Library · ta

Matthew 10

10:1 இயேசு தமது பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடத்திற்கு அழைத்து, தீய ஆவிகளை விரட்டவும், எல்லாவிதமான நோய்களையும், வியாதிகளையும் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். 10:2 அந்த பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்களாவன: முதலாவது, பேதுரு என அழைக்கப்பட்ட சீமோன், அவனுடைய சகோதரன் அந்திரேயா; செபெதேயுவின் மகன் யாக்கோபு, அவனுடைய சகோதரன் யோவான்; 10:3 பிலிப்பு, பர்த்தொலொமேயு; தோமா, வரி சேகரிப்பவனாகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு; 10:4 கானானியனாகிய சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் ஸ்காரியோத்து ஆகியோர். 10:5 இயேசு இந்த பன்னிரண்டு பேருக்கும் இந்த அறிவுறுத்தல்களைச் சொல்லி அனுப்பினார்: “நீங்கள் யூதரல்லாதவர்களிடம் போக வேண்டாம், சமாரியர்களின் எந்த பட்டணத்திற்குள்ளும் செல்ல வேண்டாம். 10:6 வழி தவறிப் போன செம்மறியாடுகளான இஸ்ரயேலர்களிடம் மட்டும் போங்கள். 10:7 நீங்கள் போகும்போது, ‘பரலோக அரசு சமீபித்து வருகின்றது’ என்ற செய்தியைப் பிரசங்கியுங்கள். 10:8 நோயுற்றோரை குணமாக்குங்கள், இறந்தவர்களை எழுப்புங்கள், தொழுநோயாளர்களைச் சுத்தப்படுத்துங்கள், பேய்களை விரட்டுங்கள். நீங்கள் விலை கொடுத்து வாங்கவில்லை, எனவே விலையின்றிக் கொடுங்கள். 10:9 “நீங்கள் போகும்போது, எவ்விதமான தங்கம், வெள்ளி, செப்புக் காசுகளை உங்கள் இடுப்பில் உள்ள பணப் பையில் கொண்டுபோக வேண்டாம்; 10:10 பயணப் பையையோ, மாற்று உடையையோ, காலணிகளையோ, கைத்தடியையோ கொண்டுபோக வேண்டாம்; ஏனெனில் வேலையாளுக்கு உரியது அவனுக்குக் கொடுக்கப்படும். 10:11 நீங்கள் எந்தவொரு பட்டணத்திற்குள்ளோ கிராமத்திற்குள்ளோ சென்றாலும், அங்கே தகுதியுள்ள ஒருவனைத் தேடி, நீங்கள் அவ்விடத்தைவிட்டுப் புறப்படும் வரை அவனுடைய வீட்டிலேயே தங்கியிருங்கள். 10:12 அந்த வீட்டிற்குள் செல்லும்போது, உங்கள் வாழ்த்துதலை அறிவியுங்கள். 10:13 அந்த வீடு தகுதியுள்ளதாக இருந்தால், உங்கள் சமாதானம் அவ்வீட்டில் தங்கட்டும்; இல்லையானால், உங்கள் சமாதானம் உங்களிடம் திரும்பி வரும். 10:14 எவராவது உங்களை வரவேற்காமலோ, உங்கள் வார்த்தையைக் கேட்பதற்கு மனதற்றவர்களாகவோ இருந்தால், நீங்கள் அந்த வீட்டையோ, பட்டணத்தையோவிட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களிலுள்ள தூசியை உதறி விடுங்கள். 10:15 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், நியாயத்தீர்ப்பு நாளில், அந்தப் பட்டணத்திற்குக் கிடைக்கப் போவதைவிட சோதோம், கொமோரா பட்டணங்களுக்குக் கிடைக்கும் தண்டனையானது தாங்கக் கூடியதாக இருக்கும். 10:16 “செம்மறியாடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புவது போல நான் உங்களை அனுப்புகிறேன். ஆகையால் பாம்புகளைப் போல விவேகம் உள்ளவர்களாயும், புறாக்களைப் போல கபடமற்றவர்களாயும் இருங்கள். 10:17 மனிதரைக் குறித்து விழிப்பாயிருங்கள்; அவர்கள் உங்களைத் தங்கள் நியாயசபைகளில் ஒப்புக்கொடுத்து, தங்களுடைய ஜெபஆலயங்களில் உங்களைச் சாட்டையினால் அடிப்பார்கள். 10:18 என் பொருட்டாக ஆளுநர்களுக்கும், அரசர்களுக்கும் முன்பாக நீங்கள் கொண்டுபோகப்படுவீர்கள். அவர்களுக்கும், யூதரல்லாதவர்களுக்கும் முன்னால், நீங்கள் எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள். 10:19 அவர்கள் உங்களைக் கைது செய்யும்போது, என்ன பேசுவது, எப்படிப் பேசுவது எனக் கவலைப்படாதிருங்கள். அந்த நேரத்தில், பேச வேண்டிய வார்த்தை உங்களுக்குக் கொடுக்கப்படும். 10:20 ஏனெனில் பேசுவது நீங்களல்ல. உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்கள் மூலமாகப் பேசுவார். 10:21 “சகோதரன் தன் சகோதரனைக் கொல்லும்படி காட்டிக் கொடுப்பான். தகப்பன் தனது பிள்ளையைக் கொல்லும்படி காட்டிக் கொடுப்பான். பிள்ளைகள் அவர்கள் பெற்றோருக்கு எதிராகக் கலகம் செய்து, அவர்களை சாவுக்கு உட்படுத்துவார்கள். 10:22 என்னைப் பின்பற்றும் காரணமாக எல்லோரும் உங்களை வெறுப்பார்கள். ஆனால் முடிவு வரை உறுதியாய் நிற்பவனே இரட்சிக்கப்படுவான். 10:23 நீங்கள் ஒரு இடத்தில் துன்புறுத்தப்படுகையில், வேறொரு இடத்திற்குத் தப்பியோடுங்கள். ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், மனுமகன் வருவதற்கு முன்னால், நீங்கள் இஸ்ரயேலின் பட்டணங்கள் முழுவதையும் சுற்றி முடிக்க மாட்டீர்கள். 10:24 “பயிற்சி பெறுபவன் தனக்குப் பயிற்சி கொடுப்பவனைவிட மேலானவன் அல்ல. ஒரு வேலைக்காரன் தன் எஜமானைவிட மேலானவன் அல்ல. 10:25 பயிற்சி பெறுபவன் தனக்குப் பயிற்சி கொடுப்பவனைப் போலவும், வேலைக்காரன் தனது எஜமானைப் போலவும் இருந்தால், அதுவே போதுமானது. ஒரு வீட்டின் தலைவன் பெயெல்செபூல் என அழைக்கப்பட்டால், அவன் குடும்பத்தார் அதைவிட எவ்வளவு அதிகமாக தூற்றப்படுவார்கள்! 10:26 “எனவே, அவ்வாறு பயமுறுத்துகிறவர்களுக்குப் பயப்பட வேண்டாம். மறைத்து வைக்கப்பட்டது எதுவும் வெளிப்படுத்தப்படாமல் இருப்பதும் இல்லை, ஒளித்து வைக்கப்படுவது எதுவும் வெளியே தெரியாமல் போவதும் இல்லை. 10:27 நான் உங்களுக்கு இருளில் சொன்னவற்றை, பகல் வெளிச்சத்தில் சொல்லுங்கள்; உங்கள் காதில் மெதுவாய் சொன்னதை, கூரையின் மேலிருந்து அறிவியுங்கள். 10:28 உடலைக் கொன்றாலும் ஆத்துமாவைக் கொல்ல முடியாதவர்களுக்குப் பயப்பட வேண்டாம். உடலையும், ஆத்துமாவையும் நரகத்தில் அழிக்க வல்லமையுள்ள இறைவனுக்கு மட்டுமே பயப்படுங்கள். 10:29 ஒரு சிறு தொகைப் பணத்திற்கு, இரண்டு சிட்டுக் குருவிகள் விற்கப்படுகின்றன அல்லவா? ஆனாலும், அவற்றில் ஒன்றேனும் உங்கள் பிதாவின் அனுமதி இல்லாமல், நிலத்திலே விழுவதில்லை. 10:30 உங்கள் தலைமுடிகளின் எண்ணிக்கையும் அறியப்பட்டிருக்கின்றது. 10:31 எனவே பயப்பட வேண்டாம்; நீங்கள் அநேக சிட்டுக் குருவிகளைப் பார்க்கிலும், அதிக பெறுமதியுடையவர்கள். 10:32 “மனிதருக்கு முன்பாக என்னை யார் ஏற்றுக்கொள்கின்றார்களோ, பரலோகத்தில் இருக்கின்ற என் பிதாவின் முன்பாக நானும் அவர்களை ஏற்றுக்கொள்வேன். 10:33 மனிதருக்கு முன்பாக யார் என்னை மறுதலிக்கிறார்களோ, பரலோகத்திலிருக்கின்ற என் பிதாவின் முன்பாக நானும் அவர்களை மறுதலிப்பேன். 10:34 “பூமியில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்தேன் என நீங்கள் நினைக்க வேண்டாம். நான் சமாதானத்தை அல்ல, முரண்பாட்டை உருவாக்கவே வந்தேன். 10:35 “ஏனெனில், ‘ஒருவனை அவனது தகப்பனுக்கு எதிராகவும், ஒரு மகளை அவளது தாய்க்கு எதிராகவும், ஒரு மருமகளை அவளது மாமியாருக்கு எதிராகவும் முரண்படச் செய்யவே நான் வந்தேன். 10:36 ஒருவனுக்கு அவனுடைய சொந்தக் குடும்பத்தவர்களே எதிரிகளாய் இருப்பார்கள்.’ 10:37 “தன் தகப்பனையோ, தாயையோ என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எவனும், எனக்குத் தகுதியுடையவன் அல்ல; தனது மகனையோ மகளையோ, என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எவனும், எனக்குத் தகுதியுடையவன் அல்ல; 10:38 தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எவனும், எனக்குத் தகுதியுடையவன் அல்ல. 10:39 தனது வாழ்வைக் காத்துக்கொள்ள முயற்சிக்கிறவன், அதை இழந்து போவான். தன் வாழ்வை எனக்காக இழக்கிறவனோ, அதைக் காத்துக்கொள்வான். 10:40 “உங்களை ஏற்றுக்கொள்கின்றவன் என்னையும் ஏற்றுக்கொள்கின்றான். என்னை ஏற்றுக்கொள்கின்றவன் என்னை அனுப்பியவரையும் ஏற்றுக்கொள்கின்றான். 10:41 இறைவாக்கு உரைக்கின்ற ஒருவரை எவனாவது இறைவாக்கினராக ஏற்றுக்கொண்டால், அவன் இறைவாக்கினருக்குரிய வெகுமதியைப் பெற்றுக்கொள்வான். ஒருவர் நீதிமானாய் இருப்பதனால், எவனாவது அவரை ஏற்றுக்கொண்டால், ஏற்றுக்கொண்டவன் நீதிமானுக்குரிய வெகுமதியைப் பெற்றுக்கொள்வான். 10:42 இந்தச் சிறியவர்களான எனது சீடர்களுக்கு, எவனாவது ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுத்தால், கொடுத்தவன் நிச்சயமாய் தனக்குரிய வெகுமதியை பெறாமல் போக மாட்டான் என்று உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கின்றேன்.”