Luke 4
4:1 இயேசு பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவராய், யோர்தான் நதியிலிருந்து திரும்புகையில் ஆவியானவரால் பாலைநிலத்திற்கு வழிநடத்தப்பட்டார்.
4:2 அங்கே அவர் பிசாசினால் நாற்பது நாட்களாக சோதிக்கப்பட்டார். அந்நாட்களில், அவர் ஒன்றும் உண்ணவில்லை. அந்த நாட்கள் முடிந்தவுடன், அவர் பசியாயிருந்தார்.
4:3 பிசாசு அவரிடம், “நீர் இறைவனின் மகனானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும்” என்றான்.
4:4 அதற்கு இயேசு, “ ‘மனிதன் அப்பத்தினாலே மட்டும் உயிர் வாழ்வதில்லை’ என்று எழுதியிருக்கிறதே” எனப் பதிலளித்தார்.
4:5 பிசாசு அவரை உயரமான ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று, ஒரு நொடியில் உலகத்தின் எல்லா அரசுகளையும் அவருக்குக் காண்பித்தான்.
4:6 பிசாசு அவரிடம், “இந்த அரசுகள் எல்லாவற்றின் அதிகாரத்தையும், மாட்சிமையையும் நான் உமக்குத் தருவேன். ஏனெனில் இவை எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நான் விரும்பினால் இவற்றை எவருக்கும் கொடுக்க என்னால் முடியும்.
4:7 எனவே நீர் என்னை ஆராதித்தால், இவையெல்லாம் உமக்குச் சொந்தமாகும்” என்றான்.
4:8 அதற்கு இயேசு, “ ‘உன் இறைவனாகிய ஆண்டவரை ஆராதித்து, அவரை மட்டுமே வழிபடுவாயாக’ என்று எழுதியிருக்கின்றதே” என்று பதிலளித்தார்.
4:9 பின்பு பிசாசு அவரை எருசலேம் நகரத்திற்குக் கொண்டுபோய், ஆலயத்தின் உச்சியிலே நிறுத்தி, “நீர் இறைவனின் மகனானால், இங்கிருந்து கீழே குதியும்.
4:10 ஏனெனில், “ ‘உம்மை கவனமாய் பாதுகாக்கும்படி, இறைவன் தமது தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்;
4:11 உமது பாதம் கற்களின் மீது மோதாதபடி, அவர்கள் தமது கைகளினால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்’ என்று எழுதப்பட்டிருக்கிறதே” என்றான்.
4:12 அதற்கு இயேசு, “ ‘உன் இறைவனாகிய கர்த்தரை சோதிக்க வேண்டாம்’ என்றும் எழுதியிருக்கிறதே” என்றார்.
4:13 பிசாசு இவ்விதமாக எல்லா சோதனைகளையும் முடித்த பின்பு, ஒரு சரியான தருணம் கிடைக்கும் வரை இயேசுவைவிட்டு விலகிச் சென்றான்.
4:14 இயேசு பரிசுத்த ஆவியானவரின் வல்லமையுடன், கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றார். அவரைப்பற்றிய செய்தி நாட்டுப்புறம் முழுவதிலும் பரவியது.
4:15 அவர் அவர்களுடைய ஜெபஆலயங்களில் போதித்தார். எல்லோரும் அவரைப் புகழ்ந்தார்கள்.
4:16 அவர் தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்குச் சென்றார். ஓய்வுநாளிலே, தமது வழக்கத்தின்படி அவர் ஜெபஆலயத்திற்குப் போய், அங்கே வேதவசனத்தை வாசிக்கும்படி எழுந்து நின்றார்.
4:17 அங்கே இறைவாக்கினன் ஏசாயாவின் புத்தகச் சுருள் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் அதை விரித்து, பின்வரும் பகுதி எழுதப்பட்டிருந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து வாசித்ததாவது:
4:18 “கர்த்தருடைய ஆவியானவர் என்மேல் இருக்கின்றார். ஏனெனில் ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கும்படி, அவர் என்னை அபிஷேகம் செய்தார். கைதிகளுக்கு விடுதலையை அறிவிக்கவும், பார்வையற்றோருக்குப் பார்வை கிடைக்குமென்று அறிவிக்கவும், ஒடுக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,
4:19 கர்த்தருடைய தயவு நிறைந்த காலத்தைப் பிரசித்தப்படுத்தவுமே அவர் என்னை அனுப்பினார்.”
4:20 வாசித்த பின் அவர் அந்தப் புத்தகச் சுருளைச் சுருட்டி, பணியாளனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு அமர்ந்தார். ஜெபஆலயத்திலிருந்த எல்லோருடைய கண்களும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தன.
4:21 அப்பொழுது அவர் தமது உரையை ஆரம்பித்து, “நீங்கள் கேட்ட இந்த வேதவசனம் இன்று நிறைவேறியது” என்றார்.
4:22 எல்லோரும் அவரைக் குறித்து நன்றாகப் பேசி, அவருடைய உதடுகளிலிருந்து வந்த கருணை நிறைந்த வார்த்தைகளைக் கேட்டு வியப்படைந்தார்கள். ஆனாலும் அவர்கள், “இவன் யோசேப்பின் மகன் அல்லவா?” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
4:23 இயேசு அவர்களிடம், “ ‘வைத்தியனே உன்னையே குணமாக்கிக் கொள்!’ என்ற பழமொழியை நிச்சயமாகவே நீங்கள் எனக்குச் சொல்வீர்கள். ‘கப்பர்நகூமில் நீ செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டதை, உனது சொந்த ஊராகிய இங்கேயும் செய்’ என்றும் சொல்வீர்கள்” என்றார்.
4:24 பின்பு அவர்களிடம், “ஆயினும் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், எந்த இறைவாக்கினனும் தனது சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
4:25 எலியாவின் காலத்தில் மூன்றரை வருடங்களாக மழை வராமல் வானம் அடைபட்டு, இஸ்ரயேல் எங்கும் கடுமையான பஞ்சம் நிலவியபோது, அங்கே அநேக விதவைகள் இருந்தார்கள் என்பதை நான் நிச்சயமாகச் சொல்கின்றேன்.
4:26 ஆயினும் இஸ்ரயேலில் உள்ள அந்த விதவைகள் எவரிடத்திலும் எலியா அனுப்பப்படவில்லை. ஆனால் சீதோன் நாட்டிலுள்ள சாரிபாத் ஊரிலிருந்த விதவையினிடத்திற்கே அனுப்பப்பட்டார்.
4:27 இறைவாக்கினன் எலிசாவின் காலத்தில், இஸ்ரயேலில் பல தொழுநோயாளிகள் இருந்தார்கள். ஆயினும் அவர்களில் ஒருவனும் அதிலிருந்து எலிசாவினால் குணமாக்கப்படவில்லை; மாறாக சீரியாவைச் சேர்ந்த நாகமான் மட்டுமே குணமாக்கப்பட்டான்” என்றார்.
4:28 இதைக் கேட்டபோது, ஜெபஆலயத்திலிருந்த எல்லா மக்களும் கடுங் கோபமடைந்தார்கள்.
4:29 அவர்கள் எழுந்து பட்டணத்தைவிட்டு அவரைத் துரத்தி, அந்தப் பட்டணம் கட்டப்பட்டிருந்த மலையிலிருந்து அவரைக் கீழே தள்ளிவிடும்படி, மலையுச்சியின் ஓரத்திற்கு அவரைக் கொண்டுபோனார்கள்.
4:30 ஆனால் அவரோ, மக்கள் நடுவே நடந்து அங்கிருந்து சென்று விட்டார்.
4:31 பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் என்னும் பட்டணத்திற்கு போய், ஓய்வுநாளிலே அங்குள்ள மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.
4:32 அவர்கள் அவருடைய போதனையைக் கேட்டு வியப்படைந்தார்கள். ஏனெனில், அவருடைய வார்த்தைகள் அதிகாரமுடையனவாய் இருந்தன.
4:33 ஜெபஆலயத்திலே தீய ஆவியான பேயால் பீடிக்கப்பட்ட ஒருவன் இருந்தான். அவன் உரத்த சத்தமாய் அழைத்து,
4:34 “நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவே போய்விடும்; எங்களோடு உமக்கு என்ன வேலை? எங்களை அழிப்பதற்காகவா வந்திருக்கிறீர்? நீர் யார் என்று எனக்குத் தெரியும். நீர் இறைவனுடைய பரிசுத்தர்!” என்றான்.
4:35 அதற்கு இயேசு, “பேசாதே! அவனைவிட்டு வெளியே போ!” என்று அதட்டினார். அப்போது அந்த தீய ஆவி, அவர்கள் எல்லோருக்கும் முன்பாக அவனைக் கீழே தள்ளிவிட்டு, அவனுக்கு காயம் ஏதும் உண்டாக்காமல் அவனைவிட்டு வெளியேறியது.
4:36 அப்போது எல்லா மக்களும் வியப்படைந்து, “இவை எப்படிப்பட்ட வார்த்தைகள்! அவர் அதிகாரத்தோடும், வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார். அவையும் வெளியேறுகின்றனவே!” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
4:37 அவரைப்பற்றிய இந்தச் செய்தி சுற்றுப்புறத்திலுள்ள பிரதேசம் எங்கும் பரவியது.
4:38 இயேசு ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, சீமோனுடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே சீமோனின் மாமி கடும் காய்ச்சலினால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள். எனவே அவளுக்கு உதவி செய்யும்படி, அவர்கள் இயேசுவிடம் கேட்டார்கள்.
4:39 இயேசுவோ அவள் அருகில் குனிந்து, அந்தக் காய்ச்சலை விலகும்படி அதட்டினார். அது அவளைவிட்டுப் போயிற்று. உடனே அவள் எழுந்து, அவருக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள்.
4:40 பொழுது சாயும் வேளையானபோது, மக்கள் தங்கள் மத்தியிலிருந்த பல்வேறு வியாதிகளினால் பாதிக்கப்பட்டவர்களை இயேசுவினிடம் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர் மேலும் அவர் தமது கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினார்.
4:41 அத்துடன், பலரில் இருந்த பேய்களும், “நீர் இறைவனின் மகன்!” என்று சத்தமிட்டுக்கொண்டு அவர்களிலிருந்து வெளியேறின. அந்தப் பேய்கள் அவரே மேசியா என்று அறிந்திருந்தன. ஆகையால் அவை பேசுவதற்கு இடங்கொடாமல், அவர் அவற்றை அதட்டினார்.
4:42 அதிகாலை வேளையிலே இயேசு புறப்பட்டு, ஒரு தனிமையான இடத்திற்குச் சென்றார். மக்கள் அவரைத் தேடிக்கொண்டு, அவர் இருந்த இடத்திற்கு வந்தபோது, அவர் தங்களைவிட்டு வேறெங்கும் போகாதபடி, அவரைத் தங்களுடன் வைத்துக்கொள்ள முயற்சி செய்தார்கள்.
4:43 ஆனால் அவரோ அவர்களைப் பார்த்து, “நான் மற்றப் பட்டணங்களில் உள்ளவர்களுக்கும் இறைவனுடைய அரசின் நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும். இதற்காகவே நான் அனுப்பப்பட்டேன்” என்றார்.
4:44 எனவே அவர் யூதேயாவிலுள்ள ஜெபஆலயங்களுக்குச் சென்று, தொடர்ந்தும் நற்செய்தியைப் போதித்தார்.