Library · ta

1 Corinthians 8

8:1 இப்போது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவைக் குறித்துப் பார்ப்போம். “நம் அனைவருக்கும் அறிவு உண்டு என்று” நமக்குத் தெரியும். இந்த அறிவு அகந்தையை ஏற்படுத்தும், ஆனால் அன்போ கட்டியெழுப்பச் செய்யும். 8:2 தனக்கு ஏதேனும் தெரியும் என ஒருவன் எண்ணினால், அவன் தான் அறிய வேண்டியவிதத்தில் இன்னும் அதை அறியவில்லை. 8:3 ஆனால் இறைவனில் அன்பு செலுத்துகின்றவனை இறைவன் அறிவார். 8:4 எனவே விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்ணுவதைப்பற்றி பார்ப்போம். “உலகத்தில் விக்கிரகம் என்பது ஒன்றுமேயில்லை,” இறைவன் ஒருவரே, அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்பதை நாம் அறிவோம். 8:5 சிலரது எண்ணத்தின்படி, வானத்திலும் பூமியிலும் தெய்வங்கள் என அழைக்கப்படுபவை பல உள்ளன. அதன்படி அவர்களுக்கு அநேக தெய்வங்களும் ஆள்பவைகளும் இருந்தாலும், 8:6 நமக்கோ பிதாவாகிய ஒருவரே இறைவன். அவரிடமிருந்தே எல்லாம் வந்தன. அவருக்காகவே நாம் வாழ்கின்றோம். நமக்கு இயேசு கிறிஸ்துவாகிய ஒரே ஆண்டவர் இருக்கின்றார். அவர் மூலமாகவே எல்லாம் வந்தன. அவர் மூலமாகவே நாமும் வாழ்கின்றோம். 8:7 ஆனால் எல்லோருக்கும் இந்த அறிவில்லை. சிலர் தாம் முன்பு வழிபட்ட விக்கிரகத்தை ஒரு பொருட்டாக எண்ணி, விக்கிரகத்திற்குப் படைக்கப்பட்ட உணவை உண்கிறோமே என்ற பலவீனமான மனசாட்சியுடன் உண்ணும்போது அவர்களது மனசாட்சி அசுத்தமாகிறது. 8:8 உணவு எதுவுமே நாம் இறைவனை நெருங்க உதவுவதில்லை. அதை நாம் உண்ணாமல் விடுவதால் எதையும் இழந்து போவதில்லை. உண்பதால் நாம் எதையும் பெற்றுக்கொள்வதுமில்லை. 8:9 ஆனாலும், உங்களுடைய சுயஅறிவால் தீர்மானிக்கும் உரிமை பலவீனருக்கு தடங்கலாய் இராதபடி கவனமாயிருங்கள். 8:10 இப்படிப்பட்ட அறிவுள்ளவனாகிய நீ, விக்கிரக கோவிலில் உணவருந்திக் கொண்டிருப்பதைப் பலவீனமான மனசாட்சியுடைய ஒருவன் கண்டால் அவனும் விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்பதற்குத் துணிவான் அல்லவா? 8:11 உன்னுடைய மிகையான அறிவின் காரணமாக பலவீனமான அந்த சகோதரன் அழிந்து போகலாம். கிறிஸ்து அவனுக்காகவும் மரணித்தாரே. 8:12 இவ்வாறாக, நீ உன் சகோதரர்களுக்கு எதிராகப் பாவம் செய்து, அவர்களுடைய பலவீனமான மனசாட்சியைப் புண்படுத்தினால், நீ கிறிஸ்துவுக்கு விரோதமாகப் பாவம் செய்கின்றாய். 8:13 ஆகையால் நான் உண்ணும் உணவு என் சகோதரன் பாவம் செய்வதற்கு காரணமாக இருக்குமானால், நான் அவனது வீழ்ச்சிக்குக் காரணமாய் இராதவாறு நான் மாமிச உணவே உண்ணாமல் இருக்கவும் தயார்.