Galatians 5
5:1 நாம் சுதந்திரமுடையவர்களாய் இருப்பதற்காகவே கிறிஸ்து நம்மை விடுதலையாக்கியிருக்கிறார். எனவே நீங்கள் உறுதியாய் நிலைத்திருங்கள். மீண்டும் நீங்கள் உங்களை அடிமைத்தன நுகத்தின் சுமைக்கு உட்படுத்தாதபடி காத்துக்கொள்ளுங்கள்.
5:2 பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்கின்றேன். நீங்கள் விருத்தசேதனம் செய்துகொள்வதை ஏற்றுக்கொண்டால் கிறிஸ்துவால் உங்களுக்கு ஒரு பயனும் இல்லை.
5:3 நான் மீண்டும் சொல்கின்றேன், விருத்தசேதனம் செய்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவனும் நீதிச்சட்டம் முழுவதையும் கைக்கொள்வதற்கு கடமைப்பட்டிருக்கிறான்.
5:4 நீதிச்சட்டத்தினால் நீதிமான்கள் ஆக்கப்படுவதே வழியென்று நீங்கள் எண்ணினால் கிறிஸ்துவை விட்டொதுங்கி கிருபையிலிருந்து வீழ்ந்துவிட்டீர்கள்.
5:5 ஆனால் நாங்களோ, எதிர்பார்த்திருக்கும் நீதிக்காக பரிசுத்த ஆவியானவர் மூலமாய் விசுவாசத்தில் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.
5:6 ஏனெனில், கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமோ, விருத்தசேதனம் இல்லாமையோ ஒன்றுமில்லை. அன்பினால் செயற்படும் விசுவாசமே பயனுள்ளது.
5:7 இந்தப் பந்தயத்தில் நீங்கள் நன்றாய் ஓடிக் கொண்டிருந்தீர்கள். சத்தியத்திற்குக் கீழ்ப்படியாதபடி உங்களைத் தடை செய்தது யார்?
5:8 இவ்விதமாக செயற்படுவதற்கான தூண்டுதல் உங்களை அழைத்தவரிடம் இருந்து வந்ததல்ல.
5:9 “ஒரு சிறிதளவு புளித்த மாவானது பிசைந்த மாவு முழுவதையும் புளிப்பாக்கி விடுகிறது.”
5:10 என்னுடைய கருத்துக்கு மாறுபட்ட எதையும் நீங்கள் கொண்டிருக்க மாட்டீர்கள் என்று நான் உங்களைக் குறித்து கர்த்தரில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறேன். ஆனால், உங்களைக் குழப்பமடையச் செய்கின்றவன் யாராயிருந்தாலும் அவன் தண்டனை அனுபவிப்பான்.
5:11 பிரியமானவர்களே, விருத்தசேதனம் அவசியமென்று சொல்லி நான் இன்னும் பிரசங்கித்தேன் என்றால், ஏன் நான் இன்னும் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன்? அப்படிப் பிரசங்கித்திருந்தால் சிலுவையின் பொருட்டு உண்டாகும் எதிர்ப்பு நீங்கியிருக்குமே.
5:12 உங்களைக் குழப்பமடையச் செய்கின்றவர்களோ தங்களது ஆணுறுப்பை சேதம் செய்துகொள்ளட்டும்.
5:13 எனக்கு பிரியமானவர்களே, நீங்கள் சுதந்திரமாக வாழ்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். அதனால் உங்கள் சுதந்திரத்தை, பாவ மனித இயல்பை அனுபவிப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தாமல் அன்பினாலே ஒருவருக்கு ஒருவர் பணி செய்யுங்கள்.
5:14 “நீ உன்னில் அன்பாய் இருப்பது போல், உன் அயலவனிலும் அன்பாய் இரு” என்ற ஒரே கட்டளையின் ஊடாக நீதிச்சட்டம் முழுவதுமே நிறைவேற்றப்படுகிறது.
5:15 ஆனால் நீங்கள் ஒருவரையொருவர் தொடர்ந்து கடித்து விழுங்குகிற செயலை நிறுத்தாவிட்டால், நீங்கள் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள், எனவே கவனமாயிருங்கள்.
5:16 எனவே, நான் உங்களுக்குச் சொல்கின்றேன், பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுங்கள். அப்போது பாவ மனித இயல்பின் ஆசைகளைத் தீர்த்துக்கொள்ள மாட்டீர்கள்.
5:17 ஏனெனில் பாவ மனித இயல்பின் ஆசைகள் பரிசுத்த ஆவியானவருக்கு எதிரானவைகளாகவும், பரிசுத்த ஆவியானவரின் ஆசைகள் பாவ மனித இயல்புக்கு எதிரானவைகளாகவும் உள்ளன. இதனாலேயே நீங்கள் விரும்புவதை செய்ய முடியாதவர்களாக இருக்கின்றீர்கள்.
5:18 ஆனால் நீங்கள் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டால், நீதிச்சட்டத்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள் அல்ல.
5:19 பாவ மனித இயல்பின் செயற்பாடுகள் வெளிப்படையானவை. பாலியல் ஒழுக்கக்கேடு, அசுத்தமான நடத்தை, காம வேட்கை,
5:20 விக்கிரக வழிபாடு, மாந்திரீகம், பகைமை, தகராறு, அதீத பற்று, கோபம், சுயநலம், பிரிவினைகள், பேதங்கள்,
5:21 பொறாமை, குடிவெறி, ஒழுக்கக்கேடான களியாட்டம் போன்றவைகளே அவையாகும். நான் உங்களை முன்பு எச்சரித்தது போலவே இப்போதும் எச்சரிக்கிறேன். இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கின்றவர்கள் இறைவனுடைய அரசில் உரிமை பெறுவதில்லை.
5:22 ஆனால் ஆவியானவரின் கனியோ அன்பு, மனமகிழ்ச்சி, சமாதானம், பொறுமை, தயவு, நற்குணம், நம்பகத் தன்மை,
5:23 சாந்தகுணம், சுயகட்டுப்பாடு என்பனவாகும். இவைகளுக்கு முரணான எந்தவித சட்டமும் இல்லை.
5:24 கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் பாவ மனித இயல்பை அதன் தீவிர ஆசைகளோடும், முறைகேடான விருப்பங்களோடும் சேர்த்து சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
5:25 நாம் பரிசுத்த ஆவியானவரால் வாழ்பவர்களெனில், ஆவியானவருடனே ஒவ்வொரு காலடியையும் எடுத்து வைப்போமாக.
5:26 நாம் வீண்பெருமை கொள்ளாமலும், மற்றவர்களை எரிச்சல் மூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமை கொள்ளாமலும் இருப்போம்.