Library · ta

Psalms 91

91:1 உன்னதமான தேவனுடைய மறைவில் இருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். 91:2 நான் யெகோவாவை நோக்கி: நீர் என்னுடைய அடைக்கலம், என்னுடைய கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். 91:3 அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார். 91:4 அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் இறக்கைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்கு பெரிய கவசமும், கேடகமுமாகும். 91:5 இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்பிற்கும், 91:6 இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் வியாதிகளுக்கும் பயப்படாமல் இருப்பாய். 91:7 உன்னுடைய பக்கத்தில் ஆயிரம்பேரும், உன்னுடைய வலதுபுறத்தில் பத்தாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. 91:8 உன் கண்களால்மட்டும் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கர்களுக்கு வரும் பலனைக் காண்பாய். 91:9 எனக்கு அடைக்கலமாக இருக்கிற உன்னதமான தேவனாகிய யெகோவாவை உனக்கு அடைக்கலமாகக் கொண்டாய். 91:10 ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன்னுடைய கூடாரத்தை அணுகாது. 91:11 உன்னுடைய வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். 91:12 உன்னுடைய பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள். 91:13 சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய். 91:14 அவன் என்னிடத்தில் வாஞ்சையாக இருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என்னுடைய பெயரை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். 91:15 அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்திரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடு இருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன். 91:16 நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என்னுடைய இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.