Acts 1
1:1 தெயோப்பிலுவே, நான் முன்பு எழுதிய புத்தகத்தில், இயேசு ஆரம்பத்திலிருந்து அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை செய்ததும், போதித்ததுமான அனைத்தையும்பற்றி எழுதினேன்.
1:2 தாம் தெரிவுசெய்த அப்போஸ்தலர்களுக்கு பரிசுத்த ஆவியானவராலே அந்நாள்வரை அறிவுறுத்தல்களைக் கொடுத்த பின்பு, அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
1:3 அவர் வேதனை அனுபவித்து மரணித்த பின்பு, தம்மை அவர்களுக்கு காண்பித்து, தாம் உயிருடன் இருப்பதை அநேக ஆதாரங்களுடன் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்தார். அவர் நாற்பது நாட்கள் அவர்களுக்கு காட்சியளித்து, இறைவனுடைய அரசைக் குறித்துப் பேசினார்.
1:4 அவர்களுடன் இருந்தபோது, அவர்களுக்கு இந்தக் கட்டளையைக் கொடுத்தார்: “நீங்கள் எருசலேமைவிட்டு வெளியேறாதீர்கள், பிதாவின் வாக்குறுதியைக் குறித்து நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களே, அதற்காகக் காத்திருங்கள்;
1:5 ஏனெனில் யோவான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுத்தார், ஆனால் நீங்களோ இன்னும் சில நாட்களில் பரிசுத்த ஆவியானவரினால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்.”
1:6 எனவே, சீடர்கள் இயேசுவோடு ஒன்றுகூடியபோது அவரிடம், “ஆண்டவரே, நீர் இஸ்ரயேலருக்குரிய பேரரசை மீண்டும் தரப்போகும் காலம் இதுவா?” என்று கேட்டார்கள்.
1:7 அதற்கு இயேசு அவர்களிடம்: “பிதா தமது அதிகாரத்தினால் நியமித்திருக்கின்ற நேரங்களையும், காலங்களையும் அறிகின்றது உங்களுக்குரியது அல்ல.
1:8 மாறாக பரிசுத்த ஆவியானவர் உங்கள் மீது வரும்போது, நீங்கள் வல்லமை பெற்று எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், அத்துடன் பூமியின் கடைசி எல்லை வரையிலும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்றார்.
1:9 இயேசு இதைச் சொன்ன பின்பு, அவர்களுடைய கண்களுக்கு முன்பாகவே, அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். ஒரு மேகம் அவரை அவர்களுடைய பார்வையிலிருந்து மறைத்துக் கொண்டது.
1:10 இயேசு கடந்து சென்றுகொண்டிருக்கையில், அவர்கள் தொடர்ந்தும் வானத்தை உற்றுப் பார்த்துக்கொண்டு அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். அப்போது வெள்ளை உடை அணிந்த இருவர் திடீரென அவர்கள் அருகே வந்து நின்று,
1:11 “கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக்கொண்டு இங்கே நிற்கிறீர்கள்? உங்களிடம் இருந்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவராகிய இயேசு திரும்பவும் உங்களிடம் வருவார். பரலோகத்திற்கு எவ்விதமாக போகின்றார் என்பதைக் காண்கின்றீர்களே. அவ்விதமாகவே அவர் திரும்பவும் வருவார்” என்றார்கள்.
1:12 பின்பு சீடர்கள், ஒலிவமலை எனப்பட்ட அந்தக் குன்றிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள். பட்டணத்திலிருந்து ஓய்வுநாளில் நடக்கக்கூடிய தூரத்தில் ஒலிவமலை இருந்தது.
1:13 அவர்கள் எருசலேமுக்கு வந்து சேர்ந்தபோது, அவர்கள் தங்கியிருந்த வீட்டிலுள்ள மேல் அறைக்குப் போனார்கள். அங்கே பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா; பிலிப்பு, தோமா, பர்த்தொலொமேயு, மத்தேயு; அல்பேயுவின் மகன் யாக்கோபு, யூதவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் வந்திருந்தார்கள்.
1:14 அவர்கள் எல்லோரும் தொடர்ச்சியாக ஒன்றிணைந்து மன்றாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் பெண்களும், இயேசுவின் தாய் மரியாளும், இயேசுவின் சகோதரரும் இருந்தார்கள்.
1:15 இவ்வாறு கூடிய ஒரு நாளில், விசுவாசிகளின் நடுவே பேதுரு எழுந்து நின்றான். அங்கு ஏறக்குறைய நூற்றிருபது பேர் கூடியிருந்தனர்.
1:16 அவன் அவர்களிடம், “சகோதரரே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த யூதாசைக் குறித்து, பரிசுத்த ஆவியானவர் வெகு காலத்திற்கு முன்பு, தாவீதின் மூலமாய் பேசினார். அந்த வேதவசனம் நிறைவேற வேண்டியதாய் இருந்தது.
1:17 அவன் நம்மில் ஒருவனாய் கணிக்கப்பட்டு, இந்த ஊழியத்தில் பங்கு பெற்றிருந்தான்.”
1:18 அவன் தனது கொடிய செயலுக்கு வெகுமதியாகப் பெற்ற பணத்தைக்கொண்டு, ஒரு வயல் வாங்கப்பட்டது; அவன் அங்கே தலைகீழாக விழுந்தான். அவனது வயிறு வெடித்து, குடல்கள் எல்லாம் வெளியே சிதறின.
1:19 எருசலேமிலுள்ள ஒவ்வொருவரும், இதைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறார்கள். அதனாலேயே அவர்கள், அந்த வயல் நிலத்தைத் தங்கள் மொழியில் அக்கெல்தமா என்று சொல்கின்றார்கள். அக்கெல்தமா என்றால், இரத்த நிலம் என்று அர்த்தமாகும்.
1:20 மேலும் பேதுரு சொன்னதாவது, “சங்கீதப் புத்தகத்தில் இதைக் குறித்து எழுதப்பட்டுள்ளது: “ ‘அவனுடைய இருப்பிடம் கைவிடப்பட்டுப் போவதாக; அதில் ஒருவரும் குடியிருக்காதிருப்பார்களாக.’ அத்துடன், “ ‘அவனுடைய தலைமைத்துவ பணியை வேறொருவன் பொறுப்பெடுக்கட்டும்.’
1:21 எனவே ஆண்டவர் இயேசு, நமது மத்தியில் இருந்த காலம் முழுவதும், நம்முடனே இருந்தவர்களுள் ஒருவனைத் தெரிந்தெடுப்பது அவசியமாகும்.
1:22 யோவான் ஞானஸ்நானம் கொடுத்த காலத்தின் தொடக்கத்திலிருந்து, இயேசு நம்மிடமிருந்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலம் வரைக்கும், அவன் நம்முடனே இணைந்து பயணித்திருக்க வேண்டும். அவனும் நம்மைப் போலவே இயேசு உயிருடன் எழுந்ததற்கு சாட்சியாக இனிமேல் செயற்பட வேண்டும்” என்றான்.
1:23 எனவே அவர்கள் யுஸ்து என்னும் பர்சபா எனப்பட்ட யோசேப்பு, மத்தியா ஆகிய இருவரை முன்மொழிந்தார்கள்.
1:24 பின்பு அவர்கள் மன்றாடி, “கர்த்தாவே, நீர் எல்லோருடைய இருதயத்தையும் அறிந்திருக்கிறீர், இந்த இருவரில் நீர் யாரைத் தெரிவு செய்தீர் என்பதை எங்களுக்குக் காண்பியும்.
1:25 யூதாஸ் தனக்குரிய இடத்திற்கு போவதற்காக கைவிட்டுப் போன இந்த அப்போஸ்தல ஊழியத்தைச் செய்வதற்கு, நீர் தெரிவு செய்தவனை எங்களுக்குக் காண்பியும்” என்றார்கள்.
1:26 அதன்பின்பு, அவர்கள் சீட்டுப் போட்டார்கள். சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது. எனவே, அவன் மற்ற பதினொரு அப்போஸ்தலர்களுடனும் சேர்த்துக்கொள்ளப்பட்டான்.