்லோரும் அவருக்கு அஞ்ச வேண்டும். 33:9 ஏனெனில் தேவன் கட்டளையிட, அக்காரியம் நிறைவேறுகிறது. அவர் “நில்!” எனக்கூற அக்காரியம் நின்றுவிடும். 33:10 எல்லோருடைய அறிவுரையையும் பயனற்றுப்போகச் செய்ய கர்த்தராலாகும். அவர்கள் திட்டங்களை கர்த்தர் அழிக்கக் கூடும். 33:11 கர்த்தருடைய அறிவுரை என்றென்றும் நல்லது. தலைமுறை தலைமுறைக்கும் அவர் திட்டங்கள் நன்மை தரும். 33:12 கர்த்தரை தேவனாக ஏற்றுக்கொண்ட ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் தனது சொந்த ஜனங்களாக அவர்களைத் தேர்ந்தெடுத்தார். 33:13 பரலோகத்திலிருந்து கர்த்தர் கீழே பார்த்து, எல்லா ஜனங்களையும் கண்டார். 33:14 அவரது உயர்ந்த சிங்காசனத்திலிருந்து பூமியில் வாழும் மனிதர்களையெல்லாம் பார்த்தார். 33:15 ஒவ்வொருவனின் மனதையும் தேவன் படைத்தார். ஒவ்வொருவனின் எண்ணத்தையும் தேவன் அறிகிறார். 33:16 அரசன் தனது சொந்த வல்லமையால் காப்பாற்றப்படுவதில்லை. ஒரு வீரன் தனது மிகுந்த பெலத்தால் காப்பாற்றப்படுவதில்லை. 33:17 போரில் குதிரைகள் உண்மையான வெற்றியைத் தருவதில்லை. அவற்றின் ஆற்றல் நம்மை தப்புவிக்க வகை செய்வதேயில்லை. 33:18 கர்த்தர் அவரைப் பின்பற்றுவோரை கவனித்துக் காப்பாற்றுகிறார். அவரது பேரன்பு அவரை தொழுதுகொள்வோரைக் காக்கும். 33:19 தேவன் அந்த ஜனங்களை மரணத்தினின்று காக்கிறார். அவர்கள் பசித்திருக்கையில் அவர் பெலனளிக்கிறார். 33:20 எனவே நாம் கர்த்தருக்காகக் காத்திருப்போம். அவரே நமக்கு உதவியும் கேடகமுமாயிருக்கிறார். 33:21 தேவன் என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறார். அவரது பரிசுத்த நாமத்தை நான் உண்மையாக நம்புகிறேன். 33:22 கர்த்தாவே, நாங்கள் உம்மை உண்மையாக தொழுதுகொள்கிறோம்! உமது பேரன்பை எங்களுக்குக் காண்பியும்.