Library · ta

Job 27

27:1 யோபு பின்னும் தன் பிரசங்கவாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது: 27:2 “என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் மூக்கிலும் இருக்கும்வரை, 27:3 என் உதடுகள் அநீதியைச் சொல்வதுமில்லை; என் நாக்கு பொய் பேசுவதுமில்லையென்று, 27:4 என் நியாயத்தைத் தள்ளிவிடுகிற தேவனும், என் ஆத்துமாவைக் கசப்பாக்குகிற சர்வவல்லமையுள்ள தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். 27:5 நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக; என் ஆவி பிரியும்வரை என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கமாட்டேன். 27:6 என் நீதியை உறுதியாகப் பிடித்திருக்கிறேன்; அதை நான் விட்டுவிடமாட்டேன்; நான் உயிரோடிருக்கும்வரை என் இருதயம் என்னை நிந்திக்காது. 27:7 என் பகைவன் ஆகாதவனைப்போலவும், எனக்கு விரோதமாக எழும்புகிறவன் அக்கிரமக்காரனைப்போலவும் இருப்பானாக. 27:8 அக்கிரமக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், தேவன் அவனுடைய ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது, அவனுடைய நம்பிக்கையினால் லாபம் என்ன? 27:9 ஆபத்து அவன்மேல் வரும்போது, தேவன் அவனுடைய கூப்பிடுதலைக் கேட்பாரோ? 27:10 அவன் சர்வவல்லமையுள்ள தேவன் மேல் மனமகிழ்ச்சியாயிருப்பானோ? அவன் எப்பொழுதும் தேவனைத் தொழுதுகொண்டிருப்பானோ? 27:11 தேவனுடைய கரத்தின் கிரியையைக் குறித்து உங்களுக்கு போதிப்பேன்; சர்வவல்லவரிடத்தில் இருக்கிறதை நான் மறைக்கமாட்டேன். 27:12 இதோ, நீங்கள் எல்லோரும் அதைக் கண்டிருந்தும், நீங்கள் இத்தனை வீண் எண்ணங்கொண்டிருக்கிறது என்ன? 27:13 பொல்லாத மனிதனுக்கு தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற பங்கும் என்னவெனில், 27:14 அவனுடைய மகன்கள் பெருகினால் பட்டயத்திற்கு இரையாவார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்புகள் ஆகாரத்தினால் திருப்தியாவதில்லை. 27:15 அவனுக்கு மீதியானவர்கள் செத்துப் புதைக்கப்படுவார்கள்; அவர்களுடைய விதவைகளும் புலம்புவதில்லை. 27:16 அவன் புழுதியைப்போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், மண்ணைப்போல ஆடைகளைச் சம்பாதித்தாலும், 27:17 அவன் சம்பாதித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு, குற்றமில்லாதவன் அவன் பணத்தைப் பகிர்ந்துகொள்ளுவான். 27:18 அவனுடைய வீடு சிலந்திப்பூச்சி கட்டின வீட்டைப்போலவும், காவல்காக்கிறவன் போட்ட குடிசையைப் போலாகும். 27:19 அவன் ஐசுவரியவானாகத் தூங்கிக் கிடந்து, ஒன்றும் இழந்துவிடாமல் போனாலும், அவன் தன் கண்களைத் திறக்கும்போது ஒன்றுமில்லாதிருக்கும். 27:20 வெள்ளத்தைப்போல பயங்கள் அவனை வாரிக்கொண்டுபோகும்; இரவுநேரத்தில் பெருங்காற்று அவனை அடித்துக்கொண்டுபோகும். 27:21 கிழக்குக்காற்று அவனைத் தூக்கிக்கொண்டுபோக, அவன் போய்விடுவான்; அது அவனை அவனுடைய இடத்திலிருந்து தள்ளிக்கொண்டுபோகும். 27:22 அவருடைய கைக்குத் தப்பியோடப் பார்ப்பான் ஆனால் அதை அவன்மேல் வரச்செய்து அவனைத் தப்பவிடாதிருப்பார்;. 27:23 மக்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி நகைத்து, அவனை அவனுடைய இடத்தை விட்டு விரட்டிவிடுவார்கள்.