Matthew 22
22:1 திரும்பவும் இயேசு அவர்களோடு உவமைகள் மூலமாகப் பேசி, பரலோக அரசைப் பற்றிச் சொன்னதாவது:
22:2 “பரலோக அரசு, ஒரு அரசன் தனது மகனுக்கென ஒரு திருமண விருந்தை ஆயத்தப்படுத்தியதற்கு ஒப்பாயிருக்கிறது.
22:3 விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களை வரும்படி அழைப்பதற்கு, அவன் தன் பணியாட்களை அவர்களிடம் அனுப்பினான். அவர்களோ வர மறுத்துவிட்டார்கள்.
22:4 “அவன் இன்னும் சில பணியாட்களை அனுப்பி, ‘நான் என்னுடைய விருந்தை ஆயத்தப்படுத்தி விட்டேன்; சிறப்பான மாமிச விருந்து உங்களுக்கென்று ஆயத்தமாய் இருக்கின்றது. திருமண விருந்துக்கு வாருங்கள்’ என்று அழைக்கப்பட்டவர்களிடம் சொல்லுங்கள் என்றான்.
22:5 “ஆனால் அழைக்கப்பட்டவர்களோ, அதைக் கவனிக்காமல் தங்கள் வேலைகளுக்குச் சென்றார்கள். ஒருவன் தனது வயலுக்கும், வேறொருவன் தனது வியாபாரத்துக்கும் சென்றான்.
22:6 மற்றவர்களோ, அரசனுடைய பணியாட்களைப் பிடித்துத் துன்புறுத்தி அவர்களைக் கொன்றார்கள்.
22:7 அரசன் கடுங் கோபமடைந்தான். அவன் தனது படைகளை அனுப்பி, அந்தக் கொலைகாரர்களை அழித்து, அவர்களுடைய பட்டணத்தை எரித்தான்.
22:8 “பின்பு அவன் தன் பணியாட்களிடம், ‘திருமண விருந்து ஆயத்தமாயிருக்கிறது. ஆனால் நான் அழைத்தவர்களோ, அதற்குத் வரத் தகுதியற்றவர்களாய்ப் போனார்கள்.
22:9 இப்போது வீதிகளின் மூலைகளுக்குப் போங்கள், யாரையெல்லாம் நீங்கள் காண்கின்றீர்களோ, அவர்களையெல்லாம் விருந்துக்கு அழையுங்கள்’ என்றான்.
22:10 எனவே பணியாட்கள் வெளியே வீதிகளில் போய், நல்லவர்களும் கெட்டவர்களுமான தாங்கள் கண்ட எல்லா மக்களையும் அழைத்து ஒன்றுசேர்த்தார்கள். திருமண மண்டபம் விருந்தாளிகளால் நிரம்பியது.
22:11 “அரசன் விருந்தினரைப் பார்க்க உள்ளே வந்தபோது, திருமண உடை அணிந்திராத ஒருவன் அங்கேயிருப்பதைக் கண்டான்.
22:12 அரசன், ‘நண்பனே, திருமண உடையின்றி, நீ எப்படி இங்கே வந்தாய்?’ என்று கேட்டபோது, அவன் பேச்சற்று நின்றான்.
22:13 “அப்போது அரசன் ஏவலாட்களிடம், ‘அவனுடைய கையையும் காலையும் கட்டி வெளியே இருளில் தள்ளுங்கள், அங்கே வேதனையான பற்கடிப்பும் அழுகையும் இருக்கும்’ என்றான்.
22:14 “ஏனெனில் அநேகர் அழைக்கப்பட்டாலும், தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் சிலரே.”
22:15 பின்பு பரிசேயர்கள் போய், இயேசுவின் வார்த்தைகளிலிருந்து அவரைச் சிக்க வைக்க சதித் திட்டமிட்டார்கள்.
22:16 அவர்கள், தங்கள் சீடர்களை ஏரோதியர்களுடன் இயேசுவிடம் அனுப்பினார்கள். அவர்கள் அவரிடம், “போதகரே, நீர் நேர்மையானவரும், இறைவனின் வழியை உண்மையின்படி போதிக்கிறவருமாய் இருக்கின்றீர். நீர் எவருடைய தராதரத்தையும் பார்க்காதவர். எனவே நீர் பிறருடைய கருத்துக்களை எல்லாம் ஏற்பவர் அல்ல என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.
22:17 ஆகவே ரோமப் பேரரசன் சீசருக்கு வரி செலுத்துவது சரியானதா இல்லையா? உம்முடைய அபிப்பிராயம் என்ன? எங்களுக்குச் சொல்லும்” என்றார்கள்.
22:18 ஆனால் இயேசுவோ, அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்தவராய் அவர்களிடம், “வெளிவேடக்காரர்களே! நீங்கள் ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்?
22:19 வரி செலுத்துவதற்காக உபயோகிக்கும் நாணயத்தை எனக்குக் காட்டுங்கள்” என்றார். அவர்கள் ஒரு தினாரி பணத்தை அவரிடம் கொண்டுவந்தார்கள்.
22:20 அவர் அவர்களிடம் அந்த நாணயத்தைக் காட்டி, “இதில் உள்ள உருவம் யாருடையது? இதில் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்கள் யாருடையது?” என்று கேட்டார்.
22:21 அதற்கு அவர்கள், “ரோமப் பேரரசன் சீசருடையது” என்றார்கள். அப்போது அவர் அவர்களிடம், “சீசருடையதை சீசருக்கும், இறைவனுடையதை இறைவனுக்கும் கொடுங்கள்” என்றார்.
22:22 அவர்கள் இதைக் கேட்டவுடன் வியப்படைந்து, அவரைவிட்டுப் போனார்கள்.
22:23 அதே நாளில், உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்கின்ற சதுசேயர், அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்கும்படி வந்தார்கள்.
22:24 “போதகரே, ‘ஒருவன் பிள்ளை இல்லாதவனாய் இறந்துபோனால், இறந்தவனின் மனைவியை, அவனது சகோதரன் திருமணம் செய்து, இறந்துபோன தன் சகோதரனுக்காக பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டும்’ என்று மோசே எங்களுக்குச் சொல்லியிருக்கின்றார்.
22:25 எங்கள் மத்தியில் ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். மூத்தவன் திருமணம் செய்து, பின் இறந்து போனான். அவனுக்குப் பிள்ளைகள் இல்லாததால், அவன் தனது மனைவியைத் தனது சகோதரனுக்குவிட்டுச் சென்றான்.
22:26 அதன்படி, இரண்டாம் மூன்றாம் சகோதரன் என ஏழாவது சகோதரன் வரை அப்படியே நடந்தது.
22:27 இறுதியில் அந்தப் பெண்ணும் இறந்து போனாள்.
22:28 அப்படியானால், இறந்தவர்களின் உயிர்த்தெழுதல் இடம்பெறும்போது, அவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள்? ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்தார்களே” என்றார்கள்.
22:29 இயேசு அவர்களுக்குப் பதிலாக, “நீங்கள் தவறான கருத்துடையவர்களாய் இருக்கின்றீர்கள், ஏனெனில் வேதவசனங்களையோ, இறைவனின் வல்லமையையோ நீங்கள் அறியவில்லை.
22:30 உயிர்த்தெழுதலில் மக்கள் திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்து கொடுக்கப்படுவதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலுள்ள தூதரைப் போல் இருப்பார்கள்.
22:31 இறந்தவர்களின் உயிர்த்தெழுதலைக் குறித்து, இறைவன் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா?
22:32 ‘நானே ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் இறைவனும், யாக்கோபின் இறைவனுமாயிருக்கிறேன்’ என்று சொல்லியிருக்கின்றாரே. அவர் இறந்தவர்களின் இறைவன் அல்ல, உயிருள்ளவர்களின் இறைவன்” என்றார்.
22:33 மக்கள் கூட்டம் இதைக் கேட்டபோது, அவருடைய போதனைகளைக் குறித்து பெரிதும் வியப்பில் ஆழ்ந்தார்கள்.
22:34 இயேசு சதுசேயர்களை வாயடைத்துப் போகச் செய்தார் என்று கேள்விப்பட்டபோது, பரிசேயர்கள் ஒன்றுகூடி அவரிடம் வந்தார்கள்.
22:35 அவர்களில் நீதிச்சட்டத்தில் நிபுணனான ஒருவன், கேள்வி கேட்டு அவரைச் சோதிப்பதற்காக,
22:36 “போதகரே, நீதிச்சட்டத்தில் மிகப் பெரிய கட்டளை எது?” என்றான்.
22:37 இயேசு அவனுக்குப் பதிலாக, “ ‘உன் இறைவனாகிய கர்த்தரை உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும் அன்பு செய்வாயாக.’
22:38 இதுவே முதலாவதும் பெரியதுமான கட்டளை.
22:39 இரண்டாவதும் இதைப் போன்றதே: ‘நீ உன்னில் அன்பாய் இருப்பது போல் உன் அயலவனிலும் அன்பாயிரு.’
22:40 முழு நீதிச்சட்டத்துக்கும், இறைவாக்குகளுக்கும் இந்த இரண்டு கட்டளைகளே அடிப்படையாக இருக்கின்றன” என்றார்.
22:41 பரிசேயர்கள் ஒன்றுகூடியபோது, இயேசு அவர்களிடம்,
22:42 “நீங்கள் மேசியாவைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய மகன்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “அவர் தாவீதின் மகன்” என்று பதிலளித்தார்கள்.
22:43 அதற்கு இயேசு அவர்களிடம், “அப்படியானால் தாவீது பரிசுத்த ஆவியினால் பேசுகையில், அவரை ‘ஆண்டவர்’ என்று அழைத்தது எப்படி? ஏனெனில்,
22:44 “கர்த்தர் என்னுடைய ஆண்டவரிடம்: ‘நான் உமது பகைவரை உமது பாதத்தின் கீழ் கொண்டுவரும் வரை, எனது வலது பக்கத்தில் உட்கார்ந்துகொள்ளும்’ என்று தாவீது சொல்லியிருக்கின்றாரே.
22:45 எனவே, தாவீதே மேசியாவை ஆண்டவர் என்று அழைத்திருக்கிறார். அப்படியென்றால் அவர் எப்படி தாவீதின் மகனாய் இருக்கக் கூடும்?” என்று கேட்டார்.
22:46 ஒருவராலும் ஒரு வார்த்தையைக்கூட அவருக்குப் பதிலாகச் சொல்ல முடியவில்லை. அன்றிலிருந்து, ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை.