2 Samuel 22
22:1 யெகோவா தாவீதை அவனுடைய எல்லா எதிரிகளின் கைக்கும், சவுலின் கைக்கும், விலக்கி விடுவித்தபோது, அவன் யெகோவாவுக்கு முன்பாகப் பாடின பாட்டு:
22:2 “யெகோவா என்னுடைய கன்மலையும், என்னுடைய கோட்டையும், என்னுடைய இரட்சகருமானவர்.
22:3 தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையும், என்னுடைய கேடகமும், என்னுடைய பாதுகாப்பின் கொம்பும், என்னுடைய உயர்ந்த அடைக்கலமும், என்னுடைய இருப்பிடமும், என்னுடைய இரட்சகருமானவர்; என்னைத் துன்பத்திற்கு விலக்கி இரட்சிக்கிறவர் அவரே.
22:4 துதிக்குக் காரணரான யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என்னுடைய எதிரிகளுக்கு விலக்கி இரட்சிக்கப்படுவேன்.
22:5 மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு, பயனற்ற வெள்ளப்பெருக்கு என்னைப் பயப்படுத்தினது.
22:6 பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.
22:7 எனக்கு உண்டான நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு, என்னுடைய தேவனை நோக்கிக் கூப்பிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என்னுடைய சத்தத்தைக் கேட்டார்; என்னுடைய கூப்பிடுதல் அவர் செவிகளில் விழுந்தது.
22:8 அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது; அவர் கோபங்கொண்டதால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.
22:9 அவர் நாசியிலிருந்து புகை வந்தது, அவர் வாயிலிருந்து ஒளிவீசும் அக்கினி புறப்பட்டது, அதனால் தீப்பற்றிக்கொண்டது.
22:10 வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.
22:11 கேருபீனின்மேல் ஏறி வேகமாகப் பறந்து சென்றார். காற்றின் இறக்கைகளின்மேல் காட்சியளித்தார்.
22:12 வானத்து மேகங்களில் கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.
22:13 அவருக்கு முன்பாக இருந்த மின்னலினால் நெருப்புத்தழலும் எரிந்தது.
22:14 யெகோவா வானத்திலிருந்து இடியைப்போல முழங்கி, சர்வவல்லமையுள்ள தேவன் தமது சத்தத்தைத் தொனிக்கச் செய்தார்.
22:15 அவர் அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்து, மின்னல்களை உபயோகித்து, அவர்களைச் சிதறடித்தார்.
22:16 யெகோவாவுடைய கடிந்துகொள்ளுதலினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறக்கப்பட்டு, பூமியின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.
22:17 உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, என்னைப் பிடித்து, வெள்ளப்பெருக்கில் இருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்.
22:18 என்னைவிட பெலவானாக இருந்த என்னுடைய எதிரிக்கும் என்னுடைய விரோதிகளுக்கும் என்னை விடுவித்தார்.
22:19 என்னுடைய ஆபத்து நாளிலே எனக்கு எதிராக வந்தார்கள்; யெகோவாவோ எனக்கு ஆதரவாக இருந்தார்.
22:20 என்மேல் அவர் பிரியமாக இருந்தபடியால், என்னைத் தப்புவித்தார்.
22:21 யெகோவா என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்கு பதில் அளித்தார்; என்னுடைய கைகளின் சுத்தத்திற்குத்தகுந்தபடி எனக்குச் சரிக்கட்டினார்.
22:22 யெகோவாவுடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன்; நான் என்னுடைய தேவனுக்குத் துரோகம் செய்ததில்லை.
22:23 அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய கட்டளைகளைவிட்டு விலகாமல்,
22:24 அவருக்கு முன்பாக மன உண்மையாக இருந்து, பாவத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
22:25 ஆகையால் யெகோவா என்னுடைய நீதிக்குத் தகுந்தபடியும், தம்முடைய கண்களுக்கு முன்பாக இருக்கிற என்னுடைய சுத்தத்திற்குத்தகுந்தபடியும் எனக்கு பலனளித்தார்.
22:26 தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்,
22:27 புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடு உள்ளவர்களுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
22:28 சிறுமைப்பட்ட மக்களை இரட்சிப்பீர்; பெருமையுள்ளவர்களைத் தாழ்த்த, உம்முடைய கண்கள் அவர்களுக்கு விரோதமாகத் திருப்பப்பட்டிருக்கிறது.
22:29 கர்த்தராகிய தேவரீர் என்னுடைய விளக்காக இருக்கிறீர்; யெகோவா என்னுடைய இருளை வெளிச்சமாக்குகிறவர்.
22:30 உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என்னுடைய தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.
22:31 தேவனுடைய வழி உத்தமமானது; யெகோவாவுடைய வசனம் சுத்தமானது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாக இருக்கிறார்.
22:32 யெகோவாவைத் தவிர தேவன் யார்? நம்முடைய தேவனையன்றி கன்மலையும் யார்?
22:33 தேவன் எனக்குப் பெலத்த அரணானவர்; அவர் என்னுடைய வழியைச் செவ்வைப்படுத்துகிறவர்.
22:34 அவர் என்னுடைய கால்களை மான்களுடைய கால்களைப்போல மாற்றி, உயர்ந்த மலைகளில் என்னை நிறுத்துகிறார்.
22:35 வெண்கல வில்லும் என்னுடைய கரங்களால் வளையும்படி, என்னுடைய கைகளை யுத்தத்திற்குப்.
22:36 உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய தயவு என்னைப் பெரியவனாக்கும்.
22:37 என்னுடைய கால்கள் வழுக்காதபடி நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.
22:38 என்னுடைய எதிரிகளைப் பின்தொடர்ந்து அவர்களை அழிப்பேன்; அவர்களை அழிக்கும்வரைக்கும் திரும்பமாட்டேன்.
22:39 அவர்கள் எழுந்திருக்கமுடியாதபடி என்னுடைய பாதங்களின்கீழ் விழுந்தார்கள்; அவர்களை முறியடித்து வெட்டினேன்.
22:40 யுத்தத்திற்கு நீர் என்னை பெலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என்கீழ் விழும்படிச் செய்தீர்.
22:41 நான் என்னுடைய விரோதியை அழிக்கும்படி, என்னுடைய எதிரிகளின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.
22:42 அவர்கள் நோக்கிப் பார்க்கிறார்கள், அவர்களை இரட்சிப்பவர்கள் ஒருவருமில்லை; யெகோவாவை நோக்கிப் பார்க்கிறார்கள், அவர்களுக்கு அவர் பதில் கொடுக்கிறதில்லை.
22:43 அவர்களை பூமியின் தூளாக இடித்து, தெருக்களின் சேற்றைப்போல அவர்களை மிதித்து சிதறச்செய்கிறேன்.
22:44 என்னுடைய மக்களின் சண்டைகளுக்கு நீர் என்னை விலக்கிவிட்டு, தேசங்களுக்கு என்னைத் தலைவனாக வைக்கிறீர்; நான் அறியாத மக்கள் என்னைப் பணிகிறார்கள்.
22:45 அந்நியர்கள் எனக்கு எதிராகப் பேசி அடங்கி, என்னுடைய சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
22:46 அந்நியர்கள் பயந்துபோய், தங்கள் கோட்டைகளிலிருந்து பயத்தோடு புறப்படுகிறார்கள்.
22:47 யெகோவா ஜீவனுள்ளவர்; என்னுடைய கன்மலையானவர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக; என்னுடைய இரட்சிப்பின் கன்மலையான தேவன் உயர்ந்திருப்பாராக.
22:48 அவர் எனக்காகப் பழிக்குப் பழி வாங்கி, மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.
22:49 அவரே என்னுடைய எதிரிகளுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள்மேல் என்னை உயர்த்திக் கொடுமையான மனிதனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.
22:50 இதனால் யெகோவாவே, தேசங்களுக்குள் உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்கு துதிப் பாடல்கள் பாடுவேன்.
22:51 தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்செய்த தாவீதுக்கும் அவனுடைய சந்ததிக்கும் என்றென்றும் கிருபை செய்கிறார்.”