Library · ta

2 Corinthians 13

13:1 இத்துடன் மூன்றாவது முறையாக நான் உங்களிடம் வருகின்றேன். “எல்லா விடயமும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.” 13:2 எனது இரண்டாவது பயணத்தில் நான் அங்கு வந்திருந்தபோது, முன்பு பாவம் செய்தவர்களையும் மற்ற எல்லோரையும் நேரில் வைத்து எச்சரித்தேன், அதுபோல இப்போது நான் அங்கு இல்லாவிட்டாலும் முன்னதாகவே எச்சரித்து வைக்கிறேன். நான் மீண்டும் அங்கு வந்தால் அப்படிப்பட்டவர்களைத் தண்டிக்காமல் விடமாட்டேன். 13:3 கிறிஸ்து என் மூலமாய்ப் பேசுகின்றார் என்பதற்கு அத்தாட்சி தேடுகின்றவர்களாய் இருக்கின்றீர்களே. கிறிஸ்து உங்களோடு பலவீனராக அன்றி அவர் உங்களோடு வல்லமையுள்ளவராக செயலாற்றுகின்றவராய் இருக்கின்றார். 13:4 உண்மையில் அவர் பலவீன நிலையிலேயே சிலுவையில் அறையப்பட்டார், ஆனாலும் இறைவனுடைய வல்லமையால் உயிர் வாழ்கின்றார். அதேபோல உண்மையில் நாங்களும் அவருக்குள் பலவீனர்களாய் இருக்கின்றோம்; ஆனாலும் உங்களோடு செயல்படுகின்ற விடயத்தில் நாம் இறைவனுடைய வல்லமையினால் அவருக்குள் உயிர் வாழ்வோம். 13:5 நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறீர்களா என உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். அதை நீங்களே சோதித்துப் பாருங்கள். இயேசு கிறிஸ்து உங்களுக்குள் இருக்கின்றார் என்பதை நீங்கள் உணர்வதில்லையா? அப்படி உணர முடியாவிட்டால் நீங்கள் சோதனையில் தோல்வியுற்றவர்கள். 13:6 நாங்கள் சோதனையில் தோல்வியடையவில்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். 13:7 மேலும், நீங்கள் எந்த தீமையும் செய்யக் கூடாது என நாங்கள் இறைவனிடம் மன்றாடுகிறோம். நாங்கள் சோதனையை எதிர்கொண்டவர்கள் என எங்களைக் காட்டிக்கொள்வதற்காக அல்ல, அப்படியே நாங்கள் தோல்வியடைந்தவர்கள் போல காணப்பட்டாலும், நீங்கள் சரியானதைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே உங்களுக்காக மன்றாடுகிறோம். 13:8 ஏனெனில் உண்மைக்கு விரோதமாக எதையும் எங்களால் செய்ய முடியாது, உண்மைக்காக மட்டுமே செயல்படுகிறோம். 13:9 நாங்கள் பலவீனர்களாகவும், நீங்கள் பலமுள்ளவர்களாகவும் இருப்பதைக் குறித்து மகிழ்ச்சியடைகிறோம். நீங்கள் முழுநிறைவுள்ளவர்கள் ஆகும்படி மன்றாடுகிறோம். 13:10 இவைகளை நான் தூரமாய் இருக்கும்போதே எழுதுகிறேன். அதற்குக் காரணம், நான் உங்களிடம் வரும்போது கர்த்தர் எனக்குத் தந்திருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, உங்களோடு கடுமையாக நடந்துகொள்ள விரும்பவில்லை. உங்களை இடித்துப் போடுவதற்காக அன்றி உங்களை கட்டியெழுப்புவதற்காகவே எனக்கு அந்த அதிகாரம் தரப்பட்டிருக்கிறது. 13:11 கடைசியாக பிரியமானவர்களே, மகிழ்ச்சியாயிருங்கள், முழுநிறைவுள்ளவர்களாக வாழ முயற்சி செய்யுங்கள், ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துங்கள், ஒரே மனதுடையவர்களாய் இருங்கள், சமாதானமாய் வாழுங்கள். அப்போது அன்புக்கும் சமாதானத்திற்குமான இறைவன் உங்களுடனே இருப்பார். 13:12 ஒருவருக்கொருவர் பரிசுத்தமான பரிவன்பைக் காட்டி வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். 13:13 பரிசுத்தவான்கள் எல்லோரும் தங்களுடைய வாழ்த்துதலைத் தெரிவிக்கிறார்கள். 13:14 நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபையும், இறைவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியமும் உங்கள் எல்லோருடனும் இருப்பதாக.