Library · ta

1 Corinthians 6

6:1 உங்களில் யாருக்காவது வேறொருவருடன் மனத்தாங்கல் இருந்தால், அவன் தனது சக பரிசுத்தவான்களிடம் போகாமல் தன் வழக்கை இறை நம்பிக்கையற்றவர்களின் முன்பாக தீர்ப்பதற்காக கொண்டுபோவதேன்? 6:2 பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயம் தீர்ப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகத்தை நீங்கள் நியாயம் தீர்க்கப் போகின்றவர்களாய் இருக்கையில் சிறிய வழக்குகளை தீர்க்க உங்களுக்குத் தகுதியில்லையா? 6:3 தூதர்களை நாம் நியாயம் தீர்ப்போம் என்று உங்களுக்குத் தெரியாதா? அதைவிட மேலான இவ்வுலக வாழ்க்கைக்குரிய வழக்குகளை தீர்ப்பதற்கு நீங்கள் தகுதியற்றவர்களா? 6:4 ஆதலால், அத்தகைய வழக்குகள் உங்களுக்குள் இருக்கும்போது திருச்சபையின் பார்வையில் மதிப்பற்றவர்கள் முன்னாலே ஏன் அதனைக் கொண்டு செல்கிறீர்கள்? 6:5 நீங்கள் வெட்கத்துக்குள்ளாக வேண்டும் என்பதற்காக நான் இதைச் சொல்கின்றேன். உங்களிடையே உள்ள பிணக்கைத் தீர்க்கக் கூடிய ஞானமுள்ள ஒருவனாவது உங்கள் மத்தியில் இல்லையா? 6:6 மாறாக, ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனுக்கு விரோதமாக நீதிமன்றத்துக்குப் போகின்றானே. அதுவும் அவிசுவாசிகளுக்கு முன்பாக இப்படிச் செய்கின்றான். 6:7 உங்கள் மத்தியில் உள்ள ஒருவருக்கெதிரான இன்னொருவரின் வழக்கு உங்கள் தோல்வியடைந்த நிலையைக் காட்டுகிறது. மாறாக நீங்கள் ஏன் உங்களுக்கு எதிரான தீங்குகளை சகித்துக்கொள்ளக் கூடாது? மற்றவர்கள் உங்களை ஏமாற்றினாலும் நீங்கள் ஏன் அதனை பொறுத்துக்கொள்ளக் கூடாது? 6:8 அப்படியிராமல் நீங்களே மற்றவர்களை ஏமாற்றி அநியாயம் செய்கின்றீர்கள். அதுவும் உங்கள் சகோதரருக்கும் அப்படிச் செய்கின்றீர்கள். 6:9 அநியாயக்காரர்களுக்கு இறைவனுடைய அரசில் உரிமைப் பங்கு இல்லை என்பது உங்களுக்குத் தெரியாதா? ஏமாற்றப்படாதிருங்கள். பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுகின்றவர்களோ, சிலை வணக்கக்காரர்களோ, தகாத உறவில் ஈடுபடுகின்றவர்களோ, விலை ஆடவர்களோ, ஓரினச் சேர்க்கையாளர்களோ, 6:10 அல்லது திருடரோ, பேராசைக்காரர்களோ, குடிவெறியரோ, பழிசொல்லித் தூற்றுவோரோ, ஏமாற்றுக்காரரோ இறைவனுடைய அரசில் சொத்துரிமை பெற மாட்டார்கள். 6:11 உங்களில் சிலரும் அவ்வாறே இருந்தீர்கள். ஆனாலும், நீங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரினாலும் நமது இறைவனின் ஆவியானவரினாலும் கழுவப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்கள் ஆக்கப்பட்டீர்கள். 6:12 “எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு உரிமையுண்டு,” ஆனால் எல்லாமே பயனுள்ளவையல்ல. “எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு உரிமையுண்டு.” ஆனால் நான் ஒன்றுக்கும் அடிமைப்பட மாட்டேன். 6:13 “வயிற்றுக்கு உணவும், உணவுக்கு வயிறும்” என்கிறீர்கள். ஆனாலும் ஒரு நாள் இறைவன் உணவையும் வயிறையும் அழித்து விடுவார். உடல், பாலியல் ஒழுக்கக்கேட்டுக்கு உரியதல்ல. அது ஆண்டவருக்கே உரியது. ஆண்டவரும் உடலுக்குரியவர். 6:14 இறைவன் தமது வல்லமையினால் ஆண்டவர் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினாரே. அவர் நம்மையும் எழுப்புவார். 6:15 உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் அங்கங்கள் என்பதை நீங்கள் அறியாதிருக்கிறீர்களா? அவ்வாறிருக்க, கிறிஸ்துவின் அங்கங்களை நாம் விலைமாதுடன் இணைக்கலாமா? ஒருபோதும் கூடாதே. 6:16 தன்னை ஒரு விலைமாதுடன் இணைக்கின்றவன், அவளுடன் ஒரே உடலாய் இருக்கின்றான் என்பதை அறியாதிருக்கிறீர்களா? ஏனெனில், வேதவசனம் சொல்கின்றபடி, “இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.” 6:17 ஆனால் ஆண்டவருடன் தன்னை இணைத்துக்கொள்கின்றவன், ஆவியில் அவருடன் ஒன்றிணைந்திருக்கிறான். 6:18 பாலியல் ஒழுக்கக்கேட்டிலிருந்து விலகியோடுங்கள். மனிதன் செய்யும் மற்ற எல்லாப் பாவங்களும் அவனுடைய உடலுக்குப் புறம்பானவை. ஆனால் பாலியல் பாவத்தைச் செய்கின்றவன் தன் சொந்த உடலுக்கு விரோதமாக செய்கின்றான். 6:19 உங்கள் உடல் நீங்கள் இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்ட பரிசுத்த ஆவியானவர் உங்களில் குடியிருக்கும் ஆலயமாய் இருக்கின்றது என்பதை நீங்கள் அறியாதிருக்கிறீர்களா? நீங்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல. 6:20 நீங்கள் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறீர்கள். ஆகையால் உங்கள் உடலினால் இறைவனை மகிமைப்படுத்துங்கள்.