Library · ta

2 Corinthians 4

4:1 ஆகவே, இறைவனுடைய இரக்கத்தினால் இந்த ஊழியத்தைப் பெற்றிருக்கின்றபடியால் நாங்கள் மனம் தளர்ந்து போவதில்லை. 4:2 நாங்கள் வெட்கத்துக்குரிய இரகசியமான செயல்களை ஏற்றுக்கொள்ளாமலும், ஏமாற்றுகின்றவர்களாய் இராமலும் இறைவனுடைய வார்த்தையை திரித்துக் கூறாமலும், சத்தியத்தை வெளிப்படையாய் எடுத்துக் கூறுகிறோம். இப்படி, இறைவனுக்கு முன்பாக ஒவ்வொரு மனிதனின் மனசாட்சிக்கும் எங்களைக் குறித்து நாங்கள் நற்சான்று கொடுக்கின்றவர்களாக இருக்கின்றோம். 4:3 எங்களுடைய நற்செய்தி முகத்திரையால் மூடியதைப் போல் மறைவானதாயிருந்தால், அது அழிந்து போகின்றவர்களுக்கே மறைவானதாயிருக்கிறது. 4:4 அவிசுவாசிகளாகிய அவர்களின் மனதை இவ்வுலகின் இறைவனாய் இருப்பவன் குருடாக்கியிருக்கிறான். அதனால் இறைவனின் சாயலாய் விளங்கும் கிறிஸ்துவின் மகிமை பொருந்திய நற்செய்தியின் ஒளியை அவர்களால் காண முடிவதில்லை. 4:5 நாங்கள் எங்களை பிரசங்கியாமல், இயேசு கிறிஸ்துவை ஆண்டவர் என்றும், எங்களையோ இயேசுவின் பொருட்டு உங்கள் ஊழியர்கள் என்றும் பிரசங்கிக்கிறோம். 4:6 “இருளின்மீது வெளிச்சம் பிரகாசிக்கட்டும்” எனக் கூறிய இறைவனே கிறிஸ்துவின் முகத்திலே உள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியை எங்கள் இருதயங்களில் பிரகாசிக்கச் செய்திருக்கின்றார். 4:7 ஆனாலும், எல்லாவற்றிற்கும் மேலான இந்த வல்லமை எங்களுடையது அல்ல, இறைவனுடையது என்பதை அறியும்படி மட்பாண்டங்கள் போல் உடைந்து போகக்கூடிய நாங்கள் இந்தப் புதையலை பெற்றிருக்கிறோம். 4:8 நாங்கள் அனைத்து பக்கத்திலும் நெருக்கப்பட்டும், நசுங்குண்டு போவதில்லை. குழப்பமடைந்தும், மனந்தளர்ந்து போவதில்லை. 4:9 துன்புறுத்தப்பட்டும் கைவிடப்படவில்லை; வீழ்த்தப்பட்டும், அழிந்து போகவில்லை. 4:10 இயேசுவின் வாழ்க்கை எங்கள் உடலில் வெளிப்படும்படி, நாங்கள் எப்போதும் இயேசுவின் மரணத்தை எங்கள் உடலில் சுமக்கிறோம். 4:11 இதனால், மரணத்துக்குரிய எங்கள் உடலில் அவருடைய வாழ்வு வெளிப்படும்படி, உயிரோடிருக்கும் நாங்கள் இயேசுவின் பொருட்டு எப்போதும் மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்படுகின்றோம். 4:12 இப்படியாகவே, மரணம் எங்களிலும் வாழ்வு உங்களிலும் செயலாற்றுகிறது. 4:13 “நான் விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன்” என்று எழுதியிருக்கின்றபடி, அதே விசுவாசத்தின் ஆவியினாலே நாங்களும் விசுவாசிக்கின்றோம். ஆதலால் பேசுகின்றோம். 4:14 ஏனெனில் ஆண்டவர் இயேசுவை மரணத்திலிருந்து உயிருடன் எழுப்பிய இறைவன், இயேசுவுடன் எங்களையும் உயிரோடு எழுப்பி, தமது பிரசன்னத்தில் உங்களுடன் சேர்த்து நிறுத்துவார் என்பதை அறிந்திருக்கிறோம். 4:15 இவையெல்லாம் உங்களுக்காகவே நடைபெறுகின்றன. அதன்மூலமாக, கிருபையை பெற்றுக்கொள்கின்றவர்கள் பெருகும்போது நன்றி செலுத்துதலும் பெருகும். அதனால் இறைவனுக்கே மகிமையுண்டாகும். 4:16 வெளிப்புறமாக நாம் உருவழிந்து போனாலும், எமது உள்ளான மனிதன் நாளுக்குநாள் புதுப்பிக்கப்படுகின்றபடியால் நாங்கள் மனம் தளர்ந்து போவதில்லை. 4:17 ஏனெனில் நமக்குத் தற்காலிகமாய் ஏற்படுகின்ற பாரமற்ற சிறிய துன்பங்களானது, அவற்றோடு எவ்விதத்திலும் ஒப்பிட முடியாத பாரம் நிறைந்த நித்திய மகிமையை விளைவிக்கின்றன. 4:18 எனவே நாங்கள் காணப்படுபவைகளை அல்ல, காணப்படாதவைகளையே நோக்கியிருக்கிறோம். ஏனெனில் காணப்படுபவை தற்காலிகமானவை, காணப்படாதவைகளோ நித்தியமானவை.