Library · ta

Job 34

34:1 தொடர்ந்து எலிகூ சொன்னதாவது: 34:2 “ஞானமுள்ள மனிதர்களே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; கல்விமான்களே, எனக்குச் செவிகொடுங்கள். 34:3 நாவு உணவைச் சுவைப்பதுபோல், காது வார்த்தைகளை நிதானிக்கிறது. 34:4 வாருங்கள், சரியானது எது என்பதை நாம் நிதானிப்போம்; எது நல்லது என்பதை நாம் ஒன்றாய்க் கற்றுக்கொள்வோம். 34:5 “யோபுவோ, ‘நான் குற்றமற்றவன், இறைவன் எனக்கு நீதிவழங்க மறுக்கிறார். 34:6 நான் சரியானவனாய் இருந்தபோதிலும், பொய்யனாகவே எண்ணப்படுகிறேன். குற்றமற்றவனாய் இருந்தபோதிலும், அவருடைய அம்பு ஆறாதப் புண்ணை உண்டுபண்ணுகிறது’ என்கிறார். 34:7 தண்ணீர் பருகுவதைப்போல் கேலிசெய்யும் யோபுவைப் போன்றவர் உண்டோ? 34:8 அவர் தீமை செய்கிறவர்களின் கூட்டத்தில் சேர்ந்து, கொடிய மனிதர்களுடன் வாசம்பண்ணுகிறார். 34:9 ஏனெனில் அவர், ‘இறைவனுக்குப் பிரியமாக நடக்க முயற்சிப்பதினால் ஒரு பயனும் இல்லை’ என்கிறாரே. 34:10 “புத்திமான்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். தீமை இறைனுக்கும், அநீதி எல்லாம் வல்லவருக்கும் தூரமாயிருக்கிறது. 34:11 மனிதருடைய செய்கைக்குத் தக்கதாக அவர் பலனளிக்கிறார். அவர்களுடைய நடக்கைக்குத் தகுந்ததை அவர் அவர்களுக்கு வரப்பண்ணுகிறார். 34:12 இறைவன் அநியாயம் செய்யாமலும், எல்லாம் வல்லவர் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது உண்மையே. 34:13 பூமியின் மேலாக மனிதரை நியமித்தவர் யார்? முழு உலகத்தையும் அவர்களுடைய பொறுப்பில் கொடுத்தவர் யார்? 34:14 அவர் தமது ஆவியையும் தமது சுவாசத்தையும் திரும்ப எடுத்துக்கொள்ள நோக்கங்கொண்டால், 34:15 எல்லா மனுக்குலமும் ஒன்றாய் அழிந்துபோகும்; மனிதர்களும் மண்ணுக்குத் திரும்புவார்கள். 34:16 “உமக்கு விளங்கும் ஆற்றல் இருந்தால் இதைக் கேளும், நான் சொல்வதற்குச் செவிகொடும். 34:17 நீதியை வெறுப்பவன் ஆள முடியுமோ? நீர் நீதியும் வல்லமையுமுள்ளவரை குற்றப்படுத்துவீரோ? 34:18 அரசர்களைப் பார்த்து, ‘ஒன்றுக்கும் உதவாதவர்கள்,’ என்றும், உயர்குடி மக்களைப் பார்த்து, ‘நீங்கள் கொடியவர்கள்’ என்றும் சொல்வார். 34:19 அவர் இளவரசர்களுக்குப் பாரபட்சம் காட்டுவதில்லை, ஏழையைவிட செல்வந்தனுக்குத் தயவு காட்டுவதுமில்லை; ஏனெனில், அவர்கள் எல்லோருமே அவருடைய கரங்களின் படைப்பல்லவா? 34:20 அவர்கள் நள்ளிரவில் ஒரு நொடியில் சாகிறார்கள்; அசைக்கப்பட்டு இல்லாமல் போகிறார்கள்; பலவான்களும் மனித கரமல்லாத ஒரு கரத்தினால் அகற்றப்படுகிறார்கள். 34:21 “இறைவனுடைய கண்கள் மனிதருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார். 34:22 தீமை செய்கிறவர்கள் தங்களை ஒளித்துக்கொள்வதற்கு இருளான இடமோ, காரிருளோ இல்லை. 34:23 இறைவன் மனிதரை மேலும் சோதிக்கமாட்டார்; அவர்கள் அவர்முன் வழக்காடவேண்டிய அவசியமும் இல்லை. 34:24 இறைவன் விசாரணையின்றியே வல்லமையுள்ளவர்களைச் சிதறடித்து, அவர்களுக்குரிய இடத்தில் வேறு மனிதரை அமர்த்துகிறார். 34:25 ஏனெனில், அவர் அவர்களுடைய செயல்களைக் குறித்துக்கொள்கிறார்; இரவில் அவர்களைக் கவிழ்க்கிறார், அவர்கள் நசுங்கிப் போகிறார்கள். 34:26 அவர் அவர்களின் கொடுமையின் நிமித்தம், எல்லோரும் காணும்படியாக அவர்களைத் தண்டிக்கிறார். 34:27 ஏனெனில் அவர்கள் இறைவனைப் பின்பற்றுவதிலிருந்து விலகி, அவருடைய வழிகளை மதியாமல் போகிறார்கள். 34:28 அவர்கள் ஏழைகளின் அழுகுரலை இறைவனுக்கு சேரவைத்தனர்; அவர் அவர்களின் அழுகையைக் கேட்டார். 34:29 மவுனமாய் இருக்கிறவரைக் குற்றப்படுத்தாதே; நாட்டிற்கும், மனிதனுக்கும், அவர் தமது முகத்தை மறைத்தால் அவரைப் பார்ப்பவன் யார்? 34:30 அதினால் இறைவனற்றவர்கள் ஆட்சிசெய்யாமலும், மக்கள் கண்ணியில் சிக்காமலும் தடுக்கிறார். 34:31 “யாராவது இறைவனிடம் இப்படிக் கேட்பதுண்டா: ‘நான் குற்றவாளி, இனிப் பாவம் செய்யமாட்டேன். 34:32 நான் காணாதவற்றை எனக்குப் போதியும், நான் அக்கிரமம் செய்திருந்தால் இனிமேல் அதைச் செய்யமாட்டேன்.’ 34:33 நீர் மனந்திரும்ப மறுக்கும்போது உமது மன எண்ணப்படி இறைவன் வெகுமதி கொடுக்கவேண்டுமோ? நானல்ல, நீரே தீர்மானித்துக்கொள்ளும்; நீர் அறிந்ததை எனக்குச் சொல்லும். 34:34 “நான் சொல்வதைக் கேட்ட விளங்கும் ஆற்றலுள்ளவர்களும் ஞானமுள்ளவர்களும் என்னிடம், 34:35 ‘யோபு அறிவில்லாமல் பேசுகிறார்; அவருடைய வார்த்தைகள் ஞானமில்லாதவை என்றும், 34:36 யோபு கொடியவரைப்போல் பேசியதற்காக முற்றிலும் சோதிக்கப்பட வேண்டும். 34:37 தம்முடைய பாவத்துடன் மீறுதலையும் சேர்த்துக் கொள்கிறார்; அவர் எங்கள் மத்தியில் ஏளனமாய்க் கைகொட்டி, இறைவனுக்கு விரோதமான வார்த்தைகளைப் பேசினார்’ என்று என்னிடம் சொல்கிறார்கள்.”