Library · ta

Exodus 13

13:1 கர்த்தர் மோசேயை நோக்கி: 13:2 இஸ்ரவேலர்களுக்குள் மனிதர்களிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பம்திறந்து பிறக்கிற, முதற்பேறான அனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது என்றார். 13:3 அப்பொழுது மோசே மக்களை நோக்கி: நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்; கர்த்தர் பலத்த கையினால் உங்களை இந்த இடத்திலிருந்து புறப்படச்செய்தார்; ஆகையால், நீங்கள் புளித்த அப்பம் சாப்பிடவேண்டாம். 13:4 ஆபீப் மாதத்தின் இந்த நாளிலே நீங்கள் புறப்பட்டீர்கள். 13:5 ஆகையால், கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று உன்னுடைய முன்னோர்களுக்கு ஆணையிட்டதும், பாலும் தேனும் ஓடுகிறதுமான தேசமாகிய கானானியர்கள், ஏத்தியர்கள், எமோரியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்பவர்களுடைய தேசத்திற்கு உன்னை வரச்செய்யும் காலத்தில், நீ இந்த மாதத்திலே இந்த ஆராதனையை செய்வாயாக. 13:6 புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாட்கள்வரை சாப்பிடவேண்டும்; ஏழாம்நாளிலே கர்த்தருக்குப் பண்டிகை அனுசரிக்கப்படவேண்டும். 13:7 அந்த ஏழுநாட்களும் புளிப்பில்லா அப்பம் சாப்பிடவேண்டும்; புளிப்புள்ள அப்பம் உன்னிடத்திலே காணப்படவேண்டாம்; உன்னுடைய எல்லைக்குள் எங்கும் புளித்தமாவும் உன்னிடத்தில் காணப்படவேண்டாம். 13:8 அந்த நாளில் நீ உன்னுடைய பிள்ளைகளை நோக்கி: நான் எகிப்திலிருந்து புறப்படும்போது, கர்த்தர் எனக்குச் செய்ததற்காக இப்படி நடப்பிக்கப்படுகிறது என்று சொல். 13:9 கர்த்தரின் நியாயப்பிரமாணம் உன்னுடைய வாயிலிருக்கும்படி, இது உன்னுடைய கையிலே ஒரு அடையாளமாகவும் உன்னுடைய கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருப்பதாக; பலத்த கையினால் கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; 13:10 ஆகையால், நீ வருடந்தோறும் குறித்த காலத்தில் இந்த நியாயத்தை அனுசரித்து வரவும். 13:11 மேலும், கர்த்தர் உனக்கும் உன்னுடைய முன்னோர்களுக்கும் ஆணையிட்டபடியே, உன்னைக் கானானியரின் தேசத்திலே வரச்செய்து, அதை உனக்குக் கொடுக்கும்போது, 13:12 கர்ப்பந்திறந்து பிறக்கும் அனைத்தையும், உனக்கு இருக்கும் மிருகஜீவன்களின் முதல்பிறப்பு அனைத்தையும், கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பாயாக; அவைகளிலுள்ள ஆண்கள் கர்த்தருடையவைகள். 13:13 கழுதையின் முதற்பிறப்பையெல்லாம் ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; மீட்காவிட்டால், அதின் கழுத்தை உடைத்துப்போடு. உன்னுடைய பிள்ளைகளில் முதற்பேறான எல்லோரையும் மீட்டுக்கொள். 13:14 பிற்காலத்தில் உன்னுடைய மகன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்; நீ அவனை நோக்கி: கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படச்செய்தார். 13:15 எங்களை விடாதபடி, பார்வோன் கடினப்பட்டிருக்கும்போது, கர்த்தர் எகிப்து தேசத்தில் மனிதரின் முதல்பிள்ளைகள்முதல் மிருகஜீவன்களின் முதற்பிறப்புகள்வரையும் உண்டாயிருந்த முதற்பிறப்புகள் யாவையும் கொன்றுபோட்டார்; ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆண்களையெல்லாம் நான் கர்த்தருக்குப் பலியிட்டு, என்னுடைய பிள்ளைகளில் முதற்பிறப்புகள் அனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன். 13:16 கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படச்செய்வதற்கு, இது உன்னுடைய கையில் அடையாளமாகவும், உன்னுடைய கண்களின் நடுவே ஞாபகக்குறியாகவும் இருப்பதாக என்று சொல்வாயாக என்றான். 13:17 பார்வோன் மக்களைப் போகவிட்டபின்பு: மக்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்திற்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தர்களின் தேசத்தின் வழியாகப் போவது அருகாமையாக இருந்தாலும், தேவன் அவர்களை அந்த வழியாக நடத்தாமல், 13:18 செங்கடலின் வனாந்திர வழியாக மக்களைச் சுற்றிப் போகச்செய்தார். இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து அணியணியாகப் புறப்பட்டுப்போனார்கள். 13:19 மோசே தன்னோடு யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு போனான். தேவன் நிச்சயமாக உங்களைச் சந்திப்பார்; அப்பொழுது உங்களுடன் என்னுடைய எலும்புகளை இந்த இடத்திலிருந்து கொண்டுபோங்கள் என்று யோசேப்பு சொல்லி, இஸ்ரவேலர்களை உறுதியாக ஆணையிடும்படிச் செய்திருந்தான். 13:20 அவர்கள் சுக்கோத்திலிருந்து பயணப்பட்டு, வனாந்திரத்தின் ஓரமாக ஏத்தாமிலே முகாமிட்டார்கள். 13:21 அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படி, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகத்தூணிலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சம் காட்ட அக்கினித்தூணிலும் அவர்களுக்கு முன்பு சென்றார். 13:22 பகலிலே மேகத்தூணிலும், இரவிலே அக்கினித்தூணிலும் மக்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை.