Library · ta

2 Corinthians 6

6:1 இறைவனது கிருபையை நீங்கள் பெற்றுக்கொண்டது வெறும் வீண் என்று ஆகிவிடக் கூடாது என இறைவனுடைய சக வேலையாட்களாகிய நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம். 6:2 ஏனெனில், “என் தயவின் காலத்தில் நான் உங்கள் குரலைக் கேட்டு, இரட்சிப்பின் நாளிலே நான் உங்களுக்கு உதவி செய்தேன்” என்று இறைவனே சொல்லியிருக்கின்றார். இதோ, இப்பொழுதே அவரது தயவின் காலம், இப்பொழுதே இரட்சிப்பின் நாள். 6:3 எங்கள் ஊழியத்தைப்பற்றி யாரும் குறை கூறாதபடி, நாங்கள் எவருடைய வழியிலும் தடைக்கற்களை இடுவதில்லை. 6:4 மாறாக, நாங்கள் இறைவனின் உண்மையான ஊழியர்கள் என்பதை எல்லாவிதத்திலும், எங்கள் நடத்தையின் மூலமாக அனைவருக்கும் நிரூபித்துக் காண்பிக்கிறோம்: அதன்படி, அதிக சகிப்புத் தன்மையாலும் கஷ்டங்களிலும் துன்பங்களிலும் துயரங்களிலும், 6:5 அடிவாங்கியதிலும், சிறை வைக்கப்பட்டதிலும், கலவரங்களை முகங்கொடுத்ததிலும், கடின வேலையில் ஈடுபட்டதிலும், இரவில் நித்திரை கொள்ளாமல் இருந்ததிலும், உணவின்றி பட்டினியாய் இருந்ததிலும் இறைவனின் உண்மையான ஊழியர்களென நிரூபித்துக் காண்பிக்கிறோம். 6:6 தூய்மையிலும், விளங்கிக்கொள்வதிலும், பொறுமையிலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், உண்மை அன்பிலும், 6:7 சத்திய போதனையிலும், இறைவனின் வல்லமையில் நடப்பதிலும், நீதியின் ஆயுதத்தை வலது கையிலும் இடது கையிலும் பிடித்திருப்பதிலும், 6:8 மற்றவர்களால் மதிப்பையோ அவமதிப்பையோ, புகழ்ச்சியையோ இகழ்ச்சியையோ எதை அடைகின்றவர்களாக இருந்தாலும், ஏமாற்றுக்காரர்களாக எண்ணப்பட்ட போதிலும் உண்மையுள்ள ஊழியர்களாகவும், 6:9 அறியப்படாதவர்களாகக் காணப்பட்டாலும், நன்கு அறிமுகமானவர்கள் ஆகவும், மரணிக்கின்றவர்களாகக் காணப்பட்டாலும், தொடர்ந்து வாழ்கின்றவர்கள் ஆகவும், தாக்கப்பட்டவர்களாகக் காணப்பட்டாலும், கொல்லப்படாதவர்கள் ஆகவும், 6:10 துக்கப்படுகிறவர்களாகக் காணப்பட்டாலும், மகிழ்ச்சி கொள்கின்றவர்கள் ஆகவும், ஏழைகளாகக் காணப்பட்டாலும், பலரைச் செல்வந்தர்கள் ஆக்குகின்றவர்கள் ஆகவும், ஒன்றும் இல்லாதவர்களாகக் காணப்பட்டாலும், அனைத்தும் உடையவர்களாகவும் இருக்கின்றோம். 6:11 கொரிந்தியர்களே, நாங்கள் உங்களோடு வெளிப்படையாய் பேசியிருக்கிறோம். எங்கள் உள்ளம் முற்றிலும் திறந்திருக்கிறது. 6:12 நாங்கள் உங்கள் மீது அளவற்ற பாசத்தோடு இருந்தோம், ஆனால் நீங்களோ எங்கள் மீது அதேவண்ணம் பாசம் காட்டவில்லை. 6:13 உங்களை என் பிள்ளைகள் என்றே எண்ணி பேசுகின்றேன். உங்கள் உள்ளங்களைத் திறந்து பதிலுக்கு நீங்களும் அன்பு செய்யுங்கள். 6:14 அவிசுவாசிகளுடன் ஒன்றாக பிணைக்கப்படாதிருங்கள். நீதிக்கும் அநியாயத்துக்கும் தொடர்புண்டோ? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமுண்டோ? 6:15 கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும் இடையே இணக்கமுண்டோ? விசுவாசிக்கும் அவிசுவாசிக்கும் இடையில் பொதுத் தன்மையுண்டோ? 6:16 இறைவனுடைய ஆலயத்திற்கும், விக்கிரகங்களுக்கும் இடையே உடன்பாடுண்டோ? வாழும் இறைவனின் ஆலயமாய் நாம் இருக்கின்றோமே. அதைக் குறித்து இறைவனே கூறியிருப்பதாவது: “நான் அவர்களுடன் வாழ்வேன். அவர்களிடையே உலாவுவேன். நான் அவர்களுடைய இறைவனாயிருப்பேன். அவர்கள் என் மக்களாயிருப்பார்கள்.” 6:17 ஆகவே, “அவர்களைவிட்டு வெளியே வந்து, பிரிந்திருங்கள். அசுத்தமான எதையும் தொடாதீர்கள். அப்போது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன் என்று கர்த்தர் சொல்கின்றார்.” 6:18 மற்றும், “நான் உங்களுக்குத் தந்தையாயிருப்பேன். நீங்கள் எனக்கு மகன்களாயும் மகள்களாயும் இருப்பீர்கள் என்று, எல்லாம் வல்ல கர்த்தர் சொல்கின்றார்.”