Library · ta

1 Corinthians 12

12:1 இப்போது பிரியமானவர்களே, ஆவியானவர் அருள்பவற்றைக் குறித்து நீங்கள் அறியாமல் இருப்பதை நான் விரும்பவில்லை. 12:2 நீங்கள் இறைவனை அறியாதவர்களாய் இருந்தபோது பேச முடியாத விக்கிரகங்களினால் ஏதோ ஒரு வகையில் ஏமாற்றப்பட்டு தவறான வழியிலே நடத்தப்பட்டீர்கள். 12:3 ஆகவே, இறைவனின் ஆவியானவரால் பேசுகின்ற எவனும் “இயேசு சபிக்கப்பட்டவர்” என்று சொல்ல மாட்டான். அவ்வாறே பரிசுத்த ஆவியானவராலேயன்றி எவராலும், “இயேசுவே ஆண்டவர்” என்று சொல்லவும் முடியாது என்பதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டுமென விரும்புகிறேன். 12:4 ஆவியானவர் அளிக்கும் வரங்கள் பல்வேறு வகையானவை, ஆனால் ஆவியானவர் ஒருவரே. 12:5 செய்யப்படும் இறைபணிகளும் பல்வேறு வகையானவை, ஆனால் கர்த்தர் ஒருவரே. 12:6 அவற்றின் செயற்பாடுகளும் பல்வேறு வகையானவை, ஆனால் ஒரே இறைவனே அவற்றை எல்லோரிலும் செயற்படுத்துகின்றவர். 12:7 பொதுவான நன்மைக்காகவே ஒவ்வொருவருக்கும் பரிசுத்த ஆவியானவரின் வெளிப்படையான செயற்பாடு கொடுக்கப்பட்டிருக்கிறது. 12:8 பரிசுத்த ஆவியானவர் மூலமாக ஒருவருக்கு ஞானத்தின் வார்த்தையும், இன்னொருவருக்கு அதே ஆவியானவர் மூலமாக அறிவை உணர்த்தும் வார்த்தையும், 12:9 அதே ஆவியானவர் மூலமாக மற்றொருவருக்கு விசுவாசமும், இன்னொருவருக்கு குணமளிக்கும் வரங்களும், 12:10 மற்றொருவருக்கு அற்புதங்களைச் செய்யும் வல்லமையும், வேறொருவருக்கு இறைவாக்கு உரைத்தலும், இன்னொருவருக்கு ஆவிகளை பகுத்தறியும் ஆற்றலும், ஒருவருக்கு ஆவியானவர் கொடுக்கும் பல்வகையான வேற்றுமொழிகளும், மற்றொருவருக்கு அந்தப் பல்வகையான வேற்றுமொழிகளை விளக்கிச் சொல்லும் ஆற்றலும் கொடுக்கப்படுகின்றன. 12:11 இவையெல்லாவற்றையும், ஒரே ஆவியானவர் செயற்படுத்தி தாம் தீர்மானிக்கின்றபடியே ஒவ்வொருவருக்கும் இவற்றை பகிர்ந்து கொடுக்கின்றார். 12:12 ஒரு உடல் பல அங்கங்களால் ஆக்கப்பட்டிருக்கிறது. அங்கங்கள் பலவாயினும் ஒரே உடலாயிருப்பது போல கிறிஸ்துவும் ஒரே உடலாயிருக்கிறார். 12:13 நாம் யூதராகவோ, கிரேக்கராகவோ, அடிமைகளாகவோ, சுதந்திரமுடைய ஒருவராகவோ இருந்தாலும் ஒரே ஆவியானவராலே ஒரே உடலுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றிருக்கிறோம். நாம் பருகி அனுபவிப்பதற்கு ஒரே ஆவியானவரே கொடுக்கப்பட்டிருக்கிறார். 12:14 ஏனெனில், உடல் ஒரு அங்கமாயிராமல் பல அங்கங்களைக் கொண்டது. 12:15 காலானது, “நான் கையாக இல்லாததனால், நான் உடலுக்குச் சொந்தமல்ல” என்று சொன்னால், அது உடலுக்குச் சொந்தமில்லாமல் போவதில்லை. 12:16 காதானது, “நான் கண்ணாக இல்லாததனால் நான் உடலுக்குச் சொந்தமல்ல” என்று சொன்னால். அது உடலுக்குச் சொந்தமில்லாமல் போவதில்லை. 12:17 முழு உடலுமே ஒரு கண்ணாயிருக்குமானால் கேட்கும் திறன் எங்கிருக்கும்? முழு உடலுமே ஒரு காதாக இருக்குமானால், அதற்கு முகரும் திறன் எங்கிருக்கும்? 12:18 ஆனால் இறைவனோ தாம் விரும்பியபடியே உடலின் அங்கங்களை, அவை ஒவ்வொன்றையும் முறையாக ஒருங்கமைத்திருக்கிறார். 12:19 முழு உடலுமே ஒரே அங்கமானால் அது உடலாய் இருக்க முடியுமா? 12:20 அங்கங்கள் அநேகமாய் இருப்பினும் உடல் ஒன்றாகவே இருக்கின்றது. 12:21 எனவே கண்ணானது கையைப் பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை” என்று சொல்ல முடியாது. அல்லது தலையானது காலைப் பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை” என்று சொல்ல முடியாது. 12:22 மாறாக பலவீனமாய் காணப்படுகின்ற உடலின் அங்கங்களே நமக்கு மிகவும் அவசியமாய் இருக்கின்றன. 12:23 உடலின் மதிப்புக் குறைந்த அங்கங்கள் என்று நாம் எவற்றை நினைக்கிறோமோ, அவற்றுக்கே நாம் அதிக மதிப்பு கொடுக்கின்றோம். உடலின் மறைவான அங்கங்களையே அதிக கண்ணியமாக எண்ணுகிறோம். 12:24 அவ்விதமான எண்ணம் உடலின் மறைந்திராத அங்கங்களுக்குத் தேவையில்லை. ஆனால் இறைவனோ மதிப்புக் குறைந்த அங்கங்களுக்கு அதிக மதிப்பைக் கொடுத்து உடலின் அங்கங்களை ஒன்றிணைத்துள்ளார். 12:25 ஆகவே உடலில் பிரிவினை இல்லாமல் ஒன்று மற்றொன்றில் அக்கறையாய் இருப்பதற்காகவே அவ்வாறு உருவாக்கினார். 12:26 ஆகையால், உடலின் ஒரு அங்கம் வேதனைப்படும்போது எல்லா அங்கங்களுமே வேதனைப்படுகின்றன. ஒரு அங்கம் மேன்மை பெறும்போது மற்றெல்லா அங்கங்களும் ஒன்றுசேர்ந்து மகிழ்கின்றன. 12:27 இப்போது நீங்கள் கிறிஸ்துவின் உடலாகவும், தனித்தனியே அதன் ஒரு அங்கமாகவும் இருக்கின்றீர்கள். 12:28 ஆகவே, திருச்சபையிலே முதலாவதாக அப்போஸ்தலர்களையும், இரண்டாவதாக இறைவாக்கினர்களையும், மூன்றாவதாக ஆசிரியர்களையும் இறைவன் நியமித்தார். அதற்குப் பின்னால் அற்புதங்களையும், குணமாக்கும் வரங்களையும், உதவியாளர்களையும், நிர்வகிக்கும் வரங்களையும், பல்வேறு மொழி பேசுதலையும் ஏற்படுத்தினார். 12:29 எல்லோரும் அப்போஸ்தலர்களா? எல்லோரும் இறைவாக்கினர்களா? அல்லது எல்லோரும் ஆசிரியர்களா? எல்லோரும் அற்புதங்களைச் செய்கின்றார்களா? 12:30 எல்லோரும் குணமாக்கும் வரங்களைப் பெற்றிருக்கிறார்களா? எல்லோரும் ஆவியானவரால் வேற்றுமொழிகளைப் பேசுகின்றார்களா? எல்லோரும் அவற்றை மொழிபெயர்க்கும் ஆற்றலுடையவர்களா? இல்லையே. 12:31 அதனால் மேன்மையான வரங்களை விரும்புங்கள். இன்னும், அதிக மேன்மையான வழியை நான் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.