Library · ta

Matthew 18

18:1 அந்த வேளையில் சீடர்கள் இயேசுவிடம் வந்து, “பரலோக அரசில் யார் பெரியவன்?” என்று கேட்டார்கள். 18:2 அவர் ஒரு சிறு பிள்ளையைத் தன்னிடமாக அழைத்து, அவர்கள் நடுவில் நிறுத்தினார். 18:3 அவர் அவர்களிடம், “நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கின்றேன், உங்கள் எண்ணங்களை நீங்கள் மாற்றிக் கொண்டவர்களாக, சிறு பிள்ளைகளைப் போல் மாறாவிட்டால் நீங்கள் ஒருபோதும் பரலோக அரசிற்குள் செல்ல மாட்டீர்கள். 18:4 ஆதலால், இந்தச் சிறு பிள்ளையைப் போல் தன்னைத் தாழ்த்துகிறவனே பரலோக அரசில் பெரியவனாய் இருக்கின்றான்” என்றார். 18:5 “இப்படி ஒரு சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னையும் ஏற்றுக்கொள்ளுகிறான். 18:6 “ஆனால், என்னில் விசுவாசம் வைத்துள்ள இந்தச் சிறியவர்களில் ஒருவரை, எவராவது பாவம் செய்யப் பண்ணினால், அவ்வாறு செய்பவர்களின் கழுத்திலே ஒரு பெரிய திரிகைக்கல் கட்டப்பட்டு, கடலின் ஆழத்தில் தள்ளப்படுவது அவர்களுக்கு நலமாய் இருக்கும். 18:7 மக்களைப் பாவம் செய்யப் பண்ணுகிற சோதனைகளின் காரணமாக, உலகத்திற்கு ஐயோ பேரழிவு! இப்படிப்பட்ட சோதனைகள் வர வேண்டியதே. ஆனால் யார் மூலமாக அது வருகின்றதோ அந்த மனிதனுக்கு ஐயோ பேரழிவு! 18:8 உனது கையோ அல்லது காலோ உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்து போடு. இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும் உடையவனாய் நித்திய நெருப்பிற்குள் தள்ளப்படுவதைவிட, ஊனமாகவோ முடமாகவோ நித்திய வாழ்விற்குள் செல்வது உனக்குச் சிறந்தது. 18:9 உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத் தோண்டி எறிந்து விடு. இரு கண்ணுடையவனாய் நரகத்தின் நெருப்பிற்குள் தள்ளப்படுவதைவிட, ஒரு கண்ணுடன் நித்திய வாழ்விற்குள் போவது சிறந்தது. 18:10 “நீங்கள் இந்தச் சிறியவர்களில் ஒருவனையாவது அலட்சியம் பண்ணாதபடி கவனமாய் இருங்கள். ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், பரலோகத்திலுள்ள அவர்களுக்குரிய இறைதூதர்கள், எனது பரலோக பிதாவின் முகத்தை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 18:11 ஏனெனில் வழி தவறிப் போனவர்களைத் தேடி இரட்சிப்பதற்காகவே மனுமகன் வந்திருக்கிறார். 18:12 “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவனுக்கு நூறு செம்மறியாடுகள் இருந்தாலும், அவற்றில் ஒன்று வழி தவறிப் போனால், அந்தத் தொண்ணூற்றொன்பது செம்மறியாடுகளையும் மலைப் பகுதியில் விட்டுவிட்டு, வழி தவறியதைத் தேடிப் போக மாட்டானோ? 18:13 நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கின்றேன், அவன் அதைக் கண்டுபிடிக்கும்போது, வழி தவறிப் போகாத தொண்ணூற்றொன்பது செம்மறியாடுகளைவிட, அந்த ஒரு செம்மறியாட்டைக் குறித்து அதிகமாக சந்தோஷப்படுகிறான். 18:14 அதுபோலவே, இந்த சிறியவர்களில் ஒருவனாவது வழி தவறிப் போவது உங்கள் பரலோக பிதாவின் திட்டமல்ல. 18:15 “உன் சகோதரன் உனக்கு எதிராகப் பாவம் செய்தால், நீ போய் அவனுடைய குற்றத்தை அவனுக்குச் சுட்டிக்காட்டு. உங்கள் இருவருக்கும் இடையில் மட்டுமே, அது செய்யப்படட்டும். அவன் அதை ஏற்றுக்கொண்டால், நீ உனது சகோதரனை இழக்காமல் காத்துக்கொள்வாய். 18:16 ஆனால் அவன் ஏற்றுக்கொள்ளாவிட்டால், வேறு ஒருவரையோ, இருவரையோ உன்னுடன்கூட அழைத்துக்கொண்டு போய், அதைத் திரும்பவும் சொல்லு. ஏனெனில், ‘எல்லா காரியங்களும் இரண்டு அல்லது மூன்று சாட்சியங்களின் மூலமாக உறுதி செய்யப்பட வேண்டுமென, இறை வார்த்தையில் சொல்லப்பட்டுள்ளது.’ 18:17 அவர்கள் சொல்வதையும் அவன் கேட்க மறுத்தால், அதைத் திருச்சபைக்குக் கூறு; திருச்சபை சொல்வதையும் அவன் கேட்க மறுத்தால், இறைவனை அறியாத ஒருவனைப் போலவும், அநியாயமாய் வரி சேகரிக்கின்ற ஒருவனைப் போலவும் அவனை நடத்து. 18:18 “மேலும் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், நீங்கள் எதைப் பூமியில் தடை செய்கின்றீர்களோ, அது பரலோகத்திலும் தடை செய்யப்படும். எதைப் பூமியில் அனுமதிக்கிறீர்களோ, அது பரலோகத்திலும் அனுமதிக்கப்படும். 18:19 “திரும்பவும் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், நீங்கள் கேட்கும் எதைக் குறித்தாவது பூமியிலே உங்களில் இருவர் இணக்கம் கொண்டால், பரலோகத்திலிருக்கின்ற என் பிதாவினால், அது உங்களுக்காகச் செய்யப்படும். 18:20 ஏனெனில் எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரில் ஒன்றாய்கூடி வருகின்றார்களோ, அங்கே நான் அவர்களுடன் இருக்கின்றேன்” என்றார். 18:21 அதன்பின் பேதுரு இயேசுவிடம் வந்து அவரிடம், “ஆண்டவரே, என் சகோதரன் எனக்கெதிராகப் பாவம் செய்யும்போது, அவனை நான் எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை வரைக்குமோ?” எனக் கேட்டான். 18:22 இயேசு மறுமொழியாக, “ஏழு முறை அல்ல, ஏழு எழுபது முறைக்கும் அதிகமாக என்று நான் உனக்குச் சொல்கின்றேன்” என்றார். 18:23 “பரலோக அரசானது, ஒரு அரசன் தனது வேலைக்காரர்களுடன் கணக்குப் பார்க்க வந்தது போல் இருக்கின்றது. 18:24 அவன் கணக்குப் பார்க்கத் தொடங்கியபோது, பத்தாயிரம் தாலந்து பணம் கடன்பட்ட ஒருவன் கொண்டுவரப்பட்டான். 18:25 அவனோ அதை செலுத்த முடியாத நிலையில் இருந்தான். அதனால் அவனையும், அவனது மனைவியையும், பிள்ளைகளையும், அவனிடம் உள்ள எல்லாவற்றையும் விற்று கடனைத் திருப்பிச் செலுத்தும்படி, அவனுடைய எஜமான் உத்தரவிட்டான். 18:26 “வேலைக்காரனோ அவனுக்கு முன்னால் மண்டியிட்டு, ‘என்மீது பொறுமையாய் இரும், நான் எல்லாவற்றையும் திரும்பக் கொடுப்பேன்’ என்று கெஞ்சிக் கேட்டான். 18:27 வேலைக்காரனின் எஜமான் அவனில் அனுதாபப்பட்டு, அவனுடைய கடனை ரத்து செய்து, அவனைப் போகவிட்டான். 18:28 “ஆனால் அந்த வேலைக்காரன் வெளியே போனபோது, தன்னிடத்தில் நூறு தினாரி பணம் கடன்பட்டிருந்த தன் சக வேலைக்காரனைக் கண்டான். அவன் அவனைப் பிடித்து கழுத்தை நெரித்து, ‘நீ என்னிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடு’ என வற்புறுத்திக் கேட்டான். 18:29 “அவனுடைய சக வேலைக்காரன் காலில் விழுந்து, ‘என்மீது பொறுமையாய் இரும், நான் உமக்குத் திருப்பிக் கொடுப்பேன்’ எனக் கெஞ்சிக் கேட்டான். 18:30 “ஆனால் அவனோ அதற்கு மறுத்து, அந்தக் கடனைக் கட்டித் தீர்க்கும்வரைக்கும், அவனைச் சிறையில் அடைத்தான். 18:31 நடந்தவற்றைக் கண்ட மற்ற வேலைக்காரர் மிகவும் துக்கப்பட்டு, எல்லாவற்றையும் தங்கள் எஜமானுக்குப் போய்ச் சொன்னார்கள். 18:32 “அப்போது எஜமான் வேலைக்காரனை அழைத்து, அவனைப் பார்த்து, ‘கொடுமையான வேலைக்காரனே, நீ என்னிடம் கெஞ்சிக் கேட்டபடியினால், நான் உனது கடன்களையெல்லாம் ரத்து செய்தேன். 18:33 நான் உன்னில் இரக்கம் காட்டியது போல, நீயும் உனது சக வேலைக்காரனுக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டுமல்லவா?’ என்று கேட்டான். 18:34 அவனுடைய எஜமான் கோபம்கொண்டு, அவன் கடன்பட்டதை முழுவதும் கொடுத்துத் தீர்க்கும்வரை, அவனைச் சித்திரவதை செய்யப்படும்படி, சிறைக் காவலரிடம் ஒப்புக்கொடுத்தான். 18:35 “நீங்களும் உங்கள் சகோதரனை மனப்பூர்வமாய் மன்னிக்காவிட்டால், இவ்வாறே எனது பரலோக பிதாவும் உங்களை நடத்துவார்” என்றார்.