Library · ta

Job 20

20:1 அப்பொழுது நாகமாத்தியனான சோப்பார் மறுமொழியாக: 20:2 இதற்காக பதில் கொடுக்க என் சிந்தனைகள் என்னை ஏவுகிறதினால் நான் விரைவாகச் சொல்லுகிறேன். 20:3 நிந்தித்தேன் என்று நான் கடிந்து கொள்ளப்பட்டதைக் கேட்டேன்; ஆனாலும் உணர்வினால் என் ஆவி மறுமொழி சொல்ல என்னை ஏவுகிறது. 20:4 துன்மார்க்கனின் கெம்பீரம் குறுகினது என்பதையும், மாயக்காரனின் சந்தோஷம் ஒரு நிமிடம்மாத்திரம் நிற்கும் என்பதையும், 20:5 அவர் மனிதனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ? 20:6 அவனுடைய மேன்மை வானபரியந்தம் உயர்ந்தாலும், அவனுடைய தலை மேகங்கள்வரை எட்டினாலும், 20:7 அவன் தன் மலத்தைப்போல என்றைக்கும் அழிந்துபோவான்; அவனைக் கண்டவர்கள், அவன் எங்கே? என்பார்கள். 20:8 அவன் ஒரு கனவைப்போல் பறந்துபோய்க் காணப்படாதவனாவான்; இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் பறக்கடிக்கப்படுவான். 20:9 அவனைப் பார்த்த கண் இனி அவனைப் பார்ப்பதில்லை; அவன் இருந்த இடம் இனி அவனைக் காண்பதில்லை. 20:10 அவனுடைய பிள்ளைகள் எளிமையானவர்களின் சகாயத்தைத் தேடுவார்கள்; அவன் பறித்ததை அவன் கைகள் திரும்பக் கொடுக்கவேண்டியதாகும். 20:11 அவனுடைய எலும்புகள் அவனுடைய இளவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, அவனுடன் மண்ணிலே படுத்துக்கொள்ளும். 20:12 பொல்லாப்பு அவனுடைய வாயிலே இனிமையாயிருப்பதால், அவன் அதைத் தன் நாவின்கீழ் அடக்கி, 20:13 அதை விடாமல் அடக்கி, தன் வாய்க்குள்ளே வைத்துக்கொண்டிருந்தாலும், 20:14 அவனுடைய ஆகாரம் அவன் குடல்களில் மாறி, அவனுக்குள் விரியன்பாம்புகளின் விஷமாகப்போகும். 20:15 அவன் விழுங்கின செல்வத்தைக் கக்குவான்; தேவன் அதை அவனுடைய வயிற்றிலிருந்து வெளியே தள்ளிவிடுவார். 20:16 அவன் விரியன்பாம்புகளின் விஷத்தை உறிஞ்சுவான்; விரியனின் நாக்கு அவனைக் கொல்லும். 20:17 தேனும் நெய்யும் ஓடும் வாய்க்கால்களையும் ஆறுகளையும் அவன் காண்பதில்லை. 20:18 தான் பிரயாசப்பட்டுத் தேடினதை அவன் விழுங்காமல் திரும்பக் கொடுப்பான்; அவன் திரும்பக் கொடுக்கிறது அவன் செல்வத்திற்குச் சரியாயிருக்கும்; அவன் மகிழ்ச்சியில்லாதிருப்பான். 20:19 அவன் ஒடுக்கி, ஏழைகளைக் கைவிட்டு, தான் கட்டாத வீட்டை அபகரித்தபடியினாலும், 20:20 தன் வயிறு திருப்தி அடையாமல் இருந்ததினாலும், அவன் விரும்பின காரியங்களில் அவனுக்கு ஒன்றும் இருப்பதில்லை. 20:21 அவனுடைய ஆகாரத்தில் ஒன்றும் மீதியாவதில்லை; ஆகையால் அவனுடைய செல்வம் நிலைநிற்பதில்லை. 20:22 அவன் வேண்டுமென்கிற பரிபூரணம் அவனுக்கு வந்தபின், அவனுக்கு வேதனை உண்டாகும்; சிறுமைப்படுகிற ஒவ்வொருவருடைய கையும் அவன்மேல் வரும். 20:23 தன் வயிற்றை நிரப்பத்தக்கது இன்னும் அவனுக்கு இருந்தாலும், அவர் அவன்மேல் தமது கோபத்தின் கடுமையை வரவழைத்து, அவன் சாப்பிடும்போது, அதை அவன்மேல் வரச்செய்வார். 20:24 இரும்பு ஆயுதத்திற்கு அவன் தப்பியோடினாலும் வெண்கல அம்பு அவனை உருவ எய்யும். 20:25 உருவின பட்டயம் அவன் சரீரத்தையும், மின்னுகிற அம்பு அவன் ஈரலையும் உருவிப்போகும்; பயங்கரங்கள் அவன்மேல் வரும். 20:26 அவன் ஒளிக்கும் இடங்களில் காரிருள் அடங்கியிருக்கும்; அணையாத நெருப்பு அவனை எரிக்கும்; அவன் கூடாரத்தில் மீதியாயிருக்கிறவன் பாடு அநுபவிப்பான். 20:27 வானங்கள் அவனுடைய குற்றத்தை வெளிப்படுத்தி, பூமி அவனுக்கு விரோதமாக எழும்பும். 20:28 அவனுடைய வீட்டின் சம்பத்துப் போய்விடும்; அவருடைய கோபத்தின் நாளிலே அவைகள் கரைந்து போகும். 20:29 இதுவே தேவனால் துன்மார்க்கனுக்குக் கிடைக்கும் பங்கும், அவனுடைய செய்கைக்கு தேவனால் அவனுக்கு வரும் பங்காகும் என்றான்.