Matthew 1
1:1 ஆபிரகாமின் மகனான, தாவீதின் மகன் இயேசு கிறிஸ்துவின் முன்னோர்களின் பெயர் அட்டவணை:
1:2 ஆபிரகாம், ஈசாக்கின் தகப்பன். ஈசாக்கு, யாக்கோபின் தகப்பன். யாக்கோபு, யூதாவுக்கும் அவன் சகோதரர்களுக்கும் தகப்பன்.
1:3 யூதா, பாரேஸ் மற்றும் சாராவின் தகப்பன். அவர்களின் தாய் தாமார். பாரேஸ், எஸ்ரோமின் தகப்பன். எஸ்ரோம், ஆராமின் தகப்பன்.
1:4 ஆராம், அம்மினதாபின் தகப்பன். அம்மினதாப், நகசோனின் தகப்பன். நகசோன், சல்மோனின் தகப்பன்.
1:5 சல்மோன், போவாஸின் தகப்பன். போவாஸினுடைய தாய் ராகாப். போவாஸ், ஓபேத்தின் தகப்பன். ஓபேத்தினுடைய தாய் ரூத், ஓபேத், ஈசாயின் தகப்பன்.
1:6 ஈசாய், தாவீது அரசனின் தகப்பன். தாவீது, சாலொமோனின் தகப்பன். சாலொமோனுடைய தாய் உரியாவின் மனைவியாயிருந்தவள்.
1:7 சாலொமோன், ரெகொபெயாமின் தகப்பன். ரெகொபெயாம், அபியாவின் தகப்பன். அபியா, ஆஷாவின் தகப்பன்.
1:8 ஆஷா, யோசபாத்தின் தகப்பன். யோசபாத், யோராமின் தகப்பன். யோராம், உசியாவின் தகப்பன்.
1:9 உசியா, யோதாமின் தகப்பன். யோதாம், ஆகாஸின் தகப்பன். ஆகாஸ், எசேக்கியாவின் தகப்பன்.
1:10 எசேக்கியா, மனாசேயின் தகப்பன். மனாசே, ஆமோனின் தகப்பன். ஆமோன், யோசியாவின் தகப்பன்.
1:11 யோசியா, எகோனியாவுக்கும் அவன் சகோதரர்களுக்கும் தகப்பன். அக்காலத்தில் யூதர்கள் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டார்கள்.
1:12 பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்ட பின்: எகோனியா, சலாத்தியேலின் தகப்பன். சலாத்தியேல், சொரொபாபேலின் தகப்பன்.
1:13 சொரொபாபேல், அபியூத்தின் தகப்பன். அபியூத், எலியாக்கீமின் தகப்பன். எலியாக்கீம், ஆசோரின் தகப்பன்.
1:14 ஆசோர், சாதோக்கின் தகப்பன். சாதோக், ஆகீமின் தகப்பன். ஆகீம், எலியூத்தின் தகப்பன்.
1:15 எலியூத், எலியேசரின் தகப்பன். எலியேசர், மாத்தானின் தகப்பன். மாத்தான், யாக்கோபின் தகப்பன்.
1:16 யாக்கோபு, யோசேப்பின் தகப்பன். யோசேப்பு, மரியாளின் கணவன். மரியாளிடம் கிறிஸ்து எனப்படுகின்ற இயேசு பிறந்தார்.
1:17 இவ்வாறு ஆபிரகாமிலிருந்து தாவீது வரை பதினான்கு தலைமுறைகளும், தாவீதிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தப்படும் வரை பதினான்கு தலைமுறைகளும், நாடு கடத்தப்பட்டதிலிருந்து கிறிஸ்து வரையிலும், பதினான்கு தலைமுறைகளும் இருந்தன.
1:18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பு இவ்வாறு நிகழ்ந்தது: அவரது தாய் மரியாள், யோசேப்பைத் திருமணம் செய்வதற்கென நிச்சயிக்கப்பட்டிருந்தாள். ஆனால் அவர்கள் ஒன்றுசேரும் முன்பே, அவள் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து உருவான ஒரு குழந்தையைச் சுமக்கிறாள் எனத் தெரியவந்தது.
1:19 அவளது கணவன் யோசேப்பு, நீதிமானாயிருந்தான். எனவே அவளை மக்கள் முன் பகிரங்கமாக அவமானப்படுத்த விரும்பாமல், திருமண ஒப்பந்தத்தை இரகசியமாக ரத்துச் செய்துவிட நினைத்தான்.
1:20 அவன் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தபோது, கர்த்தரின் தூதன் அவனுக்குக் கனவில் தோன்றி, “தாவீதின் மகனே, யோசேப்பே, நீ மரியாளை உனது மனைவியாக வீட்டுக்கு அழைத்துச் செல்வதைக் குறித்துப் பயப்படாதே; ஏனெனில் அவள் பரிசுத்த ஆவியானவரினால் உருவான ஒரு குழந்தையைச் சுமக்கிறாள்.
1:21 அவள் ஒரு மகனைப் பெறுவாள்; நீ அவருக்கு ‘இயேசு’ என்று பெயரிட வேண்டும். ஏனெனில் அவர் தமது மக்களை அவர்களது பாவங்களிலிருந்து இரட்சிப்பார்” என்றான்.
1:22 கர்த்தர் தமது இறைவாக்கினன் மூலமாய் சொல்லியிருந்தது நிறைவேறவே இவை நடந்தன:
1:23 “ஒரு கன்னிப்பெண் கருவுற்று ஒரு மகனைப் பெறுவாள். அவரை இம்மானுவேல் என அழைப்பார்கள்.” இம்மானுவேல் என்பதன் அர்த்தம், “இறைவன் நம்முடன் இருக்கின்றார்” என்பதே.
1:24 யோசேப்பு தூக்கம் கலைந்து எழுந்ததும், கர்த்தரின் தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே, மரியாளைத் தனது மனைவியாக வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
1:25 ஆனால் அவள் ஒரு மகனைப் பெற்றெடுக்கும் வரை, யோசேப்பு அவளுடன் தாம்பத்திய உறவுகொள்ளவில்லை. யோசேப்பு அவருக்கு இயேசு எனப் பெயரிட்டான்.