John 1
1:1 ஆதியிலே வார்த்தையானவர் இருந்தார். அந்த வார்த்தையானவர் இறைவனுடன் இருந்தார். அந்த வார்த்தையானவர் இறைவனாயிருந்தார்.
1:2 அவர் ஆதியிலேயே இறைவனுடன் இருந்தார்.
1:3 அவர் மூலமாகவே எல்லாம் படைக்கப்பட்டன; படைக்கப்பட்டிருப்பவைகளில் எதுவுமே அவரில்லாமல் படைக்கப்படவில்லை.
1:4 அவரில் வாழ்வு இருந்தது; அந்த வாழ்வே மனித இனத்திற்கு வெளிச்சமாயிருந்தது.
1:5 அந்த வெளிச்சம் இருளிலே பிரகாசிக்கிறது, ஆனால் இருள் அதை ஒருபோதும் மேற்கொள்ளவில்லை.
1:6 இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன் இருந்தான். அவனுடைய பெயர் யோவான்.
1:7 தனக்கூடாக எல்லா மக்களும் விசுவாசிக்கும்படியாக அந்த ஒளியைப் பற்றி சாட்சி கூறுகின்ற ஒரு சாட்சியாகவே அவன் வந்தான்.
1:8 அவன் அந்த ஒளியல்ல, மாறாக அவன் அந்த ஒளிக்கான ஒரு சாட்சியாக வந்தவன்.
1:9 ஒவ்வொரு மனிதனுக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கும் அந்த உண்மையான ஒளி, உலகத்திற்குள் வந்து கொண்டிருந்தது.
1:10 வார்த்தையானவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாகப் படைக்கப்பட்டிருந்தும், உலகமோ அவரை யாரென்று அறிந்துகொள்ளவில்லை.
1:11 அவர் தமக்குரிய இடத்திற்கே வந்தார். ஆனால் அவருடைய சொந்த மக்களோ, அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
1:12 ஆயினும் அவரை ஏற்றுக்கொண்டு அவருடைய பெயரில் விசுவாசம் வைத்த அனைவருக்கும், இறைவனுடைய பிள்ளைகளாவதற்கான உரிமையை அவர் கொடுத்தார்.
1:13 இப்பிள்ளைகள், இரத்த உறவினாலோ மனித தீர்மானத்தினாலோ புருஷனுடைய விருப்பத்தினாலோ உண்டானவர்கள் அல்லர். மாறாக, இவர்கள் இறைவனால் பிறப்பிக்கப்பட்டவர்கள்.
1:14 வார்த்தையானவர் மனித உடல் எடுத்து நமது மத்தியில் வாழ்ந்தார், அவரது மகிமையை நாங்கள் கண்கூடாகக் கண்டோம். கிருபையும் உண்மையும் நிறைந்த அந்த மகிமை, பிதாவின் ஒரே மகனுக்கே உரித்தான மகிமை.
1:15 யோவான் அவரைக் குறித்து சாட்சி கொடுத்து, “எனக்குப் பின் வருகின்றவர், என்னிலும் மேன்மையானவராய் இருக்கின்றார். ஏனெனில், ‘அவர் எனக்கு முன்னரே இருந்தவர்’ என்று இவரைப்பற்றியே நான் சொன்னேன்” என சத்தமிட்டுச் சொன்னான்.
1:16 அவருடைய கிருபையின் நிறைவிலிருந்து, நாம் எல்லோருமே ஆசீர்வாதத்தின்மேல் ஆசீர்வாதம் பெற்றிருக்கிறோம்.
1:17 ஏனெனில், நீதிச்சட்டம் மோசேயின் மூலமாய் கொடுக்கப்பட்டது; கிருபையும் உண்மையுமோ இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வந்தது.
1:18 இறைவனை எவருமே ஒருபோதும் கண்டதில்லை. பிதாவாகிய இறைவனுக்கு மிக நெருங்கியவரான அவரின் ஒரே மகனே அவரைத் தெரியப்படுத்தினார்.
1:19 எருசலேமைச் சேர்ந்த யூத தலைவர்கள், யார் இந்த யோவான் என்று விசாரித்து அறியும்படி, மதகுருக்களையும் லேவியரையும் அவனிடம் அனுப்பினார்கள்; அப்போது அவன் சாட்சியாக,
1:20 “நான் மேசியா அல்ல” என்று அறிவித்தான். ஆம், அவன் அதனை மறுக்காமல் ஒளிவுமறைவின்றி அறிவித்தான்.
1:21 அப்போது அவர்கள் அவனிடம், “அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?” என்றார்கள். அதற்கு அவன், “நான் எலியா அல்ல” என்றான். தொடர்ந்து அவர்கள், “நீர் வரவேண்டிய இறைவாக்கினரா?” என்று கேட்டார்கள். அதற்கும் அவன், “இல்லை” என்றான்.
1:22 இறுதியாக அவர்கள், “நீர் யார்? எங்களை அனுப்பியவர்களுக்கு நாங்கள் போய்ச் சொல்லும்படி, நீர் ஒரு பதிலைத் தாரும். உம்மைக் குறித்து நீர் என்ன சொல்கின்றீர்?” என்று கேட்டார்கள்.
1:23 யோவான் அதற்கு, இறைவாக்கினன் ஏசாயா கூறியிருந்த வார்த்தைகள் மூலமாகப் பதிலளித்து, “ ‘கர்த்தருக்கு வழியை நேராக்குங்கள்’ என்று, பாலைநிலத்தில் கூப்பிடுகின்றவனுடைய சத்தம் நானே” என்றான்.
1:24 பரிசேயர்களால் அனுப்பப்பட்ட சிலர்
1:25 அவனிடம், “நீர் மேசியாவுமல்ல, எலியாவுமல்ல, வரவேண்டிய இறைவாக்கினருமல்ல என்றால், ஏன் நீர் ஞானஸ்நானம் கொடுக்கின்றீர்?” என்று கேட்டார்கள்.
1:26 யோவான் அதற்குப் பதிலாக, “நான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கின்றேன். ஆனால் உங்கள் நடுவில் ஒருவர் நிற்கிறார். நீங்களோ அவரை அறியாதிருக்கிறீர்கள்.
1:27 எனக்குப் பின் வருகின்ற அவரது காலணிகளைச் சுமப்பதற்கும் நான் தகுதியுடையவன் அல்ல” என்றான்.
1:28 இவையெல்லாம் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்த பெத்தானியாவில் நடைபெற்றன.
1:29 மறுநாளிலே, இயேசு தன்னிடம் வருவதை யோவான் கண்டு, “இதோ, இறைவனின் ஆட்டுக்குட்டி! இவரே உலகத்தின் பாவத்தை நீக்குகின்றவர்.
1:30 ‘எனக்குப் பின் வருகின்றவர் என்னிலும் மேன்மையானவராய் இருக்கின்றார். ஏனெனில் அவர் எனக்கு முன்பே இருந்தவர்’ என்று நான் சொன்னபோது, இவரைக் குறித்தே சொன்னேன்.
1:31 நானும் அவரை அறியாதிருந்தேன். அவரை இஸ்ரயேலருக்கு வெளிப்படுத்தவே, நான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்க வந்தேன்” என்றான்.
1:32 பின்பு யோவான், “ஆவியானவர் ஒரு புறாவைப் போன்ற உருவம் கொண்டவராய் பரலோகத்திலிருந்து இறங்கி, அவர்மீது தங்குவதைக் கண்டேன்.
1:33 தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் எனக்கு கூறியிருக்காவிட்டால், நானும் அவரை அறிந்திருக்க மாட்டேன். ஆனால் என்னை அனுப்பியவரோ, ‘பரிசுத்த ஆவியானவர் இறங்கி, எவர் மேல் தங்குவதை நீ காண்கின்றாயோ, அவரே பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் கொடுக்கின்றவர்’ என்று சொல்லியிருந்தார்.
1:34 இதை நான் கண்டேன். இவரே இறைவனின் மகன் என்று சாட்சி கூறுகிறேன்” என்றான்.
1:35 மறுநாளிலே, திரும்பவும் யோவான் தன்னுடைய சீடர்களில் இரண்டு பேருடன் அங்கு நின்று கொண்டிருக்கையில்,
1:36 இயேசு அவ்வழியாய் கடந்து போவதைக் கண்டு, “இதோ, இறைவனுடைய ஆட்டுக்குட்டி!” என்றான்.
1:37 அவன் இப்படிச் சொன்னதை அந்த இரண்டு சீடர்களும் கேட்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்கள்.
1:38 இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின்பற்றி வருவதைக் கண்டு, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், “ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள். “ரபீ” என்பதன் அர்த்தம் “போதகர்” என்பதாகும்.
1:39 இயேசு அவர்களுக்குப் பதிலாக, “வந்து, நீங்களே பாருங்கள்” என்றார். எனவே அவர்கள் அவருடன் போய், அவர் தங்கும் இடத்தைக் கண்டு, அந்த நாளை அவருடன் கழித்தார்கள். அப்போது நேரம் பிற்பகல் நான்கு மணியாயிருந்தது.
1:40 யோவான் சொன்னதைக் கேட்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்ற அந்த இருவரில் ஒருவனின் பெயர் அந்திரேயா; இவன் சீமோன் பேதுருவின் சகோதரன்.
1:41 அந்திரேயா போய், முதலில் தன் சகோதரன் சீமோனைக் கண்டு அவனிடம், “நாங்கள் மேசியாவைக் கண்டுகொண்டோம்” என்று சொன்னான். மேசியா என்பதற்கு, கிறிஸ்து என்று அர்த்தமாகும்.
1:42 அவன் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தான். இயேசு அவனை உற்று நோக்கி, “யோவானின் மகனாகிய சீமோனே, நீ கேபா என்று அழைக்கப்படுவாய்” என்றார். கேபா என்ற சொல்லின் கிரேக்க மொழியாக்கம் பேதுரு என்பதாகும்.
1:43 மறுநாளிலே, இயேசு கலிலேயாவுக்குப் போகத் தீர்மானித்தார். அவர் பிலிப்புவைக் கண்டு அவனிடம், “என்னைப் பின்பற்று” என்றார்.
1:44 அந்திரேயாவையும் பேதுருவையும் போலவே பிலிப்புவும் பெத்சாயிதா பட்டணத்தைச் சேர்ந்த ஒருவன்.
1:45 பின்பு பிலிப்பு, நாத்தான்வேலைக் கண்டு அவனிடம், “மோசே தமது நீதிச்சட்டத்தில் குறிப்பிட்டிருந்தவரை நாங்கள் கண்டுகொண்டோம். அவரைக் குறித்தே இறைவாக்கினர்களும் எழுதியிருக்கிறார்கள். நாசரேத் ஊரைச் சேர்ந்தவரும், யோசேப்பின் மகனுமான இயேசுவே அவர்” என்றான்.
1:46 நாத்தான்வேலோ அவனிடம், “நாசரேத்தா! அங்கிருந்து நன்மை ஏதும் வரக் கூடுமோ?” என்று கேட்டான். அதற்கு பிலிப்பு, “வா, வந்து பார்” என்றான்.
1:47 அப்படியே நாத்தான்வேல், தம்மை நோக்கி வருவதை இயேசு கண்டு, அவனைக் குறித்து, “இவன் கபடம் ஏதுமில்லாத உண்மையான இஸ்ரயேலன்” என்றார்.
1:48 அப்போது நாத்தான்வேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான். இயேசு அவனுக்கு மறுமொழியாக, “பிலிப்பு உன்னைக் கூப்பிடுமுன், நீ அத்தி மரத்தின் கீழ் இருந்தாயே; அப்போதே நான் உன்னைக் கண்டுகொண்டேன்” என்றார்.
1:49 அப்போது நாத்தான்வேல், “போதகரே, நீரே இறைவனின் மகன், நீரே இஸ்ரயேலின் அரசன்” என்று அறிவித்தான்.
1:50 அதற்கு இயேசு அவனிடம், “நான் அத்தி மரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று உனக்கு கூறியதாலா நீ என்னை விசுவாசிக்கின்றாய்? நீ இதைவிட சிறப்பானவற்றைக் காண்பாய்” என்றார்.
1:51 மேலும் அவர் தொடர்ந்து, “நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், பரலோகம் திறந்திருப்பதையும், இறைவனுடைய தூதர்கள் மனுமகனிடத்தில் இருந்து மேலே போவதையும், அவரிடத்திற்கு இறங்கி வருவதையும் காண்பீர்கள்” என்றார்.