Library · ta

Job 28

28:1 வெள்ளிக்குச் சுரங்கமும் தங்கத்திற்கு சுத்திகரிக்கும் இடமும் உண்டு. 28:2 இரும்பு பூமியிலிருந்து எடுக்கப்படுகிறது, செம்பு கற்களில் உருக்கி எடுக்கப்படுகிறது. 28:3 மனிதன் இருளுக்கு முடிவுண்டாக்கி, உலோக மூலப்பொருட்களைக் காரிருளிலும் ஆழமான குழிகளிலும் தேடுகிறான். 28:4 அவன் மிகத் தொலைவில் சுரங்க வாசலை வெட்டுகிறான், காலடிகளே படாத, மனித நடமாட்டம் இல்லாத ஆழத்தில் ஊசலாடித் தொங்குகிறான். 28:5 உணவு கொடுக்கும் பூமி அதின் கீழ்ப்பகுதியிலுள்ளவை நெருப்பினால் உருமாறுகிறது. 28:6 அதின் பாறைகளிலிருந்து நீலக்கற்கள் விளைகின்றன, அதின் தூசி தங்கத்துகள்களை உடையதாயிருக்கின்றது. 28:7 இரைதேடும் ஒரு பறவைகூட அந்த மறைவான பாதையை அறியாது; பருந்தின் கண்ணும் அதைக் காண்பதில்லை. 28:8 கொடிய மிருகங்கள் அங்கு அடியெடுத்து வைப்பதுமில்லை; சிங்கம் அங்கு திரிவதுமில்லை. 28:9 மனிதனின் கையே கடினமான பாறையைத் தாக்கி, மலைகளின் அடிவாரங்களை வேரோடே புரட்டுகிறான். 28:10 அவன் கன்மலையில் வாய்க்கால்களை வெட்டுகிறான்; அவனுடைய கண்கள் அதின் பொக்கிஷங்களையெல்லாம் காண்கின்றன. 28:11 ஆறுகளின் உற்பத்தியிடங்களை ஆராய்ந்து, மறைந்திருக்கும் பொருட்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறான். 28:12 ஆனால் ஞானம் காணப்படுவது எங்கே? விளங்கும் ஆற்றல் குடியிருப்பது எங்கே? 28:13 மனிதன் அதின் மதிப்பைப் புரிந்துகொள்வதில்லை; உயிர்வாழ்வோரின் நாட்டில் அதைக் காணமுடியாது. 28:14 “அது என்னிடம் இல்லை” என ஆழம் சொல்கிறது; “அது என்னுடன் இல்லை” என கடலும் கூறுகிறது. 28:15 சுத்தத் தங்கத்தைக் கொடுத்து, அதை வாங்கமுடியாது, அதின் மதிப்பை வெள்ளியால் நிறுக்கவும் முடியாது. 28:16 ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல. 28:17 பொன்னும் பளிங்கும் அதற்கு இணையாகாது, தங்க நகைகளைக் கொடுத்தும் அதைப் பெற்றுக்கொள்ள முடியாது. 28:18 பவளத்தையும் மரகதத்தையும் ஒரு பொருட்டாக எண்ண முடியாது; ஞானத்தின் விலை மாணிக்கக் கற்களைவிட உயர்வானது. 28:19 எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல; சுத்தப் பொன்னால் அதை வாங்கமுடியாது. 28:20 அப்படியானால் ஞானம் எங்கிருந்து வருகிறது? விளங்கும் ஆற்றல் எங்கே குடியிருக்கிறது? 28:21 அது உயிருள்ள அனைவருக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்குங்கூட மறைக்கப்பட்டும் இருக்கிறது. 28:22 “இதைப் பற்றிய வதந்தி மட்டுமே எங்கள் காதுகளுக்கு எட்டின” என்று அழிவும் சாவும் சொல்கின்றன. 28:23 அதின் வழி இறைவனுக்குத் தெரியும்; அதின் குடியிருப்பை அவர் மட்டுமே அறிவார். 28:24 ஏனெனில் பூமியின் கடைமுனைகளை அவர் பார்க்கிறார், வானத்தின் கீழுள்ள ஒவ்வொன்றையும் அவர் காண்கிறார். 28:25 அவர் காற்றின் பலத்தை நிலைநாட்டி, தண்ணீர்களை அளந்தபோதும், 28:26 மழைக்கு ஒரு நியமத்தை விதித்தபோதும், இடிமுழக்கத்தோடு கூடிய மின்னலுக்கு ஒரு பாதையை வகுத்தபோதும், 28:27 அவர் ஞானத்தைப் பார்த்து மதிப்பிட்டார்; அதை உறுதிப்படுத்தி சோதித்தறிந்தார். 28:28 இறைவன் மனிதனிடம், “யெகோவாவுக்கு பயந்து நடத்தலே ஞானம், தீமைக்கு விலகி நடப்பதே விளங்கும் ஆற்றல்” என்று சொன்னார்.