Deuteronomy 14
14:1 “நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவின் பிள்ளைகள்; செத்தவனுக்காகக் காயப்படுத்திக்கொள்ளாமலும், உங்கள் கண்களுக்கு இடையிலே சவரம்செய்யாமலும் இருப்பீர்களாக.
14:2 நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமான மக்கள்; பூமியின் மீதெங்குமுள்ள எல்லா மக்களிலும் உங்களையே யெகோவா தமக்குச் சொந்தமான மக்களாயிருக்கத் தெரிந்துகொண்டார்.
14:3 “அருவருப்பான ஒன்றையும் சாப்பிடவேண்டாம்.
14:4 நீங்கள் சாப்பிடுவதற்கேற்ற மிருகங்களாவன: மாடும், செம்மறியாடும், வெள்ளாடும்,
14:5 மானும், வெளிமானும், கலைமானும், வரையாடும், புள்ளிமானும், சருகுமானும், மலை ஆடுகளுமே.
14:6 மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் சாப்பிடலாம்;
14:7 அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் சாப்பிடக்கூடாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முயலும், குழிமுயலுமே; அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.
14:8 பன்றியும் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தை சாப்பிடாமலும் இவைகளின் உடலைத்தொடாமலும் இருப்பீர்களாக.
14:9 “தண்ணீரிலிருக்கிற எல்லாவற்றிலும் துடுப்பும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் சாப்பிடலாம்.
14:10 துடுப்பும் செதிளும் இல்லாத யாதொன்றையும் சாப்பிடக்கூடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.
14:11 “சுத்தமான சகல பறவைகளையும் நீங்கள் சாப்பிடலாம்.
14:12 நீங்கள் சாப்பிடக்கூடாதவைகள் எவையென்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,
14:13 பைரியும், வல்லூறும், சகலவித பருந்தும்,
14:14 சகலவித காகங்களும்,
14:15 தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவிதமான டேகையும்,
14:16 ஆந்தையும், கோட்டானும், நாரையும்,
14:17 கூழக்கடாவும், குருகும், நீர்க்காகமும்,
14:18 கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வெளவாலுமே.
14:19 பறக்கிறவைகளில் ஊர்வன யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகள் சாப்பிடக்கூடாதவைகள்.
14:20 சுத்தமான பறவைகள் யாவையும் நீங்கள் சாப்பிடலாம்.
14:21 “தானாக இறந்துபோன எதையும் சாப்பிடவேண்டாம்; உங்கள் வாசல்களில் இருக்கிற அந்நியனுக்கு அதை சாப்பிடக் கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்த மக்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.
14:22 “நீ உன் தேவனாகிய யெகோவாவுக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படி, வருடந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து,
14:23 உன் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சைரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் சாப்பிடுவாயாக.
14:24 உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதிக்கும் காலத்தில், உன் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும்படித் தெரிந்துகொண்ட இடம் உனக்கு வெகுதூரமாக இருக்கிறதினால், வழிப்பிரயாணத்தின் வெகுதொலைவினிமித்தம், நீ அதைக் கொண்டுபோகமுடியாமல் இருக்குமானால்,
14:25 அதைப் பணமாக மாற்றி, பணமுடிப்பை உன் கையிலே எடுத்துக்கொண்டு, உன் தேவனாகிய யெகோவா தெரிந்துகொண்ட இடத்திற்குப் போய்,
14:26 அங்கே உன் விருப்பப்படி ஆடுமாடு, திராட்சைரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம் கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் சாப்பிட்டுச் சந்தோஷப்படுவீர்களாக.
14:27 லேவியனுக்கு உன்னுடன் பங்கும் சொத்தும் இல்லாததால் அவனைக் கைவிடாதே.
14:28 “மூன்றாம் வருடத்தின் முடிவிலே அந்தவருடத்தில் உனக்கு வந்த பலன் எல்லாவற்றிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் வாசல்களில் வைக்கக்கடவாய்.
14:29 லேவியனுக்கு உன்னுடன் பங்கும் சொத்தும் இல்லாததால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனும், திக்கற்றவனும், விதவையும் வந்து சாப்பிட்டுத் திருப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதிப்பார்.