Library · ta

1 Thessalonians 5

5:1 மேலும், பிரியமானவர்களே இவை நிகழப் போகின்ற காலங்களையும் வேளைகளையும் குறித்து நாங்கள் உங்களுக்கு எழுத வேண்டியதில்லை. 5:2 ஏனெனில் இரவில் திருடன் வருகின்றதைப் போலவே கர்த்தருடைய நாள் வரும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். 5:3 “இதோ சமாதானம் பாதுகாப்பு” என்று மக்கள் சொல்லிக் கொண்டிருக்கையில், கர்ப்பவதியான ஒரு பெண்ணுக்குப் பிரசவ வலி வருவது போல, திடீரென அவர்கள்மீது பேரழிவு வரும். அவர்களால் தப்பித்துக்கொள்ள முடியாது. 5:4 ஆனால் பிரியமானவர்களே, நீங்கள் இருளில் இருப்பவர்கள் அல்ல. அதனால், அந்த நாள் ஒரு திருடனின் வருகையைப் போல் உங்களை வியப்பிற்குள்ளாக்காது. 5:5 நீங்கள் எல்லோரும் வெளிச்சத்துக்கும் பகலுக்கும் சொந்தமானவர்களாய் இருக்கின்றீர்கள். நாம் இரவுக்கோ இருளுக்கோ சொந்தமானவர்கள் அல்ல. 5:6 ஆகவே நாம் தூங்குகின்ற மற்றவர்களைப் போல் இராமல், விழிப்புடனும் நிதானத்துடனும் இருப்போமாக. 5:7 ஏனெனில் நித்திரை செய்கின்றவர்கள் இரவில் நித்திரை செய்வார்கள். மதுவெறிகொள்கின்றவர்கள் இரவிலே குடிபோதையில் இருப்பார்கள். 5:8 ஆனால் நாமோ பகலுக்கு உரியவர்களாய் இருக்கின்றபடியால் நிதானத்துடன் இருந்து, விசுவாசத்தையும் அன்பையும் மார்புக் கவசமாகவும், இரட்சிப்பின் எதிர்பார்ப்பைத் தலைக் கவசமாகவும் அணிந்துகொள்வோம். 5:9 ஏனெனில் இறைவன் நம்மைத் தமது கோபத்தின் தண்டனையை பெறுவதற்காக அன்றி, நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வதற்காகவே நியமித்திருக்கிறார். 5:10 நாம் உயிருடன் இருந்தாலும், மரணம் அடைந்தாலும் கிறிஸ்துவுடன் ஒன்றாய் வாழும்படி நமக்காகவே அவர் உயிர் துறந்தார். 5:11 ஆகையால் நீங்கள் இப்போது செய்துவருவது போலவே, ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தி, ஒருவர் மற்றவரைக் கட்டி எழுப்புங்கள். 5:12 பிரியமானவர்களே, இப்போதும் நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்வதாவது, உங்கள் மத்தியில் கடினமாக உழைத்து, கர்த்தரில் உங்களை வழிநடத்தி, உங்களுக்குப் புத்திமதி சொல்கின்றவர்களை மதித்து நடவுங்கள். 5:13 அவர்களுடைய உழைப்புக்காக, அவர்கள்மீது அதிக அன்பு காட்டி அவர்களுக்கு மிக உயர்ந்த மதிப்பைக் கொடுங்கள். ஒருவரோடொருவர் சமாதானமாய் வாழுங்கள். 5:14 பிரியமானவர்களே, நாங்கள் உங்களிடம் வேண்டிக்கொள்வதாவது, ஒழுங்கீனமாய் இருப்பவர்களை எச்சரியுங்கள். பயந்த சுபாவமுடையவர்களை ஆறுதல்படுத்துங்கள். பலவீனமாய் இருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள். அனைவரிடமும் பொறுமையாக நடந்துகொள்ளுங்கள். 5:15 ஒருவரும் தீமையான செயலுக்குப் பதில் தீமை செய்யாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். மாறாக, எப்போதும் நீங்கள் ஒருவருக்கொருவர் நன்மை செய்ய முழு முயற்சி எடுங்கள். அதையே மற்ற எல்லோருக்கும் செய்யுங்கள். 5:16 எப்போதும் மகிழ்ச்சியாய் இருங்கள். 5:17 இடைவிடாது மன்றாடுங்கள். 5:18 எல்லா சூழ்நிலையிலும் நன்றி செலுத்துங்கள். இதுவே கிறிஸ்து இயேசுவின் ஊடாக நீங்கள் செய்ய வேண்டிய உங்களுக்கான இறைவனின் சித்தமாய் இருக்கின்றது. 5:19 ஆவியானவரின் அனலை அணைத்து விடாதீர்கள். 5:20 சொல்லப்படுகின்ற இறைவாக்கை அலட்சியம் செய்யாமல், 5:21 எல்லாவற்றையும் பரிசீலித்துப் பாருங்கள். நல்லதைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். 5:22 எல்லாவிதமான தீயசெயல்களையும்விட்டு விலகியிருங்கள். 5:23 சமாதானத்தின் இறைவன் தாமே உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்துவாராக. நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்வரை, உங்களுடைய ஆவி, ஆத்துமா, உடல் முழுவதும் குற்றம் சாட்டப்படாததாகக் காக்கப்படுவதாக. 5:24 உங்களை அழைக்கின்றவர் நம்பிக்கைக்குரியவர், அவர் அப்படியே செய்வார். 5:25 பிரியமானவர்களே, எங்களுக்காக மன்றாடுங்கள். 5:26 இறைவனுடைய மக்கள் அனைவருக்கும், பரிசுத்தமான பரிவன்பைக் காட்டி வாழ்த்துதல் தெரிவியுங்கள். 5:27 இந்தக் கடிதத்தை விசுவாசிகள் அனைவருக்கும் வாசித்துக் காண்பிக்கும்படி, கர்த்தருக்கு முன்பாக உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். 5:28 நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் எல்லோருடனும் இருப்பதாக. ஆமென்.