Library · ta

Psalms 132

132:1 யெகோவாவே, தாவீதையும் அவன் சகித்துக்கொண்ட எல்லாத் துன்பங்களையும் நினைவிற்கொள்ளும். 132:2 அவன் யெகோவாவுக்குச் சத்தியத்தை ஆணையிட்டு, யாக்கோபின் வல்லவருக்கு இப்படி ஒரு நேர்த்திக்கடன் செய்தான்: 132:3 “நான் என் வீட்டிற்குள் நுழையமாட்டேன், என் படுக்கைக்குப் போகவுமாட்டேன். 132:4 என் கண்களுக்கு நித்திரையையும், கண்ணிமைகளுக்கு தூக்கத்தையும் வரவிடமாட்டேன். 132:5 யெகோவாவுக்காக ஒரு இடத்தை, யாக்கோபின் வல்லவராகிய இறைவனுக்காக ஒரு வாழ்விடத்தைக் கட்டும்வரை இவற்றைச் செய்யமாட்டேன்.” 132:6 எப்பிராத்தாவிலே நாம் அதைக் கேள்விப்பட்டு, யாரீமின் வயல்வெளிகளில் நாம் அதைக் கண்டோம்: 132:7 “நாம் அவருடைய வாழ்விடத்திற்குப் போவோம், அவருடைய பாதபடியில் வழிபடுவோம். 132:8 ‘யெகோவாவே, எழுந்து உமது வாழ்விடத்திற்கு வாரும், உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் வாரும். 132:9 உம்முடைய ஆசாரியர்கள் நீதியை உடுத்திக்கொள்ளட்டும்; உமது பரிசுத்தவான்கள் மகிழ்ச்சியுடன் பாடட்டும்.’ ” 132:10 உமது அடியவனாகிய தாவீதின் நிமித்தம், நீர் அபிஷேகித்தவரை புறக்கணியாதேயும். 132:11 யெகோவா தாவீதுக்கு ஒரு சத்தியத்தை ஆணையிட்டார்; அது நிச்சயமான வாக்கு; அவர் இதை நிறைவேற்றாமல் விடமாட்டார்: “உன்னுடைய சொந்த சந்ததியில் ஒருவனை நான் உன் சிங்காசனத்தில் அமர்த்துவேன். 132:12 உன் மகன்கள் என் உடன்படிக்கையையும், நான் அவர்களுக்குப் போதிக்கிற நியமங்களையும் கைக்கொள்வார்களானால், அவர்களுடைய மகன்களும் என்றென்றும் உன் சிங்காசனத்தில் அமருவார்கள்.” 132:13 யெகோவா சீயோனைத் தெரிந்துகொண்டார்; அவர் அதையே தமது இருப்பிடமாக்க விரும்பியிருக்கிறார்: 132:14 “இது என்றென்றைக்கும் நான் தங்குமிடம்; இவ்விடத்தை நான் விரும்பியிருக்கிறபடியால், இங்கேயே நான் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பேன். 132:15 நான் சீயோனை ஏராளமான உணவுப் பொருட்களால் ஆசீர்வதிப்பேன்; அங்குள்ள ஏழைகளை உணவினால் திருப்தியாக்குவேன். 132:16 அங்குள்ள ஆசாரியருக்கு நான் இரட்சிப்பை உடுத்துவேன்; அங்குள்ள பரிசுத்தவான்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் பாடுவார்கள். 132:17 “இங்கே தாவீதுக்காக, ஒரு வல்லமையுள்ள அரசனை வளரப்பண்ணுவேன்; நான் அபிஷேகம் செய்தவனுக்காக, ஒரு விளக்கையும் ஏற்படுத்துவேன். 132:18 அவனுடைய பகைவரை வெட்கத்தால் உடுத்துவேன்; ஆனால் அவனுடைய தலையின் கிரீடமோ பிரகாசிக்கும்.”