Library · ta

Job 36

36:1 தொடர்ந்து எலிகூ சொன்னதாவது: 36:2 “சற்று என்னிடம் பொறுமையாயிரும், இறைவன் சார்பாய் நான் சொல்ல வேண்டியவற்றை நான் உமக்குக் காண்பிப்பேன். 36:3 நான் அதிக தூரத்திலிருந்து என் அறிவைப் பெறுகிறேன்; என்னைப் படைத்தவருக்கே நீதி உரியது என்றும் நிரூபிப்பேன். 36:4 என் வார்த்தைகள் பொய்யானவையல்ல என்று உறுதியாய்க் கூறுகிறேன்; பூரண அறிவுள்ள நான் உம்மோடு பேசுகிறேன். 36:5 “இறைவன் வல்லமையுள்ளவர், ஆகிலும் அவர் ஒருவரையும் தள்ளிவிடமாட்டார்; வல்லமையுள்ள அவர் தமது நோக்கத்தில் உறுதியுள்ளவர். 36:6 அவர் கொடியவர்களை உயிர்வாழ விடுவதில்லை; துன்பப்படுகிறவர்களுக்கோ அவர்களுடைய உரிமைகளை வழங்குகிறார். 36:7 அவர் நேர்மையானவர்கள் மேலிருந்து தன் கண்களை அகற்றுவதில்லை; அவர் அவர்களை அரசர்களோடு அரியணையில் அமர்த்தி, அவர்களை என்றைக்கும் மேன்மைப்படுத்துகிறார். 36:8 ஆனால் மனிதர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு, வேதனையின் கயிற்றினால் இறுக்கப்பட்டிருக்கும்போது, 36:9 அவர்கள் செய்தவற்றை இறைவன் அவர்களுக்குக் கூறுவார். அதாவது அவர்கள் அகந்தையாய் பாவம் செய்ததை அவர் சொல்வார். 36:10 அவர் அவர்கள் சீர்திருந்துதலுக்குச் செவிகொடுத்து, தங்கள் தீமையிலிருந்து மனந்திரும்ப கட்டளையிடுகிறார். 36:11 அவர்கள் கீழ்ப்படிந்து அவருக்குப் பணிசெய்தால், அவர்கள் தங்கள் மீதியான நாட்களைச் செல்வத்திலும், மீதியான வருஷங்களை மனநிறைவிலும் கழிப்பார்கள். 36:12 அடங்கி அவருக்குப் பணிசெய்யாவிட்டால், வாளினால் அழிந்து, அறிவில்லாமலே சாவார்கள். 36:13 “உள்ளத்தில் இறைவனற்றவர்கள் கோபத்தை வளர்த்துக்கொள்கிறார்கள்; அவர் அவர்களுக்கு விலங்கிடும்போதும் அவர்கள் உதவிக்காக அழுவதில்லை. 36:14 அவர்கள் கோவில்களிலிருக்கும் ஆண் விபசாரக்காரர் மத்தியில் தங்கள் இளமையிலேயே சாவார்கள். 36:15 ஆனாலும் துன்பப்படுகிறவர்களை அவர் துன்பத்திலிருந்து விடுவித்து, அவர்களுடைய வேதனையில் அவர் அவர்களோடு பேசுகிறார். 36:16 “யோபுவே, இறைவன் உன்னைக் கட்டுப்பாடற்ற விசாலமான இடத்திற்கு கொண்டுவரவும், சுவையான உணவுகள் நிறைந்த பந்தியில் அமர்த்தவும், வேதனையின் பிடியிலிருந்து உன்னை விடுவிக்கவும் முயற்சிக்கிறார். 36:17 கொடியவர்கள்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேறக் காத்திருக்கிறீர்; நியாயத்தீர்ப்பும் நீதியுமே உம்மை ஆதரிக்கும். 36:18 செல்வங்களினால் ஒருவரும் உம்மைக் கவராதபடி எச்சரிக்கையாயிரும்; பெரிதான இலஞ்சம் உம்மை வழிவிலகிச் செல்ல இடங்கொடாதே. 36:19 உமது செல்வங்களும் வல்லமையான எல்லா முயற்சிகளும் நீர் துன்பத்தில் அகப்படாதபடி உம்மைத் தாங்குமோ? 36:20 மக்களைத் தங்கள் வீடுகளிலிருந்து இழுத்துச் செல்வதற்காக நீர் இரவை வாஞ்சிக்காதிரும். 36:21 தீமைசெய்யத் திரும்பாதபடி எச்சரிக்கையாயிரும்; ஏனெனில், நீர் துன்பத்தைவிட தீமையை தெரிந்துகொண்டீர். 36:22 “இறைவன் தமது வல்லமையில் உயர்த்தப்பட்டிருக்கிறார். அவரைப்போல் போதிக்கிறவர் யார்? 36:23 இறைவனுக்கு அவருடைய வழியைக் குறித்துக் கொடுத்தது யார்? அல்லது ‘நீர் அக்கிரமம் செய்தீர்’ என்று சொல்லியது யார்? 36:24 மனிதர்கள் புகழ்ந்து பாடும் பாடல்களால் அவருடைய செயலை மேன்மைப்படுத்த நினைவுகூரும். 36:25 அவர் செய்வதை எல்லா மனிதரும் காண்கிறார்கள்; அதைத் தூரத்திலிருந்து உற்றுப் பார்க்கிறார்கள்; 36:26 நமது விளங்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்ட இறைவன்! அவருடைய வருடங்களும் எண்ணிட முடியாதவை. 36:27 “அவர் நீர்த்துளிகளை மேலே இழுத்து, அவற்றை ஆறுகளில் மழையாகப் பெய்யச் செய்கிறார். 36:28 மேகங்கள் மழையைப் பொழிகின்றன, அது மனிதர்மேல் தாரையாய்ப் பொழிகிறது. 36:29 அவர் மேகங்களை எப்படி பரவுகிறார் என்றும், எப்படி முழங்குகிறார் என்றும் யாரால் விளங்கிக்கொள்ள முடியும்? 36:30 அவர் தமது மின்னலைத் தம்மைச் சுற்றிலும் சிதறப்பண்ணி, கடலின் ஆழங்களை எப்படி மூடுகிறார் என்று பாரும். 36:31 இவ்விதமாகவே அவர் மக்களை ஆளுகைசெய்து, ஏராளமான உணவையும் கொடுக்கிறார். 36:32 அவர் தம் கரங்களை மின்னலினால் நிரப்பி, குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும்படி அதற்குக் கட்டளையிடுகிறார். 36:33 அவருடைய இடிமுழக்கம் வரப்போகும் புயலை அறிவிக்கிறது; அதின் வருகையை மந்தைகள்கூடத் தெரிவிக்கும்.