Library · ta

Job 41

41:1 “லிவியாதானை தூண்டிலைக்கொண்டு பிடிக்கமுடியுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கமுடியுமோ? 41:2 அதின் மூக்கை நார்க்கயிறு போட்டுக் கட்டமுடியுமோ? குறட்டினால் அதின் தாடையை உருவக் குத்தமுடியுமோ? 41:3 அது உன்னைப் பார்த்து அநேக விண்ணப்பம் செய்யுமோ? உன்னை நோக்கி ஆசைவார்த்தைகளைச் சொல்லுமோ? 41:4 அது உன்னுடன் உடன்படிக்கை செய்யுமோ? அதை எல்லா நாட்களும் அடிமைப்படுத்துவாயோ? 41:5 ஒரு குருவியுடன் விளையாடுகிறதுபோல், நீ அதனுடன் விளையாடி, அதை நீ உன் பெண்களுக்கு அருகில் கட்டிவைப்பாயோ? 41:6 மீனவர்கள் அதைப் பிடிக்க முயற்சி செய்து, அதை வியாபாரிகளுக்குப் பங்கிடுவார்களோ? 41:7 நீ அதின் தோலை அநேக அம்புகளினாலும், அதின் தலையை எறிவல்லையங்களினாலும் எறிவாயோ? 41:8 அதின்மேல் உன் கையைப்போடு, யுத்தத்தை நினைத்துக்கொள்; இனி அப்படிச் செய்யத் துணியமாட்டாய். 41:9 இதோ, அதைப் பிடிக்கலாம் என்று நம்பினவன் மோசம்போய், அதைப் பார்த்தவுடனே விழுவான் அல்லவோ? 41:10 அதை எழுப்பக்கூடிய தைரியவான் இல்லாதிருக்க, எனக்கு முன்பாக நிற்பவன் யார்? 41:11 தனக்குப் பதில்கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள். 41:12 அதின் உறுப்புகளும், அதின் வீரியமும், அதின் உடல் இசைவின் அழகும் இன்னதென்று நான் சொல்லாமல் மறைக்கமாட்டேன். 41:13 அது மூடியிருக்கிற அதின் போர்வையைக் எடுக்கக்கூடியவன் யார்? அதின் இரண்டு தாடைகளின் நடுவே கடிவாளம் போடத்தக்கவன் யார்? 41:14 அதின் முகத்தின் கதவைத் திறக்கக்கூடியவன் யார்? சுற்றிலுமிருக்கிற அதின் பற்கள் பயங்கரமானவைகள். 41:15 முத்திரைப் பதிப்புபோல அழுத்தங்கொண்டு அடர்த்தியாயிருக்கிற அதின் கேடகங்களின் அமைப்பு மகா சிறப்பாயிருக்கிறது. 41:16 அவைகள் நடுவே காற்றும் நுழையமுடியாமல் நெருக்கமாக அவைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது. 41:17 அவைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு இணைபிரியாமல் பிடித்துக்கொண்டிருக்கிறது. 41:18 அது தும்மும்போது ஒளி வீசும், அதின் கண்கள் சூரியஉதயத்தின் புருவங்களைப்போல இருக்கிறது. 41:19 அதின் வாயிலிருந்து எரிகிற பந்தங்கள் புறப்பட்டு, நெருப்புப்பொறிகள் பறக்கும். 41:20 கொதிக்கிற சட்டியிலும் கொப்பரையிலும் இருந்து புறப்படுகிறதுபோல, அதின் மூக்கிலிருந்து புகை புறப்படும். 41:21 அதின் சுவாசம் கரிகளைக் கொளுத்தும், அதின் வாயிலிருந்து தணல் புறப்படும். 41:22 அதின் கழுத்திலே பெலன் குடிகொண்டிருக்கும்; பயங்கரம் அதற்குமுன் நடனமாடும். 41:23 அதின் உடல் அடுக்குகள், அசையாத கெட்டியாக ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும். 41:24 அதின் நெஞ்சு கல்லைப்போலவும், எந்திரத்தின் அடிக்கல்லைப்போலவும் கெட்டியாயிருக்கும். 41:25 அது எழும்பும்போது பலசாலிகள் பயத்தினால் மயங்கித் திகைப்பார்கள். 41:26 அதைத் தாக்குகிறவனுடைய பட்டயம், ஈட்டி, வல்லையம், கவசம், ஒன்றும் அதற்குமுன் நிற்காது. 41:27 அது இரும்பை வைக்கோலாகவும், வெண்கலத்தை உளுத்த மரமாகவும் நினைக்கும். 41:28 அம்பு அதைத் துரத்தாது; கவண்கற்கள் அதற்குத் துரும்பாகும். 41:29 அது பெருந்தடிகளை வைக்கோல்களாக எண்ணி, ஈட்டியின் அசைவை இகழும். 41:30 அதின் கீழாகக் கூர்மையான கற்கள் கிடந்தாலும், அது சேற்றின்மேல் ஓடுகிறதுபோல கூர்மையான அவைகளின்மேலும் ஓடும். 41:31 அது ஆழத்தை உலைப்பானையைப்போல் பொங்கச்செய்து, கடலைத் தைலம்போலக் கலக்கிவிடும். 41:32 அது தனக்குப் பின்னாகப் பாதையை மின்னச்செய்யும்; ஆழமானது வெளுப்பான நரையைப்போல் தோன்றும். 41:33 பூமியின்மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை; அது பயப்படும்விதமாக உண்டாக்கப்பட்டது. 41:34 அது மேட்டிமையானதையெல்லாம் அற்பமாக நினைக்கிறது; அது அகங்காரமுள்ள உயிரினங்களுக்கெல்லாம் ராஜாவாக இருக்கிறது” என்றார்.