John 11
11:1 லாசரு என்னும் ஒருவன் வியாதியால் பீடிக்கப்பட்டிருந்தான். அவன் பெத்தானியா ஊரைச் சேர்ந்தவன். அவன் தனது சகோதரிகளான மரியாளுடனும் மார்த்தாளுடன் அங்கே வாழ்ந்து வந்தான்.
11:2 இந்த மரியாளே, பின்பு ஆண்டவரின்மீது வாசனைத் தைலத்தை ஊற்றி, அவருடைய பாதங்களைத் தன்னுடைய தலைமுடியினால் துடைத்தவள். இவளுடைய சகோதரனாகிய லாசருவே வியாதியால் பீடிக்கப்பட்டிருந்தான்.
11:3 எனவே லாசருவின் சகோதரிகள், “ஆண்டவரே, நீர் நேசிக்கின்றவன் வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கிறான்” என்ற செய்தியை அனுப்பினார்கள்.
11:4 இயேசு இதைக் கேட்டபோது அவர், “இந்த வியாதி மரணத்தில் முடிவடையாது. இது இறைவனுடைய மகிமைக்கே, இதன் மூலமாக இறைவனுடைய மகனும் மகிமைப்படுவார்” என்றார்.
11:5 இயேசு, மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியிடத்திலும் லாசருவிலும் அன்பாயிருந்தார்.
11:6 ஆயினும் லாசரு வியாதியுடனிருக்கிறான் என்று அவர் கேள்விப்பட்டபோது, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் தங்கியிருந்தார்.
11:7 பின்பு அவர் தமது சீடர்களிடம், “திரும்பவும் நாம் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்” என்றார்.
11:8 ஆனால் அவர்களோ, “போதகரே, சற்று முன்னதாகத்தான் யூதர்கள் உம்மீது கல்லெறிய முயன்றார்கள். திரும்பவும் நீர் அங்கே போகப் போகின்றீரோ?” என்று கேட்டார்கள்.
11:9 இயேசு அதற்கு மறுமொழியாக, “பகல் வேளையில் பன்னிரண்டு மணி நேரம் இருக்கின்றதல்லவா? பகல் வேளையில் நடக்கின்றவன் உலகத்தின் வெளிச்சத்தைக் காண்பதால், அவன் இடறி விழ மாட்டான்.
11:10 அவன் இரவில் நடக்கின்றபோது அவனுக்கு வெளிச்சம் இல்லாதபடியால், இடறி விழுகிறான்” என்றார்.
11:11 அவர் இதைச் சொல்லி முடித்த பின்பு, அவர் மேலும் சொன்னதாவது: “நம்முடைய சிநேகிதன் லாசரு நித்திரையாயிருக்கிறான்; நான் அங்கே போய், அவனை எழுப்பப் போகின்றேன்” என்றார்.
11:12 சீடர்கள் அதற்கு மறுமொழியாக, “போதகரே, அவன் நித்திரையாயிருந்தால் அவன் குணமடைவான்” என்றார்கள்.
11:13 இயேசு அவனுடைய மரணத்தைக் குறித்துப் பேசினார். அவருடைய சீடர்களோ, இயல்பான நித்திரையைக் குறித்தே அவர் சொன்னார் என்று நினைத்தார்கள்.
11:14 அப்போது இயேசு, “லாசரு இறந்துவிட்டான்” என்று வெளிப்படையாக அவர்களுக்குச் சொல்லி,
11:15 “நான் அங்கே இல்லாததைக் குறித்து, உங்கள் பொருட்டு மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் நீங்கள் விசுவாசிப்பதற்கு அது உதவியாயிருக்கும். நாம் அவனிடம் போவோம் வாருங்கள்” என்றார்.
11:16 அப்போது திதிமு எனப்பட்ட தோமா மற்றச் சீடர்களைப் பார்த்து, “வாருங்கள், நாமும் மரணிப்பதற்கு அவருடன் போவோம்” என்றான்.
11:17 இயேசு பெத்தானியாவுக்கு வந்து சேர்ந்தபோது, லாசரு கல்லறையில் வைக்கப்பட்டு, ஏற்கெனவே நான்கு நாட்களாகி விட்டன என்று கண்டார்.
11:18 பெத்தானியா எருசலேமிலிருந்து இரண்டு மைல்களுக்கும் குறைவான தூரத்திலேயே இருந்தது.
11:19 இறந்துபோன அவர்களுடைய சகோதரனின் பொருட்டு, மார்த்தாளுக்கும் மரியாளுக்கும் ஆறுதல் சொல்வதற்கு அநேக யூதர்கள் அங்கே வந்திருந்தார்கள்.
11:20 இயேசு வருகின்றார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவரைச் சந்திப்பதற்கு அவள் புறப்பட்டு வெளியே சென்றாள். ஆனால் மரியாளோ வீட்டிலேயே இருந்துவிட்டாள்.
11:21 மார்த்தாள் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் எனது சகோதரன் இறந்திருக்க மாட்டான்.
11:22 இப்போதும்கூட நீர் கேட்பது எதுவோ அதை இறைவன் உமக்குக் கொடுப்பார் என்று நான் அறிந்திருக்கிறேன்” என்றாள்.
11:23 அப்போது இயேசு அவளைப் பார்த்து, “உன்னுடைய சகோதரன் திரும்பவும் உயிருடன் எழுந்திருப்பான்” என்றார்.
11:24 அதற்கு மார்த்தாள், “கடைசி நாளில் நடைபெறும் உயிர்த்தெழுதலில் அவன் உயிரோடு எழுந்திருப்பான் என்று எனக்குத் தெரியும்” என்றாள்.
11:25 அப்போது இயேசு அவளிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னில் விசுவாசமாயிருக்கின்றவன், இறந்தாலும் வாழ்வான்.
11:26 உயிரோடிருந்து என்னில் விசுவாசிக்கின்றவன் எவனும் ஒருபோதும் இறக்க மாட்டான். நீ இதை விசுவாசிக்கின்றாயா?” என்று கேட்டார்.
11:27 அதற்கு அவள், “ஆம் ஆண்டவரே, நீர் இறைவனின் மகன், உலகத்திற்கு வரவேண்டிய மேசியா. நான் இதை விசுவாசிக்கின்றேன்” என்றாள்.
11:28 அவள் இதைச் சொன்ன பின்பு திரும்பிப் போய், தன்னுடைய சகோதரி மரியாளை ஒரு பக்கமாக அழைத்துக்கொண்டு போய், “போதகர் வந்திருக்கிறார். அவர் உன்னைக் கூப்பிடுகிறார்” என்றாள்.
11:29 மரியாள் இதைக் கேட்டபோது, விரைவாய் எழுந்து அவரிடம் சென்றாள்.
11:30 இயேசு இன்னும் கிராமத்திற்குள் வராமல், தான் மார்த்தாளைச் சந்தித்த இடத்திலேயே இருந்தார்.
11:31 வீட்டிலே மரியாளுடன் இருந்து அவளுக்கு ஆறுதல் கூறிய யூதர்கள், அவள் விரைவாய் எழுந்து புறப்பட்டுப் போவதைக் கண்டபோது, அவர்களும் அவள் பின்னே போனார்கள். அவள் துக்கம் அனுசரிக்க கல்லறைக்குப் போகின்றாள் என்றே அவர்கள் நினைத்தார்கள்.
11:32 இயேசு இருந்த இடத்திற்கு மரியாள் போய்ச் சேர்ந்தபோது, அவள் அவரைக் கண்டு, அவருடைய பாதத்தில் விழுந்து, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால், என்னுடைய சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்றாள்.
11:33 அவள் அழுவதையும், அவளுடன் வந்திருந்த யூதர்கள் அழுவதையும் இயேசு கண்டபோது, அவர் உள்ளம் குமுறி ஆவியில் கலங்கி,
11:34 “அவனை எங்கே வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆண்டவரே வாருங்கள், வந்து பாருங்கள்” என்றார்கள்.
11:35 இயேசு கண்ணீர்விட்டார்.
11:36 அதைக் கண்ட யூதர்கள், “பாருங்கள், இவர் அவனில் எவ்வளவு அன்பாயிருந்தார்!” என்றார்கள்.
11:37 ஆனால் அவர்களில் சிலரோ, “பார்வையற்றவனுடைய கண்களைத் திறந்த இவர், அவன் மரணிக்காமல் தடுத்திருக்கலாமே!” என்றார்கள்.
11:38 இயேசு திரும்பவும் உள்ளம் குமுறியவராய் கல்லறைக்கு வந்தார். அது ஒரு குகையாய் இருந்தது. அதன் வாசலிலே ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.
11:39 இயேசு அங்கு நின்றவர்களைப் பார்த்து, “அந்தக் கல்லை அகற்றுங்கள்” என்றார். அப்போது இறந்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள், “ஆண்டவரே, இப்போது நாற்றம் வீசுமே. அங்கே அவனை வைத்து, நான்கு நாட்கள் ஆயிற்றே” என்றாள்.
11:40 அப்போது இயேசு, “நீ விசுவாசித்தால், இறைவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா?” என்று கேட்டார்.
11:41 எனவே அவர்கள் அந்தக் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, “பிதாவே, என் மன்றாடுதலுக்கு ஏற்கெனவே நீர் பதில் அளித்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
11:42 நீர் எப்போதும் என் மன்றாடுதலை கேட்கின்றவர் என்பதை நான் அறிவேன். ஆயினும் இங்கு நிற்கிற மக்கள், நீரே என்னை அனுப்பினீர் என்று விசுவாசிக்கும்படி, அவர்களுக்காகவே இதைச் சொல்கின்றேன்” என்றார்.
11:43 இயேசு இதைச் சொன்ன பின்பு, “லாசருவே, வெளியே வா!” என்று உரத்த குரலில் அவனை அழைத்தார்.
11:44 இறந்து போனவன் வெளியே வந்தான். அவனுடைய கைகளும் கால்களும் மென்பட்டு துணிகளால் சுற்றப்பட்டிருந்தன. அவனுடைய முகத்தைச் சுற்றியும் ஒரு துணி கட்டப்பட்டிருந்தது. இயேசு அவர்களைப் பார்த்து, “பிரேதத் துணிகளை அவிழ்த்து, அவனைப் போக விடுங்கள்” என்றார்.
11:45 மரியாளைச் சந்திக்க வந்திருந்த பல யூதர்கள் இயேசு செய்ததைக் கண்டு அவரில் விசுவாசம் வைத்தார்கள்.
11:46 ஆனால் அவர்களில் சிலர் பரிசேயரிடத்தில் போய், இயேசு செய்ததைக் குறித்துச் சொன்னார்கள்.
11:47 அப்போது தலைமை மதகுருக்களும் பரிசேயரும் நியாயசபையைக் கூட்டினார்கள். அவர்கள், “நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? இதோ இவன் பல அற்புத அடையாளங்களைச் செய்கின்றானே.
11:48 நாம் இப்படியே இவனைப் போகவிட்டால், எல்லோரும் இவனில் விசுவாசம் வைப்பார்கள். அப்போது ரோமர்கள் வந்து நமது ஆலயத்தையும், நமது இனத்தையும் அழித்து விடுவார்களே” என்றார்கள்.
11:49 அப்போது அந்த வருடத்தின் தலைமை மதகுருவான காய்பா எனப்பட்ட ஒருவன் அவர்களிடம், “நீங்கள் எதுவுமே தெரியாதவர்களாய் இருக்கின்றீர்களே.
11:50 நமது முழு இனமும் அழிவதைப் பார்க்கிலும், மக்களுக்காக ஒருவன் சாவது நல்லது என்று நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கின்றீர்கள்” என்றான்.
11:51 இதை அவன் சுயமாகச் சிந்தித்துச் சொல்லவில்லை. அந்த வருடத்துத் தலைமை மதகுரு என்ற வகையில், யூத மக்களுக்காக இயேசு இறக்கப் போகின்றார் என்றும்,
11:52 அந்த மக்களுக்காக மட்டுமல்ல, சிதறி இருக்கின்ற இறைவனுடைய பிள்ளைகளை ஒன்றாக சேர்க்கும்படியாக இறக்கப் போகின்றார் என்றும் இறைவாக்காகவே அவன் சொன்னான்.
11:53 எனவே அன்றிலிருந்து அவர்கள் அவரைக் கொலை செய்வதற்குச் சூழ்ச்சி செய்தார்கள்.
11:54 ஆகவே இயேசு தொடர்ந்து யூதர்கள் மத்தியிலே வெளிப்படையாக நடமாடவில்லை. அவர் பாலைநிலத்தின் அருகே உள்ள பகுதிக்குப் போய், அங்கே எப்பிராயீம் எனப்பட்ட ஒரு கிராமத்தில் தம்முடைய சீடர்களுடனே தங்கினார்.
11:55 யூதர்களுடைய பஸ்கா பண்டிகைக் காலம் நெருங்கி வந்தது. அப்போது பஸ்கா பண்டிகைக்கு முன்னதாக தங்களுடைய சம்பிரதாய சுத்திகரிப்பைச் செய்துகொள்வதற்காக, அநேகர் நாட்டுப் புறத்திலிருந்து எருசலேமுக்குப் போனார்கள்.
11:56 அவர்கள் இயேசுவைப் பார்க்க விரும்பி அவரைத் தேடினார்கள். அவர்கள் ஆலயப் பகுதியில் நின்றபடி ஒருவரையொருவர் பார்த்து, “இந்தப் பண்டிகைக்கு அவர் வருவாரா, வர மாட்டாரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
11:57 ஆனால் தலைமை மதகுருக்களும் பரிசேயர்களுமோ இயேசுவைக் கைது செய்யும்படி, அவர் இருக்கும் இடத்தை அறிந்தவர்கள் அதைத் தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்கள்.