Library · ta

Acts 8

8:1 இப்படியாக, ஸ்தேவான் கொலை செய்யப்படுவதற்கு சவுலும் உடன்பாடாக இருந்தான். அந்த நாளிலே, எருசலேமில் இருந்த திருச்சபைக்கு எதிராக மிகுந்த துன்புறுத்தல் ஏற்பட்டது. இதனால், அப்போஸ்தலர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் யூதேயாவின் நாட்டுப் புறங்களுக்கும், சமாரியாவுக்கும் சிதறிப் பரவினார்கள். 8:2 இறைபக்தியுள்ள மனிதர்கள் ஸ்தேவானை அடக்கம் பண்ணி, அவனுக்காக ஒப்பாரி வைத்து துக்கம் அனுஷ்டித்தார்கள். 8:3 ஆனால் சவுலோ திருச்சபைக்குப் பாரிய சேதம் ஏற்படுத்தத் தொடங்கினான். அவன் வீடுவீடாகச் சென்று, ஆண்களையும் பெண்களையும் இழுத்துக் கொண்டுபோய் அவர்களைச் சிறையிலடைக்கச் செய்தான். 8:4 எருசலேமிலிருந்து சிதறிப் பரவியவர்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள். 8:5 பிலிப்பு சமாரியாவிலுள்ள பட்டணத்திற்குப் போய், அங்கே கிறிஸ்துவைப் பிரசித்தப்படுத்தினான். 8:6 கூடிவந்த மக்கள், பிலிப்பு சொன்னதைக் கேட்டு அவன் செய்த அற்புத அடையாளங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவன் சொன்னவற்றை அவர்கள் எல்லோரும் கவனமாய்க் கேட்டார்கள். 8:7 அநேகரிலிருந்து, தீய ஆவிகள் கூச்சலிட்டுக் கொண்டு வெளியேறின. பல முடக்குவாதக்காரரும், கால் ஊனமுற்றோர்களும் குணமடைந்தார்கள். 8:8 இதனால் அந்தப் பட்டணத்திலே மிகுந்த மனமகிழ்ச்சி உண்டாயிற்று. 8:9 சீமோன் என்னும் பெயருடைய ஒருவன் சில காலமாக அந்தப் பட்டணத்தில் மந்திரவித்தை செய்து சமாரியாவிலுள்ள மக்களையெல்லாம் வியக்கப் பண்ணிக்கொண்டிருந்தான். அவன் தன்னை ஒரு பெரிய மனிதனாகக் காட்டிக் கொண்டான். 8:10 இதனால் உயர்ந்தவர்களும் தாழ்ந்தவர்களுமான எல்லா மக்களும் அவன் சொல்வதைக் கவனமாய் கேட்டு, “பெரும் வல்லமை என்று சொல்லப்படும் தெய்வீக வல்லமை இந்த மனிதனே” என்றார்கள். 8:11 அவன் தனது மந்திரவித்தையினால் அவர்களை வெகுகாலமாய் வியக்கப் பண்ணினதால் அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள். 8:12 ஆனால் பிலிப்பு, இறைவனுடைய அரசைப் பற்றிய நற்செய்தியையும், இயேசு கிறிஸ்துவின் பெயரையும் குறித்துப் பிரசங்கித்தபோது அவர்கள் விசுவாசித்தார்கள். ஆண்களும் பெண்களுமாக ஞானஸ்நானம் பெற்றார்கள். 8:13 சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றான். அவன், தான் கண்ட பெரிதான அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும் வியப்புற்று, பிலிப்புவைப் பின்பற்றி எல்லா இடங்களுக்கும் சென்றான். 8:14 சமாரியாவிலுள்ளவர்கள் இறைவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டார்கள் என எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டபோது, பேதுருவையும் யோவானையும் அங்கே அனுப்பினார்கள். 8:15 அவர்கள் அங்கே போய்ச் சேர்ந்தபோது, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும்படி அங்குள்ள மக்களுக்காக மன்றாடினார்கள். 8:16 ஏனெனில், அதுவரை அவர்களில் எவரும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருக்கவில்லை. அவர்கள் ஆண்டவர் இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் மட்டுமே பெற்றிருந்தார்கள். 8:17 பேதுருவும் யோவானும் அவர்கள்மீது தங்கள் கைகளை வைத்து மன்றாடியபோது, அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டார்கள். 8:18 அப்போஸ்தலர்கள் கைகளை வைத்து மன்றாடும்போது பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுவதைக் கண்ட சீமோன், அப்போஸ்தலர்களுக்கு பணத்தைக் கொடுத்து, 8:19 “நான் எவர்கள் மேல் கைகளை வைக்கிறேனோ, அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும்படி, எனக்கும் இந்த வல்லமையைத் தாருங்கள்” என்று கேட்டான். 8:20 அப்போது பேதுரு அவனிடம், “இறைவனுடைய நன்கொடையைப் பணத்தினால் வாங்கலாம் என்று நீ நினைத்தபடியால், உனது பணம் உன்னுடனேயே அழிந்து போகட்டும்! 8:21 இந்த ஊழியத்திலே உனக்கு எந்தவித பங்கும் இல்லை, பாகமும் இல்லை. உனது இருதயம் இறைவனுக்கு முன்பாக நீதியாய் இருக்கவில்லையே. 8:22 எனவே, இந்தத் தீமையைவிட்டு நீ மனந்திரும்பி, கர்த்தரிடம் மன்றாடு. நீ உன் இருதயத்தில் இப்படிப்பட்ட எண்ணம் கொண்டிருப்பதை ஒருவேளை அவர் மன்னிப்பார். 8:23 ஏனெனில் நீ மிகக் கசப்பான பொறாமை கொண்டவனாகவும் பாவத்தின் பிடியில் சிக்கியவனாகவும் இருப்பதை நான் காண்கின்றேன்” என்றான். 8:24 அப்போது சீமோன், “நீங்கள் சொன்னது ஒன்றும் எனக்கு நடக்காதபடி கர்த்தரிடம் எனக்காக மன்றாடுங்கள்” என்றான். 8:25 பேதுருவும், யோவானும் சாட்சி கூறி கர்த்தரின் வார்த்தையையும் பிரசித்தப்படுத்தினார்கள். அவர்கள் சமாரியரின் பல கிராமங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கித்துக்கொண்டு, எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். 8:26 கர்த்தரின் தூதன் பிலிப்புவிடம், “நீ எழுந்து எருசலேமிலிருந்து காசாவுக்குச் செல்லும் வழியாகத் தெற்கு நோக்கிப் போ” என்றார். இது ஒரு வனாந்தரப் பகுதி. 8:27 எனவே அவன் புறப்பட்டுப் போய், அண்ணகனாய் இருந்த ஒரு எத்தியோப்பியனை வழியிலே சந்தித்தான். இவன் எத்தியோப்பியரின் அரசியான கந்தாகே என்பவளின் எல்லாச் சொத்துக்களுக்கும் பொறுப்பாயிருந்த ஒரு முக்கிய அதிகாரி. இந்த எத்தியோப்பியன் வழிபடுவதற்காக எருசலேமுக்குச் சென்றிருந்தான். 8:28 இவன் தனது வீட்டிற்குத் திரும்பிப் போகின்ற பயணத்திலே தனது தேரில் உட்கார்ந்து இறைவாக்கினன் ஏசாயாவின் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தான். 8:29 பரிசுத்த ஆவியானவர் பிலிப்புவிடம், “நீ அந்த தேரை நோக்கிப் போய், அதனுடன் இணைந்துகொள்” என்றார். 8:30 அவ்விதமாக, பிலிப்பு ஓடிச் சென்று அதனுடன் இணைந்து கொண்டபோது, அந்த அதிகாரி இறைவாக்கினன் ஏசாயாவின் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பது கேட்டது. அப்போது பிலிப்பு அவனிடம், “நீ வாசிப்பது உனக்குப் புரிகிறதா?” எனக் கேட்டான். 8:31 அதற்கு அவன், “யாராவது அதை எனக்கு விபரித்துச் சொல்லாவிட்டால், எனக்கு எப்படி புரியும்?” என்று சொல்லி, பிலிப்புவைத் தன்னுடனேகூட வந்து உட்காரும்படி அழைத்தான். 8:32 அந்த அதிகாரி வாசித்துக் கொண்டிருந்த வேதவசனப் பகுதியில், “அவர் கொல்லப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் செம்மறியாட்டைப் போல் இருந்தார். முடி கத்தரிக்கின்றவனின் முன்னால் மௌனமாய் நிற்கும் ஒரு ஆட்டுக்குட்டியைப் போல, அவர் தமது வாயைத் திறவாதிருந்தார். 8:33 அவர் அவமதிக்கப்படுகையில், அவருக்கு நீதி கிடைக்கவில்லை. அவருடைய வழித்தோன்றலைக் குறித்து யாரால் என்ன சொல்ல முடியும்? அவருடைய உயிர், பூமியிலிருந்து எடுக்கப்பட்டு விட்டதே” என்றிருந்தது. 8:34 அந்த அதிகாரி பிலிப்புவிடம், “இறைவாக்கினர் யாரைக் குறித்து இதைச் சொல்கின்றார்? தம்மைக் குறித்தா, அல்லது வேறு ஒருவரைக் குறித்தா? தயவுசெய்து எனக்குச் சொல்லும்” என்றான். 8:35 அப்போது பிலிப்பு, அதே வேதவசனப் பகுதியிலிருந்து பேச ஆரம்பித்து, இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவனுக்குச் சொன்னான். 8:36 அவர்கள் பயணிக்கையில், தண்ணீர் உள்ள ஒரு இடத்திற்கு வந்தார்கள். அப்போது அந்த அதிகாரி பிலிப்புவிடம், “பார், இங்கே தண்ணீர் இருக்கின்றது. நான் ஏன் ஞானஸ்நானம் பெறக் கூடாது?” என்றான். 8:37 அதற்குப் பிலிப்பு, “நீ உனது முழு இருதயத்தோடும் விசுவாசித்தால், ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளலாம்” என்றான். அதற்கு அந்த அதிகாரி, “இயேசு கிறிஸ்து இறைவனுடைய மகன் என்று நான் விசுவாசிக்கின்றேன்” என்றான். 8:38 எனவே அவன் தேரை நிறுத்தும்படி உத்தரவிட்டான். பிலிப்புவும் அந்த அதிகாரியும் தண்ணீரில் இறங்கினார்கள். பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். 8:39 அவர்கள் தண்ணீரிலிருந்து வெளியே வந்தபோது, கர்த்தரின் ஆவியானவர் உடனடியாக பிலிப்புவை அங்கிருந்து எடுத்துச் சென்று விட்டார். அதன்பின் அந்த அதிகாரி பிலிப்புவைக் காணவில்லை. ஆயினும், அவன் மகிழ்ச்சியுடன் தன் வழியே சென்றான். 8:40 பிலிப்புவோ ஆசோத்திலே காணப்பட்டான். அவன் அங்கிருந்து பிரயாணம் செய்து, எல்லாப் பட்டணங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கம் பண்ணிக்கொண்டு செசரியாவைச் சென்றடைந்தான்.