Matthew 4
4:1 அதன்பின்பு இயேசு, பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக ஆவியானவராலே பாலைநிலத்துக்கு வழிநடத்தப்பட்டார்.
4:2 அவர் இரவு பகல் நாற்பது நாட்கள் உபவாசித்து முடித்த பின், பசியாய் இருந்தார்.
4:3 சோதனைக்காரன் அவரிடம் வந்து, “நீர் இறைவனின் மகனானால், இந்தக் கற்கள் அப்பங்களாகும்படி சொல்லும்” என்றான்.
4:4 அதற்கு இயேசு, “ ‘மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல, இறைவனுடைய வாயிலிருந்து வரும், ஒவ்வொரு வார்த்தையினாலும் வாழ்வான்’ என்று எழுதப்பட்டிருக்கிறது” எனப் பதிலளித்தார்.
4:5 பின்பு பிசாசு அவரை எருசலேம் நகரத்திற்குக் கொண்டுபோய், ஆலயத்தின் உச்சியிலே நிறுத்தி,
4:6 “நீர் இறைவனின் மகனானால், கீழே குதியும். “ ‘இறைவன் தமது தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது பாதம் கற்களின் மீது மோதாதபடி, அவர்கள் உம்மைத் தமது கைகளினால் தாங்கிக்கொள்வார்கள்’ என்று எழுதப்பட்டிருக்கிறதே” என்றான்.
4:7 இயேசு அவனிடம், “ ‘உன் இறைவனாகிய கர்த்தரை சோதிக்க வேண்டாம்’ என்றும் எழுதியிருக்கிறதே” எனப் பதிலளித்தார்.
4:8 மீண்டும் பிசாசு அவரை மிக உயரமான மலைக்குக் கொண்டுபோய், உலகத்தின் எல்லா அரசுகளையும், அதன் மேன்மையையும் அவருக்குக் காண்பித்து,
4:9 “நீர் என் முன் மண்டியிட்டு விழுந்து என்னை ஆராதித்தால், இவை எல்லாவற்றையும் நான் உமக்குத் தருவேன்” என்றான்.
4:10 இயேசு அவனிடம், “சாத்தானே, என்னைவிட்டு விலகிப் போ! ‘உனது இறைவனாகிய ஆண்டவரை ஆராதித்து, அவரை மட்டுமே வழிபடுவாயாக’ என்றும் எழுதியிருக்கிறது” என்று சொன்னார்.
4:11 அப்போது பிசாசு அவரைவிட்டுச் சென்றான்; இறைதூதர்கள் வந்து அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.
4:12 யோவான் சிறையில் அடைக்கப்பட்டதை இயேசு கேள்விப்பட்டபோது, அவர் கலிலேயாவுக்குத் திரும்பி வந்தார்.
4:13 அவர் நாசரேத்தைவிட்டு கப்பர்நகூமுக்குப் போய், அங்கே வாழ்ந்தார்; அது செபுலோன், நப்தலி பகுதிகளிலுள்ள கடலருகே இருந்தது.
4:14 இறைவாக்கினன் ஏசாயா மூலமாய்:
4:15 “செபுலோன் நாடே! நப்தலி நாடே! யோர்தானின் மறுபக்கமாக கடலுக்குப் போகும் வழியே! யூதரல்லாதவர் வாழும் கலிலேயாவே!
4:16 இருளில் வாழும் மக்கள் பெரிய ஒளியைக் கண்டார்கள்; மரண நிழல் சூழ்ந்த நாட்டில் வாழ்வோர் மீது ஒளி உதித்தது” என்று சொல்லப்பட்டவை நிறைவேறும்படியே இப்படி நடந்தது.
4:17 அந்த வேளையிலிருந்து இயேசு, “மனந்திரும்புங்கள், பரலோக அரசு சமீபமாய் இருக்கின்றது” எனப் பிரசங்கம் பண்ணத் தொடங்கினார்.
4:18 இயேசு கலிலேயா கடற்கரையில் நடந்து போகும்போது, பேதுரு என அழைக்கப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா ஆகிய சகோதரர்கள் இருவரைக் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக் கொண்டிருந்தார்கள்.
4:19 இயேசு அவர்களிடம், “வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களை, மீன்களைப் பிடிப்பது போல், மனிதர்களைச் சேர்ப்பவனாக்குவேன்” என்றார்.
4:20 உடனே அவர்கள், தங்கள் வலைகளைக் கைவிட்டு, அவரைப் பின்பற்றிச் சென்றார்கள்.
4:21 அவர் அங்கிருந்து போகையில், வேறு இரண்டு சகோதரர்களான செபெதேயுவின் மகன் யாக்கோபையும், அவனுடைய சகோதரன் யோவானையும் கண்டார். அவர்கள் தங்கள் தகப்பன் செபதேயுவுடன் ஒரு படகில் இருந்து, தங்கள் வலைகளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார்.
4:22 உடனே அவர்கள் படகையும், தங்கள் தகப்பனையும் விட்டுவிட்டு, அவரைப் பின்தொடர்ந்து போனார்கள்.
4:23 இயேசு கலிலேயா முழுவதும் சென்று, அவர்களுடைய ஜெபஆலயங்களில் கற்பித்து, இறையரசின் நற்செய்தியைப் போதித்தார். அத்துடன் மக்களுக்கு இருந்த எல்லாவிதமான நோய்களையும், வியாதிகளையும் குணமாக்கினார்.
4:24 அவரைப்பற்றிய செய்தி, சீரியா முழுவதும் பரவியது. மக்கள் அவரிடம், பல்வேறு வியாதி உள்ளவர்களையும், வேதனை உள்ளவர்களையும், பேய் பிடித்தவர்களையும், வலிப்பு உள்ளவர்களையும், முடக்குவாதம் உள்ளவர்களையும் கொண்டுவந்தார்கள்; அவர் அவர்களை குணமாக்கினார்.
4:25 கலிலேயா, தெக்கப்போலி, எருசலேம், யூதேயா மற்றும் யோர்தானுக்கு மறுகரையில் இருந்தும் பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.