Matthew 20
20:1 “பரலோக அரசு, தனது திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்வதற்கென கூலியாட்களை அமர்த்த, அதிகாலையிலே புறப்பட்டுச் சென்ற, நிலச்சொந்தக்காரன் ஒருவனுக்கு ஒப்பாயிருக்கிறது.
20:2 அவன் அவர்களுக்கு நாளொன்றுக்கு கூலியாக ஒரு தினாரி பணம் கொடுப்பதற்கு இணங்கி, அவர்களைத் திராட்சைத் தோட்டத்திற்குள் அனுப்பினான்.
20:3 “விடிந்த பின்பு, சுமார் காலை ஒன்பது மணியளவில் அவன் வெளியே போனபோது, வேறு சிலர் சந்தை கூடும் இடத்தில் வேலை எதுவும் செய்யாமல் நிற்பதைக் கண்டான்.
20:4 அவன் அவர்களிடம், ‘நீங்களும் போய் எனது திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்யுங்கள். நியாயமான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்றான்.
20:5 அப்படியே அவர்களும் போனார்கள். “அவன் திரும்பவும் நண்பகல் வேளையிலும், பிற்பகல் சுமார் மூன்று மணியளவிலும், வெளியே போனபோது, இன்னும் சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டு முன்பு போலவே செய்தான்.
20:6 மாலை சுமார் ஐந்து மணியளவில் அவன் வெளியே போய், இன்னும் சிலர் ஒரு வேலையுமின்றி நின்று கொண்டிருப்பதைக் கண்டான். அவன் அவர்களிடம், ‘நாள் முழுவதும் ஒரு வேலையும் செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டான்.
20:7 “அதற்கு அவர்கள், ‘ஒருவரும் எங்களை வேலைக்கு அழைக்கவில்லை’ என்றார்கள். “அவன் அவர்களிடம், ‘நீங்களும் போய் எனது திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்யுங்கள்’ என்றான்.
20:8 “மாலை ஆறு மணிக்கு வேலை முடிந்தபோது, திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன் தனது மேற்பார்வையாளனிடம், ‘வேலையாட்களை அழைத்து, கடைசியாக வேலைக்கு வந்தவர்கள் தொடங்கி, முதலில் வந்தவர்கள் வரை அவர்களுடைய கூலியைக் கொடு’ என்றான்.
20:9 “மாலை ஐந்து மணிக்குப் பின் கூலிக்கு அமர்த்தப்பட்ட வேலையாட்கள் வந்து, ஒவ்வொருவரும் ஒரு முழுநாளுக்குரிய ஒரு தினாரி பணத்தை கூலியாகப் பெற்றார்கள்.
20:10 எனவே முதலாவதாக கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள் வந்தபோது, அதிகமான கூலி கிடைக்குமென எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்களும், தலா ஒரு தினாரி பணத்தையே நாள் கூலியாகப் பெற்றார்கள்.
20:11 அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டபோது, அந்தத் தோட்டத்தின் சொந்தக்காரனுக்கு எதிராய் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தார்கள்.
20:12 அவர்கள் அவனிடம், ‘கடைசியாய் கூலிக்கு அமர்த்தப்பட்ட இவர்கள், ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்தார்கள். நாங்களோ வேலையின் கஷ்டத்தையும் பகலின் வெப்பத்தையும் சகித்தோம்; அப்படியிருக்க நீர் அவர்களை எங்களுக்குச் சமமாக்கினீரே’ என்றார்கள்.
20:13 “அவனோ அவர்களில் ஒருவனைப் பார்த்து, ‘நண்பனே, நான் உனக்கு அநியாயம் செய்யவில்லையே. ஒரு தினாரி பணத்துக்கு வேலை செய்ய நீ ஒத்துக்கொள்ளவில்லையா?
20:14 உனது கூலியைப் பெற்றுக்கொண்டு போ. கடைசி நேரத்தில் கூலிக்கு அமர்த்தப்பட்டவனுக்கும், உனக்குக் கொடுத்தது போலவே, நான் கொடுக்க விரும்புகிறேன்.
20:15 எனது சொந்தப் பணத்தை நான் விரும்பியபடி செலவு செய்ய எனக்கு உரிமையில்லையா? நான் தாராள குணமுள்ளவனாய் இருக்கின்றேன் என்பதற்காக நீ பொறாமை அடையலாமா?’ என்றான்.
20:16 “அப்படியே கடைசியாய் இருக்கின்ற அநேகர் முதன்மையானவர்களாகவும், முதன்மையானவர்களாய் இருக்கின்ற அநேகர் கடைசியானவர்களாகவும் இருப்பார்கள்” என்றார்.
20:17 இயேசு எருசலேமை நோக்கிப் போய்க் கொண்டிருக்கையில், அவர் தமது பன்னிரண்டு சீடர்களையும் ஒரு பக்கமாய் அழைத்துக்கொண்டு போய், அவர்களுக்குச் சொன்னதாவது:
20:18 “இதோ, நாம் எருசலேமுக்குப் போகின்றோம். அங்கே மனுமகன் தலைமை மதகுருக்களிடத்திலும், நீதிச்சட்ட ஆசிரியர்களிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார். அவர்கள் அவரை மரணதண்டனைக்கு உட்படுத்துவார்கள்.
20:19 அவரை ஏளனம் செய்து சாட்டையினால் அடித்துச் சிலுவையில் அறையும்படி, அவரை யூதரல்லாதவர்களிடம் ஒப்புக்கொடுப்பார்கள். ஆயினும் அவர் மூன்றாம் நாளிலே உயிரோடு எழுந்திருப்பார்.”
20:20 அப்போது செபெதேயுவின் பிள்ளைகளின் தாய், இயேசுவிடம் தனது மகன்களை அழைத்துக்கொண்டு வந்து, முழந்தாழிட்டு, அவரிடம் ஒரு உதவியைக் கேட்டாள்.
20:21 அவர் அவளிடம், “நீ விரும்புவது என்ன?” என்று கேட்டார். அதற்கு அவள், “உமது அரசில் எனது இரு மகன்களில் ஒருவன் உமது வலது பக்கத்திலும், மற்றவன் உமது இடது பக்கத்திலும் உட்காரும்படி அனுமதிக்க வேண்டும்” என்றாள்.
20:22 இயேசு அவர்களிடம், “நீங்கள் கேட்பது என்ன என்று நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். நான் குடிக்கவிருக்கும் கிண்ணத்திலிருந்து நீங்களும் குடிக்க முடியுமா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “எங்களால் முடியும்” என்றார்கள்.
20:23 அப்போது இயேசு அவர்களிடம், “உண்மையாகவே எனது கிண்ணத்திலிருந்து நீங்கள் குடிப்பீர்கள். ஆனாலும் எனது வலது பக்கத்தில் உட்காருவதையோ, இடது பக்கத்தில் உட்காருவதையோ அனுமதிப்பது எனக்குரியது அல்ல. இந்த இடங்கள் என் பிதாவினால் எவர்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ, அவர்களுக்கே உரியவை” என்றார்.
20:24 இதைக் கேட்ட மற்ற பத்துப் பேரும், அந்த இரண்டு சகோதரர்கள் மேலும் கோபமடைந்தார்கள்.
20:25 இயேசு அவர்கள் அனைவரையும் தம்மிடமாய் அழைத்து, “யூதரல்லாதவர்களின் ஆளுநர்கள் அவர்களை அடக்கி ஆளுகிறார்கள் என்றும், அவர்களின் உயர் அதிகாரிகள் அவர்கள்மீது அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
20:26 ஆனால் நீங்களோ அப்படியிருக்கக் கூடாது. உங்கள் மத்தியில் பெரியவனாய் இருக்க விரும்புகிறவன் எவனோ, அவன் உங்களுக்குப் பணியாளனாய் இருக்க வேண்டும்;
20:27 முதன்மையாய் இருக்க விரும்புகிறவன் எவனோ, அவன் உங்களுக்கு அடிமையாய் இருக்க வேண்டும்.
20:28 அப்படியே, மனுமகனும் மற்றவர்களிடமிருந்து சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக அல்ல, மற்றவர்களுக்குச் சேவை செய்யவும், அநேகரை மீட்கும் கட்டணமாகத் தனது உயிரைக் கொடுக்கவுமே வந்தார்” என்றார்.
20:29 இயேசுவும் அவருடைய சீடர்களும் எரிகோவைவிட்டுப் புறப்படுகையில், மக்கள் பெருங்கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.
20:30 அந்த வீதியின் அருகே பார்வையற்ற இருவர் உட்கார்ந்திருந்தார்கள். இயேசு அந்த வழியாய் போகின்றார் என்று அவர்கள் கேள்விப்பட்டபோது, “ஆண்டவரே, தாவீதின் மகனே! எங்கள்மேல் இரக்கமாயிரும்” என்று சத்தமிட்டார்கள்.
20:31 மக்கள் கூட்டத்தினரோ அவர்களை அதட்டி அமைதியாய் இருக்கும்படி சொன்னார்கள். ஆனால் அவர்களோ, “ஆண்டவரே, தாவீதின் மகனே எங்கள்மேல் இரக்கமாயிரும்” என்று இன்னும் அதிகமாய் சத்தமிட்டார்கள்.
20:32 நடந்து சென்று கொண்டிருந்த இயேசு நின்று, அவர்களை அழைத்தார். அவர் அவர்களிடம், “நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்.
20:33 அதற்கு அவர்கள், “ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறந்து விடும்” என்றார்கள்.
20:34 இயேசு அவர்கள்மீது அனுதாபங்கொண்டு, அவர்களுடைய கண்களைத் தொட்டார். உடனே அவர்கள் பார்வை பெற்று, இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்கள்.