Library · ta

2 Thessalonians 3

3:1 இறுதியாக பிரியமானவர்களே, கர்த்தருடைய செய்தி உங்களிடையே விரைவாகப் பரவி மகிமைப்பட்டது போல, அது எங்கும் பரவ வேண்டும் என எங்களுக்காக மன்றாடுங்கள். 3:2 கொடியவர்களும், தீயவர்களுமான இத்தகைய மனிதரிடமிருந்து நாங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் மன்றாடுங்கள். ஏனெனில், எல்லோரிடமும் விசுவாசம் இல்லை. 3:3 ஆனால், கர்த்தர் உண்மையுள்ளவர். அவர் உங்களைப் பலப்படுத்தி, தீயவனிடமிருந்து பாதுகாப்பார். 3:4 நாங்கள் கட்டளையிடுகின்ற காரியங்களை நீங்கள் செய்கின்றீர்கள் என்றும், தொடர்ந்து செய்வீர்கள் என்றும் நாங்கள் கர்த்தரில் மனவுறுதி உடையவர்களாய் இருக்கின்றோம். 3:5 கர்த்தர் தாமே உங்கள் இருதயங்களை இறைவனுடைய அன்புக்குள்ளாகவும், கிறிஸ்துவின் மனவுறுதிக்குள்ளாகவும் நடத்துவாராக. 3:6 பிரியமானவர்களே, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரில் நாங்கள் உங்களுக்குக் கட்டளையிடுகின்றதாவது: சோம்பேறிகளாய் வாழும் ஒவ்வொரு சகோதரரையும்விட்டு விலகியிருங்கள். எங்களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்டதன்படி நடந்துகொள்ளாதவர்களை விட்டு விலகியிருங்கள். 3:7 எங்களுடைய முன்மாதிரியை எவ்விதமாய் பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுடன் இருந்தபோது நாங்கள் சோம்பேறிகளாய் இருந்ததும் இல்லை, 3:8 யாரிடமும் நாங்கள் இலவசமாய் உணவைப் பெற்று உண்டதும் இல்லை. மாறாக, இரவும் பகலும் பாடுபட்டு உழைத்தோம். ஆகவே, உங்களில் யாருக்கும் நாங்கள் பாரமாய் இருந்ததில்லை. 3:9 இவ்விதமான உதவியை உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள எங்களுக்கு உரிமை இல்லை என்பதனால் அல்ல. மாறாக, நீங்கள் பின்பற்றுவதற்கு நாங்கள் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அப்படிச் செய்தோம். 3:10 ஏனெனில், நாங்கள் உங்களுடன் இருந்தபோது, “வேலை செய்ய விருப்பம் இல்லாத ஒருவன் உண்ணவும் கூடாது” என்ற கட்டளையையே உங்களுக்குக் கொடுத்தோம். 3:11 உங்களில் சிலர் சோம்பேறிகளாய் இருக்கின்றார்கள் என்று நாங்கள் கேள்விப்படுகிறோம். அவர்கள் ஒரு வேலையும் செய்வதில்லை, மற்றவர்களின் வேலையில் தலையிடுவதே அவர்களின் வேலையாகி விட்டது. 3:12 அப்படிப்பட்டவர்கள், ஒரு வேலையில் நிலைத்திருந்து தங்களின் உணவை தாங்களே உழைத்து உண்ண வேண்டும் என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நாங்கள் கட்டளையிட்டு வேண்டிக்கொள்கிறோம். 3:13 பிரியமானவர்களே, நீங்களோ நல்லதைச் செய்வதில் ஒருபோதும் சோர்வடைய வேண்டாம். 3:14 இந்தக் கடிதத்திலுள்ள அறிவுறுத்தலுக்கு யாராவது கீழ்ப்படியாவிட்டால், அப்படிப்பட்டவனைக் குறித்துவைத்துக்கொள்ளுங்கள். அவன் வெட்கத்துக்குள்ளாகும்படி அவனோடு கூடிப் பழகாதிருங்கள். 3:15 ஆனாலும், அவனை ஒரு பகைவனாக எண்ணாமல், ஒரு சகோதரனைப் போல் எண்ணி எச்சரியுங்கள். 3:16 சமாதானத்தின் கர்த்தர் எப்போதும் எல்லாவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைக் கொடுப்பாராக. கர்த்தர் உங்கள் எல்லோருடனும் இருப்பாராக. 3:17 பவுலாகிய நான் இந்த வாழ்த்துதலை என்னுடைய சொந்தக் கைப்பட எழுதுகிறேன். இதுவே எனது கடிதங்கள் அனைத்துக்கும் அடையாளம். நான் எழுதும் முறையும் இதுவே. 3:18 நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் எல்லோருடனும் இருப்பதாக. ஆமென்.