Library · ta

Matthew 25

25:1 “அந்நாளிலே, பரலோக அரசானது பத்து கன்னிப்பெண்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு, மணமகனைச் சந்திக்கப் போனதற்கு ஒப்பாயிருக்கும். 25:2 அவர்களில் ஐந்து பேர் புத்தியில்லாதவர்களாகவும், ஐந்து பேர் ஞானமுள்ளவர்களாகவும் இருந்தார்கள். 25:3 அந்த புத்தியில்லாதவர்கள் தங்களுடைய விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் எண்ணெயையோ எடுத்துச் செல்லவில்லை. 25:4 ஞானமுள்ளவர்களோ, தங்கள் விளக்குகளுடன் குப்பிகளில் எண்ணெயையும் எடுத்துச் சென்றார்கள். 25:5 மணமகன் வருவதற்கு நீண்ட நேரமானபடியால், அவர்கள் எல்லோரும் அயர்ந்து தூங்கிவிட்டார்கள். 25:6 “நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகின்றார்! அவரைச் சந்திக்க புறப்படுங்கள்’ என்ற சத்தம் கேட்டது. 25:7 “அப்போது எல்லா கன்னிப்பெண்களும் விழித்தெழுந்து, அவர்களுடைய விளக்குகளை ஆயத்தம் செய்தார்கள். 25:8 புத்தியில்லாதவர்களோ ஞானமுள்ளவர்களிடம், ‘உங்கள் எண்ணெயில் கொஞ்சம் எங்களுக்குத் தாருங்கள்; எங்கள் விளக்குகள் அணைந்து போகின்றன’ என்றார்கள். 25:9 “அதற்கு ஞானமுள்ளவர்கள், ‘இல்லை, அது எங்களுக்கும் உங்களுக்கும் போதாமல் போகலாம். எனவே நீங்கள் போய் எண்ணெய் விற்பவர்களிடம், உங்களுக்காக கொஞ்சம் வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றார்கள். 25:10 “அவர்கள் எண்ணெய் வாங்குவதற்காக போய்க் கொண்டிருக்கையில், மணமகன் வந்துவிட்டார். ஆயத்தமாக இருந்த கன்னிப்பெண்கள் திருமண விருந்தில் பங்குகொள்ள, அவருடன் உள்ளே போனார்கள். கதவோ அடைக்கப்பட்டது. 25:11 “பின்பு மற்றக் கன்னிப்பெண்களும் வந்து, ‘ஆண்டவனே, ஆண்டவனே, எங்களுக்குக் கதவைத் திறந்தருளும்!’ என்றார்கள். 25:12 “ஆனால் அவரோ, ‘உண்மையாகவே சொல்கின்றேன், உங்களை எனக்குத் தெரியாது’ எனப் பதிலளித்தார். 25:13 “எனவே விழிப்பாயிருங்கள், ஏனெனில் அந்த நாளையும், அந்த நேரத்தையும் நீங்கள் அறிய மாட்டீர்கள்” என்றார். 25:14 “மேலும், பரலோக அரசு, பயணம் போகின்ற ஒருவன், தனது வேலையாட்களை அழைத்து, தனது சொத்துக்களை அவர்களிடம் ஒப்புவித்தது போல் இருக்கும். 25:15 அவன், ஒருவனுக்கு ஐந்து தாலந்து பணம், இன்னொருவனுக்கு இரண்டு தாலந்து பணம், வேறொருவனுக்கு ஒரு தாலந்து பணம் என பெருந் தொகைப் பணத்தைப் பகிர்ந்து கொடுத்தான். இவ்விதமாய் ஒவ்வொருவனுடைய திறமைக்கு ஏற்றபடியே கொடுத்தான். பின்பு அவன் பயணம் மேற்கொண்டான். 25:16 ஐந்து தாலந்து பணத்தைப் பெற்றவன், உடனே போய் அதை முதலீடு செய்து, இன்னும் ஐந்து தாலந்து பணத்தைச் சம்பாதித்தான். 25:17 அவ்வாறே இரண்டு தாலந்து பணத்தைப் பெற்றவன், இன்னும் இரண்டு தாலந்து பணத்தைச் சம்பாதித்தான். 25:18 ஆனால் ஒரு தாலந்து பணத்தைப் பெற்றவனோ புறப்பட்டுப் போய், நிலத்திலே ஒரு குழியைத் தோண்டி, தன் எஜமானின் பணத்தைப் புதைத்து வைத்தான். 25:19 “நீண்ட காலத்தின் பின் அந்த வேலையாட்களின் எஜமான் திரும்பி வந்து, கணக்கு கொடுக்கும்படி அவர்களிடம் கேட்டான். 25:20 ஐந்து தாலந்து பணத்தைப் பெற்றவன், இன்னும் ஐந்து தாலந்து பணத்தைக் கொண்டுவந்தான். அவன், ‘ஐயா, நீர் ஐந்து தாலந்து பணத்தை என்னிடம் ஒப்புவித்தீர். பாரும், நான் இன்னும் ஐந்து தாலந்து பணத்தைச் சம்பாதித்துள்ளேன்’ என்றான். 25:21 “அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், உண்மையுள்ள நல்ல வேலைக்காரனே! நீ சிறியதில் உண்மையுள்ளவனாய் இருந்தாய்; அதனால் நான் உன்னை அநேகமானவைகளுக்குப் பொறுப்பாக வைப்பேன். வந்து, உனது எஜமானின் மனமகிழ்ச்சியில் பங்குகொள்’ என்றான். 25:22 “இரண்டு தாலந்து பணத்தைப் பெற்றுக்கொண்டவனும் வந்தான். அவன், ‘ஐயா, நீர் இரண்டு தாலந்து பணத்தை என்னிடம் ஒப்புவித்தீர்; பாரும், நான் இன்னும் இரண்டு தாலந்து பணத்தைச் சம்பாதித்துள்ளேன்’ என்றான். 25:23 “அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், உண்மையுள்ள நல்ல வேலைக்காரனே! நீ சிறியதில் உண்மையுள்ளவனாய் இருந்தாய்; அதனால் நான் உன்னை அநேக காரியங்களுக்குப் பொறுப்பாக வைப்பேன். வந்து, உனது எஜமானின் மனமகிழ்ச்சியில் பங்குகொள்’ என்றான். 25:24 “பின்பு ஒரு தாலந்து பணத்தைப் பெற்றவனும் வந்தான். அவன், ‘ஐயா, நீர் கடினமான மனிதர் என்பதை நான் அறிவேன். நீர் விதைக்காதிருந்தும், அவ்விடத்தில் அறுவடை செய்கின்றவர் என்றும், ஒரு இடத்தில் விதைகளைத் தூவாதிருந்தும், அவ்விடத்திலிருந்து அள்ளிச் சேர்க்கிறவர் என்றும் அறிவேன். 25:25 எனவே நான் உமக்குப் பயந்ததால், வெளியே போய், உமது ஒரு தாலந்து பணத்தை நிலத்திலே புதைத்து வைத்தேன். இதோ, உமக்குரிய பணம்’ என்றான். 25:26 “அதற்கு அவனுடைய எஜமான் அவனிடம், ‘பொல்லாதவனே! சோம்பேறியான வேலைக்காரனே! நான் ஒரு இடத்தில் விதைக்காமல், அங்கு அறுவடை செய்கின்றவன் என்றும், ஒரு இடத்தில் விதைகளைத் தூவாமல், அங்கு அள்ளிச் சேர்க்கிறவன் என்றும் நீ அறிந்திருந்தாயே. 25:27 அப்படியானால், நீ என் பணத்தை வங்கியில் வைப்பீடு செய்திருக்கலாமே. அப்படி நீ செய்திருந்தால், நான் திரும்பி வந்ததும், அதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேனே’ என்றான். 25:28 “அவன், ‘அந்த ஒரு தாலந்து பணத்தை அவனிடமிருந்து எடுத்து, பத்து தாலந்து பணம் வைத்திருக்கின்றவனிடத்தில் கொடுங்கள். 25:29 ஏனெனில் உள்ளவனாய் இருக்கின்ற ஒவ்வொருவனுக்கும் இன்னும் அதிகம் கொடுக்கப்படும். அவன் நிறைவாய் பெற்றுக்கொள்வான். இல்லாதவனிடத்திலிருந்தோ அவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். 25:30 அந்த பயனற்ற வேலைக்காரனை வெளியே இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் வேதனையான பற்கடிப்பும் இருக்கும்’ என்றான். 25:31 “மனுமகன் தமது மகிமையில், இறைதூதர்கள் எல்லோருடனும் வரும்போது அவர் தமது மகிமையின் அரியணையில் அமருவார். 25:32 சகல இன மக்களும் அவருக்கு முன்பாக ஒன்றுசேர்க்கப்படுவார்கள். மேய்ப்பன் ஒருவன் செம்மறியாடுகளை வெள்ளாடுகளிலிருந்து பிரிப்பது போல், அவர் மக்களையும் இரண்டு குழுக்களாக வேறு பிரிப்பார். 25:33 செம்மறியாடுகளை அவர் தமது வலது பக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவார். 25:34 “அப்போது அரசர் வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ‘என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே வாருங்கள்; உலகம் படைக்கப்பட்டதிலிருந்தே உங்களுக்காக ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற அரசை உரித்தாக்கிக்கொள்ளுங்கள். 25:35 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்; நான் தாகமாயிருந்தேன், எனக்கு அருந்தக் கொடுத்தீர்கள்; நான் அந்நியனாய் இருந்தேன், என்னை நீங்கள் உங்கள் வீட்டிற்குள் அழைத்தீர்கள்; 25:36 நான் உடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு உடை கொடுத்தீர்கள்; நான் வியாதியாய் இருந்தேன், நீங்கள் என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; நான் சிறையில் இருந்தேன், அப்போது என்னைப் பார்க்க வந்தீர்கள்’ என்று சொல்வார். 25:37 “அப்போது நீதிமான்கள் அவரிடம், ‘ஆண்டவரே, எப்போது நாங்கள் உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு, உணவு கொடுத்தோம், அல்லது தாகம் உள்ளவராகக் கண்டு, குடிக்கக் கொடுத்தோம்? 25:38 எப்போது உம்மை அந்நியராயிருக்கக் கண்டு, எங்கள் வீட்டிற்குள் அழைத்தோம், அல்லது உடையில்லாதவராகக் கண்டு, உடை கொடுத்தோம்? 25:39 எப்போது உம்மை வியாதியுள்ளவராகக் கண்டோம், அல்லது உம்மைச் சிறையில் வந்து பார்த்தோம்?’ என்பார்கள். 25:40 “அதற்கு அரசர், ‘நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், எனது சகோதரரில் மிகச் சிறியவர்களான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்’ என்று பதிலளித்தார். 25:41 “பின்பு அவர் தமது இடது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு அகன்று போங்கள். பிசாசுக்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்ட நித்திய நெருப்புக்குள் போங்கள். 25:42 ஏனெனில், நான் பசியாயிருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; நான் தாகமாயிருந்தேன், நீங்கள் எனக்கு அருந்தக் கொடுக்கவில்லை; 25:43 நான் அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னை உங்கள் வீட்டிற்குள் அழைக்கவில்லை; நான் உடையில்லாதவனாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உடை கொடுக்கவில்லை; நான் வியாதியாயும் சிறையிலும் இருந்தேன், நீங்கள் என்னைப் பார்க்க வரவில்லை’ என்று சொல்வார். 25:44 “அதற்கு அவர்கள், ‘ஆண்டவரே, எப்போது நாங்கள் உம்மை பசியுள்ளவராகவோ தாகமுள்ளவராகவோ அல்லது அந்நியராகவோ உடையில்லாதவராகவோ அல்லது வியாதியுள்ளவராகவோ சிறையிலிருப்பவராகவோ கண்டோம்? எப்போது நாங்கள் உமக்கு உதவி செய்யாதிருந்தோம்?’ எனக் கேட்பார்கள். 25:45 “அதற்கு அவர், ‘நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கின்றேன், இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யவில்லையோ, அதை எனக்கே செய்யாமல் விட்டீர்கள்’ என்பார். 25:46 “அப்போது, அவர்கள் நித்திய தண்டனைக்குள்ளும் நீதிமான்களோ, நித்திய வாழ்விற்குள்ளும் போவார்கள்” என்றார்.