Luke 9
9:1 இயேசு பன்னிரண்டு பேரையும் ஒன்றாக அழைத்து, பேய்களைத் துரத்தவும், நோய்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்தார்.
9:2 அத்துடன், இறைவனுடைய அரசைப் பற்றிப் பிரசங்கிக்கவும், நோயுள்ளவர்களைக் குணமாக்கவும், அவர்களை அனுப்பினார்.
9:3 அவர் அவர்களிடம்: “பயணத்திற்கென்று ஒன்றையும் எடுத்துக்கொண்டு போக வேண்டாம். கைத்தடியையோ, பயணப் பையையோ, உணவையோ, பணத்தையோ, மாற்று உடையையோ கொண்டுபோக வேண்டாம்.
9:4 நீங்கள் எந்த வீட்டுக்குள் போனாலும் அந்த இடத்திலேயே தங்கியிருந்துவிட்டு, பின் அந்த பிரதேசத்தை விட்டுப் புறப்படுங்கள்.
9:5 மக்கள் உங்களை வரவேற்காது போனால், நீங்கள் அவர்களின் பட்டணத்தைவிட்டுப் போகும்போது, அவர்களுக்கு எதிரான சாட்சியாக உங்கள் கால் தூசியை உதறி விடுங்கள்” என்றார்.
9:6 அப்படியே அவர்கள் புறப்பட்டு, கிராமம் கிராமமாகச் சென்று எல்லா இடங்களிலும் நற்செய்தியை அறிவித்து மக்களைக் குணமாக்கினார்கள்.
9:7 சிற்றரசனான ஏரோது, நடந்த எல்லாவற்றையும் கேள்விப்பட்டான். யோவானே இறந்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறான் என்று சிலர் சொன்னதால், அவன் குழப்பமடைந்தான்.
9:8 வேறு சிலர் எலியா தோன்றியிருக்கிறார் என்றும், இன்னும் சிலர் முற்காலத்திலிருந்த இறைவாக்கினர் ஒருவர் உயிர் பெற்று வந்திருக்கிறார் என்றும் சொல்லிக் கொண்டார்கள்.
9:9 ஆனால் ஏரோதுவோ, “நான் யோவானைச் சிரச்சேதம் செய்தேன். ஆயினும் இப்படிப்பட்ட காரியங்களைக் கேள்விப்படுகிறேனே, இவன் யார்?” என்று சொல்லி, இயேசுவைப் பார்க்க முயற்சி செய்தான்.
9:10 அப்போஸ்தலர்கள் திரும்பி வந்து, தாங்கள் செய்ததை இயேசுவுக்கு அறிவித்தார்கள். அவர் அவர்களைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு, தனித்திருப்பதற்காகப் பெத்சாயிதா எனப்பட்ட ஒரு பட்டணத்திற்கு சென்றார்.
9:11 ஆனால் மக்கள் அதை அறிந்து, கூட்டமாய் அவருக்குப் பின் சென்றார்கள். அவர் அவர்களை வரவேற்று, இறைவனுடைய அரசைப்பற்றி அவர்களுடன் பேசி, சுகவீனமாய் இருந்தோரை குணமாக்கினார்.
9:12 மாலை வேளையானபோது பன்னிரண்டு பேரும் அவரிடம் வந்து, “கூடியிருக்கும் இந்த மக்களை அனுப்பி விடும். அவர்கள் சுற்றுப்புறத்திலுள்ள கிராமங்களுக்கும் நாட்டுப் புறத்திற்கும் போய், உணவையும் இருப்பிடத்தையும் தேடிக்கொள்ளட்டும். ஏனெனில், நாம் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் இருக்கின்றோம்” என்றார்கள்.
9:13 அதற்கு இயேசு அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு ஏதாவது உண்ணக் கொடுங்கள்” என்றார். அதற்கு அவர்கள் அவரிடம், “எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் மட்டுமே இருக்கின்றன. நாங்கள் போய் இந்த மக்களுக்கெல்லாம் உணவை வாங்கி வர வேண்டுமோ?” என்றார்கள்.
9:14 அங்கே ஆண்கள் மாத்திரம் ஏறக்குறைய ஐயாயிரம் பேர் இருந்தார்கள். ஆனாலும், அவர் தன்னுடைய சீடர்களிடம், “அவர்களை ஐம்பது பேர்கள் கொண்ட குழுக்களாக உட்கார வையுங்கள்” என்றார்.
9:15 சீடர்களும் அப்படியே செய்தார்கள். எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள்.
9:16 அப்போது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, மேலே வானத்தை நோக்கிப் பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அவற்றைத் துண்டுகளாகப் பிட்டார். பின்பு அவர், அந்தத் துண்டுகளைச் சீடர்களிடத்தில் கொடுத்து, மக்களுக்குப் பரிமாறும்படி சொன்னார்.
9:17 அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான துண்டுகளை, சீடர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள்.
9:18 ஒருமுறை இயேசு தனிமையாக மன்றாடிக் கொண்டிருந்தார். அவருடைய சீடர்களும் அவருடனே இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், “மக்கள் என்னை யார் என்று சொல்கின்றார்கள்?” எனக் கேட்டார்.
9:19 அதற்கு அவர்கள், “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்கிறார்கள்; வேறு சிலர் உம்மை எலியா என்கிறார்கள்; இன்னும் சிலர் உம்மைக் குறித்து, வெகு காலத்திற்கு முன் வாழ்ந்த இறைவாக்கினரில் ஒருவர் உயிர் பெற்று வந்திருப்பதாகச் சொல்கின்றார்கள்” என்றார்கள்.
9:20 அப்போது அவர் அவர்களிடம், “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் என்னை யார் என்று சொல்கின்றீர்கள்?” எனக் கேட்டார். பேதுரு அதற்கு, “நீர் இறைவனின் மேசியா” என்றான்.
9:21 இயேசு அவர்களிடம், “இதை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம்” என கண்டிப்பாய் எச்சரித்தார்.
9:22 மேலும் அவர் அவர்களிடம், “மனுமகன் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டும்; சமூகத் தலைவர்களாலும், தலைமை மதகுருக்களாலும், நீதிச்சட்ட ஆசிரியர்களாலும் புறக்கணிக்கப்பட்டு, கொலை செய்யப்படவும், மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” என்றார்.
9:23 பின்பு அவர் அவர்கள் எல்லோரையும் பார்த்து, “ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னையே துறந்து, தினந்தோறும் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்ற வேண்டும்.
9:24 ஏனெனில், தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகின்றவன் எவனும், அதை இழந்து போவான். என் பொருட்டு தன் உயிரை இழந்து விடுகின்றவனோ, அதைக் காத்துக்கொள்வான்.
9:25 ஒருவன் உலகம் முழுவதையும் தனக்கு உரிமையாக்கிக் கொண்டாலும், தன் ஆத்துமாவை இழந்து போனாலோ அல்லது பறிகொடுத்தாலோ, அதனால் அவனுக்கு நன்மை என்ன?
9:26 எவனாவது என்னைக் குறித்தும், என் வார்த்தையைக் குறித்தும் வெட்கப்பட்டால், மனுமகனும் தனது மகிமையிலும் பிதாவின் மகிமையிலும் பரிசுத்த தூதர்களின் மகிமையிலும் வரும்போது, அவனைக் குறித்தும் வெட்கப்படுவார்.
9:27 “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், இங்கே நிற்கிறவர்களில் சிலர், இறைவனுடைய அரசைக் காணும் முன் மரணமடைய மாட்டார்கள்” என்றார்.
9:28 இயேசு இதைச் சொல்லி ஏறக்குறைய எட்டு நாட்களுக்குப் பின், அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் தன்னுடனே அழைத்துக்கொண்டு, மன்றாடுவதற்கு ஒரு மலைக்குச் சென்றார்.
9:29 அவர் மன்றாடிக் கொண்டிருக்கையில், அவருடைய முகத்தின் தோற்றம் மாறியது. அவருடைய உடைகள் வெண்மையாய் மின்னின.
9:30 மோசே, எலியா ஆகிய இரண்டு பேரும் மகிமையான பிரகாசத்தில் தோன்றி இயேசுவோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.
9:31 அவர்கள், எருசலேமில் விரைவாய் இயேசு நிறைவேற்றப் போகின்ற அவருடைய மரணத்தைக் குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
9:32 பேதுருவும் அவனோடு இருந்தவர்களும் கடுமையான தூக்க மயக்கத்திலிருந்தார்கள். அவர்கள் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தபோது, அவருடைய மகிமையையும் அவருடன் நின்ற இரண்டு மனிதர்களையும் கண்டார்கள்.
9:33 அந்த மனிதர்கள் இயேசுவைவிட்டுப் புறப்படும்போது, பேதுரு அவரிடம், “ஐயா, நாம் இங்கே இருப்பது நல்லது, உமக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும், எலியாவுக்கு ஒன்றுமாக நாம் மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்றான். தான் சொல்வது என்னவென்று அறியாமல் அவன் அப்படிச் சொன்னான்.
9:34 அவன் பேசிக் கொண்டிருக்கையில், ஒரு மேகம் அவர்களை மூடிக்கொண்டது. அம்மேகம் அவர்களை சூழ்ந்து கொண்டபோது, அவர்கள் பயந்தார்கள்.
9:35 அப்போது மேகத்திலிருந்து, “இவர் என் மகன், நான் தெரிவு செய்தவர்; இவர் சொல்வதைக் கேளுங்கள்” என்று ஒரு குரல் கேட்டது;
9:36 அந்தக் குரல் ஒலித்த பின்பு இயேசு மட்டுமே இருப்பதைக் கண்டார்கள். சீடர்களோ, தாங்கள் கண்டதை அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லவில்லை, அவர்கள் இதைத் தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டார்கள்.
9:37 மறுநாள் அவர்கள் மலையில் இருந்து இறங்கி வந்தபோது, ஒரு பெரும் மக்கள் கூட்டம் அவரைச் சந்தித்தது.
9:38 மக்கள் கூட்டத்திலிருந்து ஒருவன் அவரை அழைத்து, “போதகரே, என் பிள்ளையைப் பார்க்கும்படி உம்மைக் கெஞ்சிக் கேட்கின்றேன். அவன் எனக்கு ஒரே பிள்ளை.
9:39 ஒரு ஆவி அவனைப் பிடித்துக்கொள்கின்றது. அப்போது அவன் திடீரென கூச்சலிடுகிறான்; அது அவனை வலிப்புக்குள்ளாக்கும்போது, அவனுடைய வாயில் நுரை தள்ளுகிறது. அது அவனை ஒருபோதும் விட்டுப்போகாமல் அவனை வேதனைப் படுத்துகிறது.
9:40 அதைத் துரத்தும்படி உமது சீடர்களிடம் கெஞ்சிக் கேட்டேன். அவர்களால் முடியவில்லை” என்றான்.
9:41 அப்போது இயேசு, “விசுவாசமில்லாத சீர்கெட்ட தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களுடன் இருப்பேன்? எவ்வளவு காலத்திற்கு நான் உங்களைச் சகித்துக்கொள்ளக் கூடும்? உன் மகனை இங்கே கொண்டுவா” என்றார்.
9:42 அச்சிறுவன் வந்துகொண்டிருக்கும் போதே, பேய் அவனை வலிப்புக்குள்ளாக்கி தரையில் தள்ளி வீழ்த்தியது. ஆனால் இயேசுவோ அந்த தீய ஆவியை அதட்டி, அச்சிறுவனைக் குணமாக்கி, அவனை அவனுடைய தகப்பனிடம் ஒப்படைத்தார்.
9:43 அவர்கள் எல்லோரும் இறைவனுடைய மகத்துவத்தைக் குறித்து வியப்படைந்தார்கள். இயேசு செய்த எல்லாவற்றையும் குறித்து அனைவரும் வியப்படைந்தபோது, அவர் தமது சீடர்களிடம்,
9:44 “நான் உங்களுக்குச் சொல்லப் போவதைக் கவனமாய்க் கேளுங்கள்: மனுமகன் காட்டிக் கொடுக்கப்பட்டு, மனிதருடைய கைகளிலே ஒப்புக்கொடுக்கப்படுவார்” என்றார்.
9:45 ஆனால் அவர்களோ, அதன் அர்த்தத்தை விளங்கிக்கொள்ளவில்லை. அது அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்ததனால், அவர்களால் அதை அறிந்துகொள்ள முடியவில்லை. அதைக் குறித்து அவரிடம் கேட்கவும் பயந்தார்கள்.
9:46 சீடர்களுக்கிடையில், தங்களில் யார் பெரியவன் என்பதுபற்றி ஒரு வாக்குவாதம் எழுந்தது.
9:47 இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, ஒரு சிறு பிள்ளையைத் தூக்கியெடுத்து, தம் அருகே நிறுத்தினார்.
9:48 பின்பு அவர் அவர்களிடம், “இந்தச் சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்கின்றவன் எவனோ, அவன் என்னை ஏற்றுக்கொள்கின்றான்; என்னை ஏற்றுக்கொள்கின்றவன் எவனோ, அவன் என்னை அனுப்பியவரை ஏற்றுக்கொள்கின்றான். உங்கள் எல்லோரிலும் சிறியவனாய் இருக்கின்றவன் எவனோ, அவனே பெரியவனாய் இருக்கின்றான்” என்றார்.
9:49 அப்போது யோவான் அவரிடம், “ஆண்டவரே, ஒருவன் உமது பெயரில் பேய்களைத் துரத்துவதை நாங்கள் கண்டோம். அவன் எங்களில் ஒருவனல்லாதபடியால், நாங்கள் அவனைத் தடுக்க முயற்சித்தோம்” என்றான்.
9:50 அதற்கு இயேசு, “அவனைத் தடுக்க வேண்டாம். ஏனெனில் நமக்கு விரோதமாய் இராதவன், நமது சார்பாகவே இருக்கின்றான்” என்றார்.
9:51 தாம் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் காலம் நெருங்கியபோது, இயேசு மனவுறுதியோடு எருசலேமை நோக்கிப் புறப்பட்டார்.
9:52 அவருக்கான ஆயத்தங்களைச் செய்யும்படி, அவர் தமக்கு முன்னால் தூதுவர்களை அனுப்பினார். அவர்கள் சமாரியாவின் ஒரு கிராமத்திற்குப் போனார்கள்.
9:53 அவர் எருசலேமை நோக்கிப் போய்க் கொண்டிருந்தபடியால், அக்கிராமத்திலுள்ள மக்கள் அவரை வரவேற்கவில்லை.
9:54 அவருடைய சீடர்களான யாக்கோபும் யோவானும் இதைக் கண்டபோது அவரிடம், “ஆண்டவரே, எலியா செய்தது போல், இவர்களை அழிக்கும்படி நாங்கள் வானத்திலிருந்து நெருப்பை வரவழைக்க நீர் விரும்புகிறீரா?” என்றார்கள்.
9:55 ஆனால் இயேசுவோ அவர்களைத் திரும்பிப் பார்த்து, “நீங்கள் எப்படிப்பட்ட ஆவிக்கு உரியவர்கள் என்று அறியாமல் இருக்கின்றீர்களே. ஏனெனில், மனுமகன் மனிதருடைய உயிர்களை அழிக்க வரவில்லை. அவற்றை இரட்சிக்கவே வந்தார்” என்று கண்டித்தார்.
9:56 அதன்பின் அவர்கள் வேறு கிராமத்திற்குப் போனார்கள்.
9:57 அவர்கள் வழியில் நடந்து போய்க் கொண்டிருக்கையில், ஒருவன் அவரிடம், “நீர் எங்கே போனாலும் நான் உம்மைப் பின்பற்றுவேன்” என்றான்.
9:58 இயேசு அதற்குப் பதிலாக, “நரிகளுக்கு குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, ஆனால் மனுமகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.
9:59 அவர் இன்னொருவனைப் பார்த்து, “என்னைப் பின்பற்றி வா” என்றார். ஆனால் அவனோ, “ஆண்டவரே, முதலில் நான் போய் என் தகப்பனின் மரண அடக்கத்தை முடித்துவிட்டு வர அனுமதி தாரும்” என்றான்.
9:60 அப்போது இயேசு அவனிடம், “இறந்தவர்களை அடக்கம் செய்ய, இறந்தவர்கள் இருக்கின்றார்கள். நீ போய் இறைவனுடைய அரசைப் பிரசித்தப்படுத்து” என்றார்.
9:61 இன்னொருவன் அவரிடம், “ஆண்டவரே, நான் உம்மைப் பின்பற்றுவேன்; ஆனால், நான் முதலில் திரும்பிப் போய், எனது குடும்பத்தவர்களிடம் விடைபெற்று வர அனுமதி தாரும்” என்றான்.
9:62 அதற்கு இயேசு, “கலப்பையில் கையை வைத்துவிட்டு, பின்னால் திரும்பிப் பார்க்கின்ற எவனும், இறைவனுடைய அரசின் பணிக்கு உகந்தவனல்ல” என்றார்.