Romans 14
14:1 விசுவாசத்தில் பலவீனமாயிருக்கின்றவனை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனால், கருத்து வேறுபாடுகளைக் குறித்து அவனுடன் வாதாடாமல் இருங்கள்.
14:2 ஒருவன் எல்லாவித உணவையும் உண்ணலாம் என நம்புகிறான். விசுவாசத்தில் பலவீனமாய் இருக்கின்றவனோ மரக்கறி உணவை மட்டுமே உண்ணுகிறான்.
14:3 எனவே உண்ணுகின்றவன் சில உணவுகளை தவிர்த்துக்கொள்கின்றவனை இகழ்வாகப் பார்க்கக் கூடாது. அதுபோல் உண்ணாதவனோ உண்பவன் மீது குற்றம் காணவும் கூடாது. ஏனெனில் இறைவன் அவனை ஏற்றுக்கொண்டிருக்கிறாரே.
14:4 இன்னொருவனுடைய வேலைக்காரனை நியாயம் தீர்க்க நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமான் அவனுக்கு பொறுப்பாளி. அவன் நிலைநிற்பான், ஏனெனில் இறைவன் அவன் நிலைநிற்க ஆற்றலைக் கொடுக்க வல்லவராய் இருக்கின்றார்.
14:5 ஒருவன் ஒரு நாளைவிட, இன்னொரு நாள் சிறந்தது என்று எண்ணுகிறான். ஆனால் இன்னொருவனோ, எல்லா நாட்களையும் ஒரேவிதமாகவே எண்ணுகிறான். ஒவ்வொருவனும் தன்னுடைய மனதில் உள்ளதை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.
14:6 ஒரு நாளை சிறப்பானதாக எண்ணுகின்றவன், கர்த்தருக்காக அதைச் செய்கின்றான். உண்பவனும் கர்த்தருக்காகவே அதைச் செய்து இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான். அப்படியே அவற்றை உண்ணாமல் தவிர்த்துக்கொள்கின்றவனும், இறைவனுக்காக அதைச் செய்து இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான்.
14:7 நாம் நமக்காக மட்டுமே வாழ்வதில்லை, அத்தோடு நம்மில் எவரும் நமக்கென்று மரணிப்பதுமில்லை.
14:8 நாம் வாழ்ந்தாலும் கர்த்தருக்கென்றே வாழ்கின்றோம்; நாம் மரணித்தாலும் கர்த்தருக்கென்றே மரணிக்கின்றோம். எனவே நாம் வாழ்ந்தாலும், மரணித்தாலும் கர்த்தருடையவர்கள்.
14:9 கிறிஸ்து, மரணித்தவர்களுக்கும் உயிருடன் இருக்கின்றவர்களுக்கும் ஆண்டவராய் இருக்கும் பொருட்டே மரணித்து பின்னர் மீண்டும் உயிர் பெற்றார்.
14:10 இப்படியிருக்க நீ ஏன் உன் சகோதரனை நியாயம் தீர்க்கின்றாய்? ஏன் உன் சகோதரனை உதாசீனம் செய்கின்றாய்? ஏனெனில் நாம் எல்லோரும் இறைவனுடைய நீதி வழங்கும் அரியணைக்கு முன்பாக நிற்போம்.
14:11 இறைவாக்கினனால் எழுதியிருக்கின்றபடி: “ ‘ஒவ்வொரு முழங்காலும் எனக்கு முன்பாக அடிபணிந்து மண்டியிடும்; ஒவ்வொரு நாவும் இறைவனை ஏற்று ஒப்புக்கொள்ளும்.’ இதை நான் வாழ்ந்திருக்கின்றபடியே ஆணையிட்டு சொல்கிறேன்” என்று கர்த்தர் சொல்கின்றார்.
14:12 எனவே நாம் ஒவ்வொருவரும் நம்மைக் குறித்து இறைவனுக்குக் கணக்குக் கொடுப்போம்.
14:13 ஆகவே நாம் ஒருவரையொருவர் நியாயம் தீர்ப்பதை நிறுத்துவோம். உங்கள் சகோதரர்களுடைய வழியில் அவர்கள் தடுக்கி விழக் கூடிய தடைக்கல்லையோ, இடையூறையோ இடாதிருக்கத் தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
14:14 ஆண்டவர் இயேசுவுக்குள் நான் அறிந்து நிச்சயித்திருக்கின்றபடி, எந்த உணவும் தன்னிலே அசுத்தமானது அல்ல என்பதை நம்புகிறேன். ஆனால் எவனாவது எந்த உணவையும் அசுத்தமானது என நம்பினால், அது அவனுக்கு அசுத்தமானதாகவே இருக்கும்.
14:15 நீ உண்ணுகின்ற உணவின் காரணமாக உன் சகோதரன் மனவருத்தமடைந்தால், நீ அன்பு காட்டுகின்றவனாய் நடந்துகொள்ளவில்லை. நீ உண்ணும் உணவினால் அவனை நிலைகுலையப் பண்ணாதே, கிறிஸ்து அவனுக்காக மரணித்தாரே.
14:16 நீங்கள் நன்மை என எண்ணுகின்றதை மற்றவர்கள் தீமையாய்ப் பேசுவதற்கு இடங்கொடுக்க வேண்டாம்.
14:17 ஏனெனில் இறைவனுடைய அரசு உண்ணுவதைப் பற்றியதும் அருந்துவதைப் பற்றியதுமல்ல. அது நீதி, சமாதானம் மற்றும் பரிசுத்த ஆவியானவருக்குள்ளான மனமகிழ்ச்சி என்பவைகளைப் பற்றியதே.
14:18 இவ்விதமாக கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கின்றவன் இறைவனின் பிரியத்தையும் மனிதரின் நன்மதிப்பையும் பெறுவான்.
14:19 எனவே நாம் சமாதானத்தை உண்டாக்குவதும், ஒருவர் மற்றவரை கட்டியெழுப்ப உதவுவதுமான காரியங்களில் ஈடுபட முயற்சி செய்வோம்.
14:20 உணவுக்காக இறைவனுடைய வேலையின் பலனை அழித்துவிட வேண்டாம். எல்லா உணவும் சுத்தமானதுதான், ஆனால் ஒருவன் உண்ணும் உணவு மற்றொருவனுக்குத் தடையாக இருக்குமானால், அதை அவன் உண்ணுவது தவறானதாயிருக்கும்.
14:21 இறைச்சியை உண்ணுவதோ, திராட்சை இரசத்தைக் குடிப்பதோ, அல்லது வேறு எதைச் செய்வதோ உனது சகோதரன் பாவத்தில் விழுவதற்குக் காரணமாய் இருக்குமானால், அவற்றைச் செய்யாதிருப்பது நல்லது.
14:22 இந்த விடயத்தில் நீ கொண்டிருக்கும் விசுவாசம் உனக்கும் இறைவனுக்கும் இடையே இருக்கட்டும். ஒருவன் நியாயமானதென்று தன்னால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றைக்கொண்டு, தன்னைத் தானே குற்றவாளியாகத் தீர்க்காதிருக்க அவனால் முடியுமானால் அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
14:23 ஆனால் யாரேனும் ஒருவன் தான் உண்ணுவதைக் குறித்து அது சரியா தவறா என்ற சந்தேகத்தோடு அதை உண்பானானால், அவன் தன்னைத் தானே குற்றவாளியாகத் தீர்க்கின்றவனாய் இருப்பான். ஏனெனில் அவன் அதை விசுவாசத்தோடு உண்ணவில்லை. விசுவாசம் இல்லாமல் செய்யப்படுகின்ற எல்லாம் பாவமே.