Library · ta

Psalms 33

33:1 நீதிமான்களே, யெகோவாவுக்குள் சந்தோஷமாக இருங்கள்; துதிசெய்வது நேர்மையானவர்களுக்குத் தகும். 33:2 சுரமண்டலத்தினால் யெகோவாவை துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரை புகழ்ந்து பாடுங்கள். 33:3 அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்த சத்தத்தோடு வாத்தியங்களை நேர்த்தியாக வாசியுங்கள். 33:4 யெகோவாவுடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது. 33:5 அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி யெகோவாவுடைய கருணையினால் நிறைந்திருக்கிறது. 33:6 யெகோவாவுடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் அனைத்தும் உண்டாக்கப்பட்டது. 33:7 அவர் கடலின் தண்ணீர்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான தண்ணீர்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார். 33:8 பூமியெல்லாம் யெகோவாவுக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிமக்களெல்லாம் அவருக்கு பயந்திருப்பதாக. 33:9 அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். 33:10 யெகோவா தேசங்களின் ஆலோசனையை வீணடித்து, மக்களுடைய நினைவுகளை பயனற்றதாக ஆக்குகிறார். 33:11 யெகோவாவுடைய ஆலோசனை நிரந்தரகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும். 33:12 யெகோவாவை தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட தேசமும், அவர் தமக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்ட மக்களும் பாக்கியமுள்ளது. 33:13 யெகோவா வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனிதர்களையும் காண்கிறார். 33:14 தாம் தங்கியிருக்கிற இடத்திலிருந்து பூமியின் குடிமக்கள் எல்லோர்மேலும் கண்ணோக்கமாக இருக்கிறார். 33:15 அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார். 33:16 எந்த ராஜாவும் தன்னுடைய ராணுவத்தின் மிகுதியால் காப்பாற்றப்படமாட்டான்; போர்வீரனும் தன்னுடைய பலத்தின் மிகுதியால் தப்பமாட்டான். 33:17 காப்பாற்றுவதற்கு குதிரை வீண்; அது தன்னுடைய மிகுந்த பலத்தால் காப்பாற்றாது. 33:18 தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்; 33:19 பஞ்சத்தில் அவர்களை உயிரோடு காக்கவும், யெகோவாவுடைய கண் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கிறது. 33:20 நம்முடைய ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர். 33:21 அவருடைய பரிசுத்த பெயரை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் சந்தோசமாக இருக்கும். 33:22 யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.