Luke 1
1:1 மதிப்புக்குரிய தெயோப்பிலுவே, நமது மத்தியில் நிறைவேறிய நிகழ்வுகளின் விபரத்தை ஒழுங்காக எழுத, அநேகர் பெருமுயற்சி செய்தார்கள்.
1:2 தொடக்கத்தில் இருந்தே கண் கண்ட சாட்சிகளாகவும், வார்த்தையை அறிவிக்கும் ஊழியர்களாகவும் இருந்தவர்கள் எங்களுக்குக் கையளித்தபடியே எழுதினார்கள்.
1:3 நடந்த எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்து நான் கவனமாய் விசாரித்தறிந்ததால், உமக்கு அவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவதற்கு நானும் தீர்மானித்தேன்.
1:4 இதனால் உமக்குப் போதிக்கப்பட்ட விடயங்கள் நிச்சயமாக நம்பத்தகுந்த உண்மைகள் என்பதை நீர் அறிந்துகொள்ளலாம்.
1:5 ஏரோது அரசன் யூதேயாவை ஆட்சி செய்த காலத்தில், சகரியா என்னும் பெயருடைய ஒரு மதகுரு இருந்தார். இவர் அபியாவின் மதகுரு பிரிவைச் சேர்ந்தவர். இவருடைய மனைவி எலிசபெத்தும், மதகுருவான ஆரோனின் வழித்தோன்றலாயிருந்தாள்.
1:6 அவர்கள் இருவரும் மற்றவர்களால் குற்றம் சாட்டப்பட இடமில்லாமல், கர்த்தருடைய எல்லாக் கட்டளைகளையும் ஒழுங்குவிதிகளையும் கைக்கொண்டு, இறைவனின் பார்வையில் நீதிமான்களாக இருந்தார்கள்.
1:7 ஆனாலும் எலிசபெத் கருத்தரிக்க முடியாதவளாக இருந்ததனால், அவர்களுக்குப் பிள்ளைகள் இருக்கவில்லை; அவர்கள் இருவரும், வயது சென்றவர்களாய் இருந்தார்கள்.
1:8 ஒருமுறை அபியாவின் பிரிவை சேர்ந்தவர்கள், ஆலயத்தில் கடமை புரிந்தபோது, சகரியாவும் இறைவனுக்கு முன்பாக மதகுருவின் பணிகளைச் செய்தார்.
1:9 ஒரு நாள் மதகுருவினருக்குரிய வழக்கத்தின்படி மதக் கடமைகளைச் செய்வதற்கு யாரைத் தெரிவு செய்வதெனச் சீட்டுப் போட்டபோது, கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்று தூபம் காட்டும் பணியைச் செய்வதற்கு சகரியா தெரிந்தெடுக்கப்பட்டார்.
1:10 தூபம் காட்டும் வேளை வந்தபோது, வழிபாட்டிற்கு ஒன்றுகூடி வந்த பெருந்தொகையான மக்கள், வெளியே மன்றாடிக் கொண்டிருந்தார்கள்.
1:11 அப்போது கர்த்தரின் தூதன் ஒருவன், தூபபீடத்தின் வலது பக்கத்திலே நின்று சகரியாவுக்குக் காட்சியளித்தான்.
1:12 அப்போது சகரியா அவனைக் கண்டு திடுக்கிட்டார், பெரும் பீதி அவரை பற்றிக்கொண்டது.
1:13 அந்தத் தூதனோ அவரைப் பார்த்து: “சகரியாவே பயப்படாதீர்! உமது மன்றாடல் கேட்கப்பட்டது. உமது மனைவி எலிசபெத் உமக்கு ஒரு மகனைப் பெறுவாள். நீர் அவனுக்கு யோவான் என்று பெயரிட வேண்டும்.
1:14 அவன் உமக்கு மகிழ்ச்சியும் மனக்களிப்பும் தருவான். அவனுடைய பிறப்பின் காரணமாக, அநேகர் மனமகிழ்ச்சியடைவார்கள்;
1:15 ஏனெனில் அவன் கர்த்தருடைய பார்வையில் உயர்வானவனாய் இருப்பான். அவன் ஒருபோதும் திராட்சை ரசத்தையோ மதுபானத்தையோ குடிக்கக் கூடாது. அவன் தனது தாயின் வயிற்றில் இருக்கும்போதே, பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருப்பான்.
1:16 அவன் இஸ்ரயேல் மக்களில் பலரை அவர்களுடைய இறைவனாகிய கர்த்தரிடத்திற்கு திரும்பவும் கொண்டுவருவான்.
1:17 அவன் கர்த்தருக்கு முன்பாக எலியாவின் ஆவியோடும் வல்லமையோடும் செல்வான். தந்தையரின் இருதயத்தைப் பிள்ளைகளின் பக்கமாகத் திருப்புவான். கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானமான வழிக்குத் திருப்புவான். இவ்விதமாய் கர்த்தருக்காக ஆயத்தமாக்கப்பட்ட மக்களை அவருக்காகத் தயார் செய்வான்” என்றான்.
1:18 அப்போது சகரியா அந்த தூதனிடம், “இது நடக்கும் என்று நான் எப்படி நம்பலாம்? நான் வயோதிபனாய் இருக்கின்றேன். என் மனைவியும் வயது சென்றவளாயிருக்கிறாளே” என்றார்.
1:19 அதற்கு அந்தத் தூதன், “நான் இறைவனின் பிரசன்னத்தில் நிற்கின்ற காபிரியேல். உம்மிடம் பேசுவதற்காகவும், இந்த நற்செய்தியை உமக்கு அறிவிப்பதற்காகவும் நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்.
1:20 ஆனாலும், நீரோ குறித்த காலத்தில் நிறைவேறப் போகின்ற என் வார்த்தைகளை நம்பவில்லை, ஆதலால் இப்போதிலிருந்து இவையெல்லாம் நிகழும் நாள் வரைக்கும் நீர் பேச முடியாதவராக மௌனமாய் இருப்பீர்” என்றான்.
1:21 அதேவேளையில் சகரியாவின் வருகைக்காக வெளியே காத்துக் கொண்டிருந்த மக்கள், அவர் ஏன் ஆலயத்தில் நீண்ட நேரமாய் இருக்கின்றார் என யோசிக்கத் தொடங்கினார்கள்.
1:22 அவர் வெளியே வந்தபோது, அவரால் அவர்களோடு பேச முடியவில்லை. அதனால் அவர் ஆலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டிருக்கிறார் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். அவர் பேச முடியாதவராக இருந்தபடியால் அவர்களுடன் சைகை மூலமாக பேசினார்.
1:23 அவரது பணி செய்யும் காலம் முடிவடைந்தபோது, தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றார்.
1:24 இந்த நாட்களுக்குப் பின் அவரது மனைவி எலிசபெத் கருத்தரித்து, ஐந்து மாதங்களாக பிறர் கண்ணில் படாதிருந்தாள்.
1:25 அப்போது அவள், “கர்த்தரே இதைச் செய்தார். இந்த நாட்களில் அவர் எனக்குத் தயவு காட்டி, என் மக்களிடையே எனக்கிருந்த அவமானத்தை நீக்கிவிட்டார்” என்றாள்.
1:26 ஆறாம் மாதத்தில், கலிலேயாவில் உள்ள நாசரேத்து என்ற பட்டணத்திலுள்ள ஒரு கன்னிப்பெண்ணிடம், காபிரியேல் தூதனை இறைவன் அனுப்பினார்.
1:27 அந்த கன்னிப்பெண்ணின் பெயர் மரியாள். அவள் தாவீதின் வழித்தோன்றலான யோசேப்பு என்னும் பெயருள்ள ஒருவனைத் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தாள்.
1:28 அந்தத் தூதன் அவளிடம் வந்து, “மிகவும் தயவு பெற்றவளே வாழ்க! கர்த்தர் உன்னுடன் இருக்கின்றார்” என்றான்.
1:29 அவன் சொன்ன வார்த்தையைக் கேட்ட மரியாள் மிகவும் கலக்கமடைந்தவளாய், இந்த வாழ்த்துதல் எத்தகையதோ என்று யோசிக்கத் தொடங்கினாள்.
1:30 அப்போது அந்தத் தூதன் அவளிடம், “மரியாளே, பயப்படாதே! நீ இறைவனிடத்தில் தயவு பெற்றிருக்கிறாய்.
1:31 நீ கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவருக்கு இயேசு என்று பெயரிட வேண்டும்.
1:32 அவர் உயர்வானவராய் இருப்பார். அதி உன்னதமானவரின் மகன் என அழைக்கப்படுவார். அவருடைய தந்தையாகிய தாவீதின் அரியணையை இறைவனாகிய கர்த்தர் அவருக்குக் கொடுப்பார்.
1:33 அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய அரசு ஒருபோதும் முடிவு பெறாது” என்றான்.
1:34 அப்போது மரியாள் அந்தத் தூதனிடம், “இது எப்படி நடக்கும்? இன்னும் நான் கன்னியாய் இருக்கின்றேனே” என்றாள்.
1:35 அதற்கு தூதன், “பரிசுத்த ஆவியானவர் உன்னிடம் வருவார், அதி உன்னதமானவரின் வல்லமை உன்னை சூழ்ந்துகொள்ளும். எனவே பிறக்கப் போகும் குழந்தை பரிசுத்தமானது என்றும், இறைவனின் மகன் என்றும் அழைக்கப்படுவார்.
1:36 உனது உறவினளான எலிசபெத்தும் தனது முதிர்வயதில் ஒரு குழந்தையைப் பெற இருக்கின்றாள். கருத்தரிக்க முடியாதவள் என எண்ணப்பட்டவள் இப்போது கருத்தரித்து ஆறு மாதங்களாகின்றன.
1:37 இறைவனால் செய்ய முடியாத காரியம் ஒன்றும் இல்லை” என்றான்.
1:38 அதற்கு மரியாள், “இதோ நான் கர்த்தரின் அடிமை. நீர் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். அப்போது தூதன் அவளை விட்டுச் சென்றான்.
1:39 அந்நாட்களில் மரியாள் புறப்பட்டு யூதேயாவின் மலைநாட்டிலுள்ள ஒரு பட்டணத்திற்கு ஆர்வத்தோடு விரைந்து சென்றாள்.
1:40 அங்கே அவள் சகரியாவின் வீட்டிற்குள் சென்று, எலிசபெத்துக்கு ஆசி கூறினாள்.
1:41 மரியாளுடைய வாழ்த்துதலை எலிசபெத் கேட்டதும், அவளுடைய வயிற்றில் இருந்த குழந்தை துள்ளியது. அப்போது எலிசபெத் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு,
1:42 உரத்த குரலில், “நீ பெண்களுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள். நீ பெற்றெடுக்கப் போகும் பிள்ளையும் ஆசீர்வதிக்கப்பட்டது!
1:43 எனது ஆண்டவரின் தாய் என்னிடம் வர, நான் எவ்வளவாய் தயவு பெற்றேன்!
1:44 உமது வாழ்த்துதலின் சத்தம் கேட்டதுமே, எனது வயிற்றில் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியினால் துள்ளிற்று.
1:45 கர்த்தர் தனக்குச் சொன்னது நிறைவேறும் என்று விசுவாசித்தவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே!” என்றாள்.
1:46 அப்போது மரியாள்: “என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது.
1:47 என் ஆவி என் இரட்சகராகிய இறைவனில் பெருமகிழ்ச்சியடைகிறது.
1:48 ஏனெனில், அவர் தமது அடிமையின் தாழ்மை நிலையைத் தயவுடன் பார்த்தார். இப்பொழுதிலிருந்து எல்லாத் தலைமுறையினரும் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று அழைப்பார்கள்.
1:49 ஏனெனில் வல்லமையுள்ளவர் எனக்கு அரும்பெரும் காரியங்களைச் செய்தார். பரிசுத்தர் என்பது அவருடைய பெயர்.
1:50 அவருக்குப் பயப்படுகின்றவர்களுக்கு, தலைமுறை தலைமுறையாக இரக்கம் காண்பிக்கிறார்.
1:51 அவர் தமது வலிய கரத்தினால் வல்லமையான செயல்களை நிறைவேற்றினார்; தங்களுடைய உள்ளத்தில் அகந்தையான நினைவு கொண்டவர்களை சிதறடித்தார்.
1:52 ஆளுநர்களை அவர்களுடைய அரியணைகளில் இருந்து கீழே வீழ்த்தினார். ஆனால், தாழ்மையானவர்களையோ உயர்த்தினார்.
1:53 பசியாய் இருந்தவர்களை நன்மைகளால் நிரப்பினார். ஆனால் செல்வந்தர்களையோ வெறுமையாய் அனுப்பினார்.
1:54 ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததியினருக்கும் என்றென்றுமாக இரக்கம் காண்பிப்பேன் என,
1:55 அவர் நம்முடைய முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைவில்கொண்டு, தமது பணியாளனாகிய இஸ்ரயேலுக்கு உதவி செய்தார்” என்று பாடினாள்.
1:56 மரியாள் எலிசபெத்துடன் மூன்று மாதங்கள் தங்கியிருந்து, அதன்பின் தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றாள்.
1:57 எலிசபெத்திற்கு பிள்ளை பெறும் காலம் வந்தபோது, அவள் ஒரு மகனைப் பெற்றாள்.
1:58 அவளுடைய அயலவர்களும், உறவினர்களும் கர்த்தர் அவளுக்குப் பெரிதான இரக்கம் காண்பித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டபோது, அவளுடன் சேர்ந்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.
1:59 எட்டாம் நாளில், பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்வதற்காக அயலவர்களும் உறவினர்களும் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் குழந்தைக்கு அவனுடைய தகப்பனின் பெயரின்படியே, சகரியா என்று பெயரிட நினைத்தார்கள்.
1:60 ஆனால் குழந்தையின் தாயோ, “இல்லை! அவன் யோவான் என்றே அழைக்கப்பட வேண்டும்” என்று சொன்னாள்.
1:61 அதற்கு அவர்கள் அவளிடம், “உனது உறவினர்களுள் அந்தப் பெயருடைய எவரும் இல்லையே” என்றார்கள்.
1:62 பின்னர் அவர்கள் பிள்ளையின் தகப்பன் என்ன பெயரிட விரும்புகிறார் என்று அறிவதற்கு, அவரிடம் சைகையினால் கேட்டார்கள்.
1:63 அவர் ஒரு கற்பலகையைக் கேட்டு வாங்கி, அவர்கள் எல்லோரும் வியப்படையத்தக்கதாக, “இவனுடைய பெயர் யோவான்” என்று எழுதினார்.
1:64 உடனே அவரது வாய் திறக்கப்பட்டு பேசத் தொடங்கி, இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார்.
1:65 அயலவர்கள் எல்லோரும் திகிலடைந்தார்கள். இந்தக் காரியங்களைக் குறித்து யூதேயாவின் மலைநாடு எங்கும் மக்கள் பேசிக்கொண்டார்கள்.
1:66 இதைக் கேள்விப்பட்ட எல்லோரும், “இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாய் இருக்குமோ?” என்று சிந்தித்தார்கள். ஏனெனில், கர்த்தரின் கரம் அவனுடன் இருந்தது.
1:67 அந்தப் பிள்ளையின் தகப்பனான சகரியா பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு இறைவாக்கு உரைத்ததாவது:
1:68 “இஸ்ரயேலின் இறைவனாகிய கர்த்தருக்குத் துதி உண்டாவதாக! ஏனெனில் அவர் தம்முடைய மக்களைத் தேடி வந்து மீட்டுக்கொண்டார்.
1:69 அவர் தமது அடியவன் தாவீதின் குடும்பத்திலிருந்து, நாம் இரட்சிப்பு அடைவதற்கான வல்லமையான இரட்சணியக் கொம்பை எழுப்பியிருக்கிறார்.
1:70 இதை தம்முடைய பரிசுத்த இறைவாக்கினர் மூலமாக நெடுங்காலத்திற்கு முன்பே அவர் சொல்லியிருந்தார்.
1:71 அதன்படி, நம்முடைய பகைவரிடமிருந்தும், நம்மை வெறுக்கும் எல்லோருடைய கைகளிலிருந்தும் நமக்கு விடுதலையை ஏற்படுத்துவேன் என்றும்,
1:72 அவருடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்து, நம்முடைய முற்பிதாக்களுக்கு இரக்கம் காண்பிப்பேன் என்றும் சொல்லியிருக்கின்றார்.
1:73 மேலும், நமது தந்தையான ஆபிரகாமுக்கு ஆணையிட்டுக் கொடுத்திருக்கின்றபடி,
1:74 நம்முடைய பகைவருடைய கையினின்று நம்மைத் தப்புவித்து, அவருக்கு முன்பாகப் பயமின்றி பணி செய்யவும்,
1:75 நாம் உயிரோடிருக்கின்ற காலமெல்லாம் அப்பணியை பரிசுத்தத்தோடும் நீதியோடும் செய்யவும் நமக்கு வழியமைத்தார்.
1:76 “என் பிள்ளையே, நீயோ, அதி உன்னதமானவருடைய இறைவாக்கினன் என்று அழைக்கப்படுவாய்; ஏனெனில், நீ கர்த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ணும்படி அவருக்கு முன்பாகப் போவாய்.
1:77 அவருடைய மக்களுக்கு, தங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுவதனால் கிடைக்கும் இரட்சிப்பின் அறிவைத் தெரிவிப்பாய்.
1:78 நம்முடைய இறைவனின் மிகுந்த இரக்கத்தினாலே, பரலோகத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மிடம் வருகின்றது.
1:79 அது இருளில் வாழ்கின்றவர்களுக்கும், மரண இருளில் இருக்கின்றவர்களுக்கும் ஒளியைத் தந்து, நமது கால்களை சமாதானத்தின் வழியில் நடத்தும்.”
1:80 குழந்தையாய் இருந்த யோவான் வளர்ந்து ஆவியில் வலிமையடைந்தான்; அவன் இஸ்ரயேலரின் முன் வெளியரங்கமாக வரும் காலம் வரைக்கும் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தான்.