John 9
9:1 இயேசு நடந்து போகையில், பிறந்ததிலிருந்தே பார்வையற்றிருந்த ஒருவனைக் கண்டார்.
9:2 அவருடைய சீடர்கள் அவரிடம், “போதகரே, இவன் பார்வையற்றவனாய் பிறந்தது யார் செய்த பாவத்தினால்? இவனுடைய பாவத்தினாலா? அல்லது இவனுடைய பெற்றோரின் பாவத்தினாலா?” என்று கேட்டார்கள்.
9:3 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “இவனுடைய பாவத்தினாலோ, இவனுடைய பெற்றோரின் பாவத்தினாலோ அல்ல. இவனுடைய வாழ்க்கையில் இறைவனுடைய செயல்கள் வெளிப்படும்படியாகவே இப்படி ஏற்பட்டிருக்கிறது.
9:4 பகல் வேளையாய் இருக்கும்போதே, என்னை அனுப்பியவருடைய வேலையை நாம் செய்ய வேண்டும். இரவு வருகின்றது, அப்போது ஒருவராலும் வேலை செய்ய முடியாது.
9:5 நான் உலகத்தில் இருக்கையில், நானே உலகத்தின் ஒளியாய் இருக்கின்றேன்” என்றார்.
9:6 அவர் இவைகளைச் சொன்ன பின், தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சிறிதளவு சேறுண்டாக்கி, அவனுடைய கண்களிலே அதைப் பூசினார்.
9:7 பின்பு அவர் அவனிடம், “நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு” என்றார். சீலோவாம் என்பதன் அர்த்தம், “அனுப்பப்பட்டவன்” என்பதாகும். அவன் அப்படியே போய் கழுவி, பார்வையடைந்து வீடு திரும்பினான்.
9:8 அவனுடைய அயலவரும் முன்பு அவன் பிச்சை கேட்டுக் கொண்டிருந்ததைக் கண்டவர்களும், “இங்கே உட்கார்ந்திருந்து பிச்சை கேட்டவன் இவன் அல்லவா?” என்றார்கள்.
9:9 சிலர், “இது அவன் தான்” என்றார்கள். இன்னும் சிலர், “இல்லை, இது அவனைப் போன்ற வேறொருவன்” என்றார்கள். ஆனால் அவனோ, “நான்தான் அவன்” என்றான்.
9:10 அப்போது அவர்கள் அவனிடம், “அப்படியானால் உனக்கு எப்படி பார்வை கிடைத்தது?” என்றார்கள்.
9:11 அதற்கு அவன், “இயேசு என்று அழைக்கப்படும் ஒருவர் சிறிதளவு சேறுண்டாக்கி, அதை என் கண்களில் பூசி, சீலோவாம் குளத்தில் போய் கழுவும்படி எனக்குச் சொன்னார். அப்படியே நான் போய் கழுவியபோது, என்னால் பார்க்க முடிந்தது” என்றான்.
9:12 அப்போது அவர்கள் அவனிடம், “அவர் எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “எனக்குத் தெரியாது” என்றான்.
9:13 முன்பு பார்வையற்றிருந்த அந்த மனிதனை, மக்கள் பரிசேயரிடம் கொண்டுவந்தார்கள்.
9:14 இயேசு சேறு உண்டாக்கி, அந்த மனிதனின் கண்களைத் திறந்த நாள் ஒரு ஓய்வுநாளாயிருந்தது.
9:15 எனவே பரிசேயரும் அவனிடம், “நீ எப்படிப் பார்வை பெற்றாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “அவர் எனது கண்களில் சேற்றைப் பூசினார். நான் அதைக் கழுவினேன். இப்போது நான் பார்க்கின்றேன்” என்றான்.
9:16 அப்போது பரிசேயரில் சிலர் இயேசுவைக் குறித்து, “இவன் இறைவனிடமிருந்து வந்தவனல்ல. ஏனெனில் இவன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளவில்லையே” என்றார்கள். அதற்கு மற்றவர்கள், “பாவியான ஒருவனால், இப்படிப்பட்ட அற்புத அடையாளங்களை எப்படிச் செய்ய முடியும்?” என்றார்கள். அதனால் அவர்களுக்கிடையே பிரிவினை ஏற்பட்டது.
9:17 அவர்கள் மீண்டும் அந்த பார்வையற்றவனைப் பார்த்து, “உனது கண்களைத் திறந்தாரே, அவரைக் குறித்து நீ என்ன சொல்கின்றாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “அவர் ஒரு இறைவாக்கினர்” என்றான்.
9:18 அந்த மனிதனுடைய பெற்றோரை அழைத்து விசாரிக்கும் வரைக்கும், பார்வையற்றவனாய் இருந்தவன் இப்போது பார்வையடைந்திருக்கிறான் என்பதை யூதர்கள் நம்பவில்லை.
9:19 அவர்கள் அவனுடைய பெற்றோரிடம், “இவன்தானா உங்கள் மகன்? இவன் பார்வையற்றவனாய்ப் பிறந்தான் என்று சொல்கின்றீர்களே, இப்போது எப்படி பார்வையடைந்தான்?” என்று கேட்டார்கள்.
9:20 அதற்கு அவனுடைய பெற்றோர், “இவன் எங்கள் மகன் என்பதும், இவன் பார்வையற்றவனாய் பிறந்தான் என்பதும் எங்களுக்குத் தெரியும்.
9:21 ஆனால் இவனால் இப்போது எப்படிப் பார்க்க முடிகிறது என்பதோ, இவனுடைய கண்களைத் திறந்தது யார் என்பதோ எங்களுக்குத் தெரியாது. அவனையே கேளுங்கள். அவன் வயது வந்தவனாய் இருக்கின்றானே; அவனே தனக்காகப் பேசுவான்” என்றார்கள்.
9:22 அவனுடைய பெற்றோர் யூதருக்குப் பயந்தபடியினாலேயே இப்படிச் சொன்னார்கள். ஏனெனில் இயேசுவை எவனாவது மேசியா என ஏற்றுக்கொண்டால், அவன் ஜெபஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று யூதர்கள் ஏற்கெனவே தீர்மானித்திருந்தார்கள்.
9:23 அதனாலேயே அவனுடைய பெற்றோர், “அவன் வயது வந்தவன்; அவனையே கேளுங்கள்” என்று சொன்னார்கள்.
9:24 பார்வையற்றவனாயிருந்த அவனை அவர்கள் இரண்டாவது முறையாகவும் அழைத்து, “நீ இறைவனுக்கு மகிமையைக் கொடு. அவன் ஒரு பாவி என்று எங்களுக்குத் தெரியும்” என்றார்கள்.
9:25 அதற்கு அவன், “அவர் ஒரு பாவியோ இல்லையோ எனக்குத் தெரியாது. எனக்கு ஒன்று மட்டும் தெரியும். நான் பார்வையற்றிருந்தேன், இப்போது பார்க்கின்றேன்!” என்றான்.
9:26 அப்போது அவர்கள் அவனிடம், “அவன் உனக்கு என்ன செய்தான்? அவன் எப்படி உன் கண்களைத் திறந்தான்?” என்று கேட்டார்கள்.
9:27 அவன் பதிலளித்து, “ஏற்கெனவே நான் உங்களுக்குச் சொன்னேன். நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மறுபடியும் ஏன் அதைக் கேட்கின்றீர்கள்? நீங்களும் அவருடைய சீடர்களாக விரும்புகிறீர்களோ?” என்று கேட்டான்.
9:28 அப்போது அவர்கள் ஆத்திரத்துடன் அவனை அவமதித்துப் பேசி, “நீ அவனுடைய சீடன், நாங்கள் மோசேயின் சீடர்கள்.
9:29 மோசேயுடன் இறைவன் பேசினார் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் இவனைப் பற்றியோ, இவன் எங்கிருந்து வந்தான் என்றோ எங்களுக்குத் தெரியாது” என்றார்கள்.
9:30 அதற்கு அவன், “இது மிகவும் விசித்திரமாக இருக்கின்றது! நீங்களோ, அவர் எங்கிருந்து வந்தவர் என்பதே தெரியாது என்கின்றீர்கள். ஆனால் அவரோ எனக்குப் பார்வை தந்து என் கண்களைத் திறந்துவிட்டிருக்கின்றார்.
9:31 பாவிகளின் மன்றாடலை இறைவன் கேட்பதில்லை என்பது நமக்குத் தெரியும். மாறாக தமது திட்டத்தைச் செய்கின்ற இறைபக்தியுள்ளவனின் மன்றாடலையே அவர் கேட்கின்றார்.
9:32 பிறந்ததிலிருந்து பார்வையற்றிருந்த ஒருவனுடைய கண்கள் திறக்கப்பட்டு அவன் பார்வையடைந்ததாக, ஒருவருமே ஒருபோதும் கேள்விப்பட்டதே இல்லை.
9:33 அவர் இறைவனிடமிருந்து வந்திராவிட்டால், அவரால் ஒன்றையுமே செய்திருக்க முடியாது” என்றான்.
9:34 அதற்கு அவர்கள், “பிறப்பிலேயே பாவத்தில் மூழ்கியிருந்த நீ எங்களுக்குப் போதிக்கத் துணிந்துவிட்டாயோ!” என்று சொல்லி அவனை வெளியே தள்ளிவிட்டார்கள்.
9:35 யூதர்கள் அவனை வெளியே தள்ளிவிட்டார்களென்று இயேசு கேள்விப்பட்டார். அவர் அவனைத் திரும்பவும் கண்டபோது, “நீ மனுமகனில் விசுவாசமாயிருக்கின்றாயா?” என்று கேட்டார்.
9:36 அதற்கு அவன், “ஐயா, அவர் யார் என்று சொல்லும். அப்போது நான் அவர்மீது விசுவாசம் வைக்கிறேன்” என்றான்.
9:37 அதற்கு இயேசு, “நீ அவரைக் கண்டிருக்கிறாய்; இப்போது உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறவரே அவர்” என்றார்.
9:38 அதற்கு அவன், “ஆண்டவரே, நான் விசுவாசிக்கின்றேன்” என்று சொல்லி, அவரை வழிபட்டான்.
9:39 அப்போது இயேசு, “நியாயத்தீர்ப்பிற்காகவே நான் இந்த உலகத்திற்கு வந்தேன். இதனால் பார்வையற்றவர்கள் காண்பார்கள். காண்கின்றவர்கள் பார்வையற்றவராவார்கள்” என்றார்.
9:40 அப்போது அவருடன் இருந்த சில பரிசேயர்கள் இதைக் கேட்டு, “என்ன! நாங்களும் பார்வையற்றவர்களோ?” என்று கேட்டார்கள்.
9:41 அதற்கு இயேசு, “நீங்கள் பார்வையற்றவர்களாயிருந்தால், பாவத்தின் குற்றம் உங்கள் மீது சுமத்தப்பட மாட்டாது; ஆனால் உங்களால் பார்க்க முடியும் என்று நீங்கள் சொல்கின்றபடியால், உங்களது குற்றம் நிலைத்திருக்கின்றது” என்றார்.