Library · ta

Titus 3

3:1 ஆளுகை செய்கின்றவர்களுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் அடிபணிந்திருக்கவும், கீழ்ப்படிதல் உள்ளவர்களாய் இருக்கவும் எல்லாவிதமான நல்ல செயல்களைச் செய்ய ஆயத்தமாக இருக்கவும் அவர்களுக்கு ஞாபகப்படுத்து. 3:2 ஒருவரையும் அவதூறாய் பேசாமலும், எல்லோருடனும் சமாதானமும் கனிவும் உடையவர்களாகவும், அனைவருக்கும் முன்பாக எப்போதும் தாழ்மை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என மக்களுக்கு தொடர்ந்து ஞாபகப்படுத்து. 3:3 நாமும்கூட ஒரு காலத்தில் மூடர்களாயும், கீழ்ப்படியாதவர்களாயும், ஏமாற்றப்பட்டவர்களாயும், பலவிதமான தீய ஆசைகளுக்கும் சிற்றின்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களாயும் இருந்தோம். தீமை செய்யும் எண்ணமுடையவர்களாகவும், பொறாமை நிறைந்தவர்களாகவும், மற்றவர்களால் வெறுக்கப்படுகின்றவர்களாகவும், ஒருவரை ஒருவர் வெறுக்கின்றவர்களாகவும் வாழ்ந்தோம். 3:4 ஆனால் நமது இரட்சகராகிய இறைவனுடைய தயவும் கருணையும் வெளிப்பட்டபோது 3:5 நாம் செய்த நீதியான செயல்களின் காரணமாக அன்றி, அவருடைய இரக்கத்தின் காரணமாகவே அவர் நம்மை மீட்டெடுத்தார். மறுபிறப்பின் கழுவப்படுதல் மூலமாகவும் பரிசுத்த ஆவியானவரின் புதுப்பித்தல் மூலமாகவுமே அவர் நம்மை மீட்டார். 3:6 அந்தப் பரிசுத்த ஆவியானவரை நம்முடைய மீட்பரான இயேசு கிறிஸ்துவின் மூலமாய் அவர் நம்மீது நிறைவாக ஊற்றினார். 3:7 ஆகவே அவருடைய கிருபையின் மூலமாய் நாம் நீதிமான்கள் ஆக்கப்பட்டு, நித்திய வாழ்வு என்ற எதிர்பார்ப்பை சொத்துரிமையாகப் பெற்றுக்கொள்கின்ற அவருடைய வாரிசுகளாக வேண்டும் என்பதற்காகவே அப்படிச் செய்தார். 3:8 இது நம்பத்தகுந்த கூற்று. ஆகவே, இவற்றை நீ வலியுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்பொழுதே இறைவனைச் சார்ந்திருக்கின்றவர்கள், நல்ல செயல்களை செய்வதற்குத் தங்களை அர்ப்பணித்து அதிலே குறியாய் இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் இவை நலமானதாயும் பயனுள்ளதாயும் இருக்கின்றன. 3:9 ஆனால் மூடத்தனமான கருத்து முரண்பாடுகளையும், வம்ச வரலாறுகளையும், வாக்குவாதங்களையும், நீதிச்சட்டத்தைப் பற்றிய தர்க்கங்களையும் தவிர்த்துக்கொள்; ஏனெனில் அவை பயனற்றவை, வீணானவை. 3:10 பிரிவினை உண்டாக்குகின்றவர்களை எச்சரிக்கை செய், மேலும் இரண்டாவது முறையாகவும் எச்சரிக்கை செய். அதன்பின்பு அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளாதே. 3:11 அப்படிப்பட்டவர்கள், சீர்கெட்டவர்களாகவும், பாவத்தில் வாழ்கின்றவர்களாகவும், தங்களைத் தாங்களே தண்டனைக்கு உட்படுத்திக்கொள்கின்றவர்களாகவும் இருக்கின்றார்கள் என்று நிச்சயமாக அறிந்துகொள். 3:12 அர்த்தெமாவை அல்லது தீகிக்குவை நான் உன்னிடம் அனுப்பியவுடனே, நிக்கொப்போலி நகரில் இருக்கும் என்னிடம் வருவதற்கு உன்னால் முடிந்தளவு முயற்சி செய். ஏனெனில் குளிர் காலத்தில் நான் அங்கே தங்கியிருக்கத் தீர்மானித்திருக்கின்றேன். 3:13 சட்ட வல்லுநனாகிய சேனாவுக்கும், அப்பொல்லோவுக்கும் ஒரு குறைவுமில்லாமல் அவர்களுடைய பயணத் தேவைகள் எல்லாவற்றையும் கவனித்து அனுப்பி வை. 3:14 மற்றவர்களின் அன்றாட அவசிய தேவைகளில் கொடுத்து உதவத்தக்கதாக, நல்ல செயல்களைச் செய்ய நம்மவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் பயனற்றதான வாழ்க்கை வாழக் கூடாது. 3:15 என்னோடு இருக்கும் எல்லோரும் உனக்கு வாழ்த்துதல்களை அனுப்புகிறார்கள். சக விசுவாசிகளான நம்மில் அன்பாய் இருக்கின்றவர்களுக்கும் வாழ்த்துதலைச் சொல். கிருபை உங்கள் எல்லோருடனும் இருப்பதாக.