Library · ta

Psalms 18

18:1 இசைத் தலைவனுக்கு யெகோவாவுடைய ஊழியனாகிய தாவீது எழுதிய பாடல். சவுலிடமிருந்தும் பிற பகைவர்களிடமிருந்தும் யெகோவா அவனைத் தப்புவித்தபோது எழுதப்பட்ட பாடல். என் பெலனாகிய யெகோவாவே, உம்மில் அன்புகூருவேன். 18:2 யெகோவா என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் கோபுரமும், என் கேடகமும், என் இரட்சிப்பின் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாக இருக்கிறார். 18:3 துதிக்குப் பாத்திரராகிய யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என்னுடைய எதிரிகளுக்கு நீங்கலாகிப் பாதுகாக்கப்படுவேன். 18:4 மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டன; மாபெரும் அலைகள் என்னைப் பயப்படுத்தினது. 18:5 பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன. 18:6 எனக்கு உண்டான நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன், என் தேவனை நோக்கி சத்தமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என்னுடைய சத்தத்தைக் கேட்டார், என்னுடைய கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் காதுகளில் விழுந்தது. 18:7 அவர் கோபங்கொண்டபடியால் பூமி அசைந்து அதிர்ந்தது, மலைகளின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தன. 18:8 அவர் மூக்கிலிருந்து புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து எரியும் நெருப்பு புறப்பட்டது; அதனால் தழல் மூண்டது. 18:9 வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது. 18:10 கேருபீன்மேல் ஏறி வேகமாகச் சென்றார்; காற்றின் இறக்கைகளைக் கொண்டு பறந்தார். 18:11 இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; தண்ணீர் நிறைந்த கறுத்த மழைமேகங்களையும் தம்மை சூழ்ந்திருக்கும் கூடாரமாக்கினார். 18:12 அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள், கல்மழையும் நெருப்புத்தழலையும் பொழிந்தன. 18:13 யெகோவா வானங்களிலே குமுறினார், உன்னதமான தேவனானவர் தமது சத்தத்தைத் தொனிக்கச்செய்தார்; கல்மழையும் நெருப்புத்தழலும் பொழிந்தன. 18:14 தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களைப் பயன்படுத்தி, அவர்களைக் கலங்கச்செய்தார். 18:15 அப்பொழுது யெகோவாவே, உம்முடைய கண்டிப்பினாலும் உம்முடைய மூக்கின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் ஆழங்கள் தென்பட்டன, உலகின் அஸ்திபாரங்கள் வெளிப்பட்டன. 18:16 உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரிலிருந்து என்னைத் தூக்கிவிட்டார். 18:17 என்னிலும் பலவான்களாக இருந்த என்னுடைய பலத்த எதிரிகளுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார். 18:18 என்னுடைய ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; யெகோவாவோ எனக்கு ஆதரவாக இருந்தார். 18:19 என்மேல் அவர் பிரியமாக இருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார். 18:20 யெகோவா என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்குப் பதிலளித்தார்; என்னுடைய கைகளின் சுத்தத்திற்குத்தகுந்தபடி எனக்குச் சரிக்கட்டினார். 18:21 ஏனெனில் யெகோவாவுடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனைவிட்டுத் துன்மார்க்கமாக விலகினதில்லை. 18:22 அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக இருக்கின்றன; அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை. 18:23 உன்னத தேவனுக்கு முன்பாக நான் உத்தமனாக இருந்து, என்னுடைய பாவத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன். 18:24 ஆகையால் யெகோவா என்னுடைய நீதிக்குத் தகுந்ததாகவும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என்னுடைய கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார். 18:25 தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்; 18:26 புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர். 18:27 தேவனே நீர் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவீர்; மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர். 18:28 தேவனே நீர் என்னுடைய விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய யெகோவா என்னுடைய இருளை வெளிச்சமாக்குவார். 18:29 உம்மாலே ஒரு சேனையை என் கால்களால் மிதிப்பேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன். 18:30 தேவனுடைய வழி உத்தமமானது; யெகோவாவுடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாக இருக்கிறார். 18:31 யெகோவாவை தவிர தேவன் யார்? நம்முடைய தேவன் இல்லாமல் கன்மலையும் யார்? 18:32 என்னைப் பலத்தால் இடைகட்டி, என்னுடைய வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே. 18:33 அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, உயர்வான இடங்களில் என்னை நிறுத்துகிறார். 18:34 வெண்கல வில்லும் என்னுடைய கைகளால் வளையும்படி, என்னுடைய கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார். 18:35 உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகை என்னைத் தாங்குகிறது; உம்முடைய கருணை என்னைப் பெரியவனாக்கும். 18:36 என்னுடைய கால்கள் வழுக்காதபடி, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர். 18:37 என்னுடைய எதிரிகளைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடித்தேன்; அவர்களை அழிக்கும் வரைக்கும் நான் திரும்பவில்லை. 18:38 அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி அவர்களை வெட்டினேன். 18:39 போருக்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கச்செய்தீர். 18:40 நான் என்னுடைய எதிரியை அழிக்கும்படி, என்னுடைய எதிரிகளின் கழுத்தை எனக்கு ஒப்புக்கொடுத்தீர். 18:41 அவர்கள் கூப்பிடுகிறார்கள், அவர்களைக் காப்பாற்றுகிறவர்கள் ஒருவருமில்லை; யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுக்கு அவர் பதிலளிக்கிறதில்லை. 18:42 நான் அவர்களைக் காற்றின்திசையிலே பறக்கிற தூசியாக இடித்து, தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன். 18:43 மக்களின் கலகங்களுக்கு நீர் என்னைத் தப்புவித்தீர், தேசங்களுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர்; நான் அறியாத மக்கள் எனக்கு சேவைசெய்கிறார்கள். 18:44 அவர்கள் என்னுடைய சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்; அந்நியரும் என்னிடம் கூனிக்குறுகுகிறார்கள். 18:45 அந்நியர் மனமடிந்து, தங்களுடைய அரண்களிலிருந்து தத்தளிப்பாகப் புறப்படுகிறார்கள். 18:46 யெகோவா உயிருள்ளவர்; என்னுடைய கன்மலையானவர் துதிக்கப்படுவாராக; என்னுடைய இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக. 18:47 அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்குகிற தேவன். அவர் மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவர். 18:48 அவரே என்னுடைய எதிரிகளுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாக எழும்புகிறவர்களைவிட என்னை நீர் உயர்த்தி, கொடுமையான மனிதனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர். 18:49 இதற்காக யெகோவாவே, தேசங்களுக்குள்ளே உம்மைத் துதித்து, உம்முடைய பெயருக்கு பாட்டு பாடுவேன். 18:50 தாம் ஏற்படுத்தின இராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்செய்த தாவீதிற்கும் அவனுடைய சந்ததிக்கும் என்றென்றும் கிருபை செய்கிறார்.