Hebrews 10
10:1 மோசேயின் சட்ட விதிமுறைகளானது வரவிருக்கும் நல்ல விடயங்களின் ஒரு நிழல் மாத்திரமேயன்றி, அதன் யதார்த்தமல்ல. இதன் காரணமாகவே ஒவ்வொரு வருடமும் திரும்பத் திரும்ப தொடர்ச்சியாக செலுத்தப்பட்ட பலிகளின் மூலமாய், வழிபாட்டிற்கு வருகின்றவர்களை முழுமை பெறச் செய்ய நீதிச்சட்டத்தால் ஒருபோதும் இயலாதிருக்கிறது.
10:2 அவ்வாறு முடியுமாயிருந்தால், பலிகள் செலுத்துவதும் நின்றிருக்கும் அல்லவா? ஏனெனில் இறைவனை ஆராதிக்கின்ற மக்கள் ஒரே தடவையாகத் தங்களுடைய பாவங்களிலிருந்து உண்மையாகவே சுத்திகரிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் தங்களுடைய பாவத்தைக் குறித்துத் தொடர்ந்து குற்ற உணர்வுடையவர்களாய் இருந்திருக்க மாட்டார்களே!
10:3 ஆனால் அந்தப் பலிகள் ஒவ்வொரு வருடமும், பாவங்களை நினைவூட்டுவதாகவே இருந்தன.
10:4 ஏனெனில் காளைகள், வெள்ளாடுகள் ஆகியவற்றின் இரத்தத்தினால், பாவங்களை ஒருபோதும் நீக்கிவிட முடியாது.
10:5 இதன் காரணமாகவே கிறிஸ்து உலகத்திற்குள் வந்தபோது அவர், “பலியையும், காணிக்கைகளையும் நீர் விரும்பவில்லை. ஆனால் ஒரு உடலை நீர் எனக்கென ஆயத்தம் செய்தீர்;
10:6 தகன காணிக்கைகளிலும், பாவநிவாரண காணிக்கைகளிலும் நீர் பிரியப்படவில்லை.
10:7 அப்போது நான் புத்தகச் சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கின்றபடி, ‘இதோ நான் இருக்கின்றேன். இறைவனே! உமது விருப்பத்தைச் செய்ய நான் வந்திருக்கிறேன்’ என்று சொன்னேன்” என்றார்.
10:8 முதலாவது அவர், “பலிகளையும், காணிக்கைகளையும், தகன காணிக்கைகளையும், பாவநிவாரண காணிக்கைகளையும் நீர் விரும்பவும் இல்லை, அவற்றில் நீர் பிரியப்படவும் இல்லை” என்றார். ஆயினும் நீதிச்சட்டத்தின்படியே அவை செலுத்தப்பட்டன.
10:9 பின்பு அவர், “இதோ நான் இருக்கின்றேன், உமது விருப்பத்தைச் செய்ய நான் வந்திருக்கிறேன்” என்றார். இதனால் அவர் முதலில் விபரித்தவற்றை நீக்குவதற்காக இரண்டாவதாக விபரித்தவற்றை ஏற்படுத்தி நிலைநிறுத்துகிறார்.
10:10 இவ்விதமாக கிறிஸ்து இயேசு ஒரே தரம் எல்லா காலத்திற்குமாக தமது உடலை பலியாகச் செலுத்தியதன் மூலமாக, இறைவனுடைய விருப்பத்தை நிறைவேற்றியதனால் நம்மை பரிசுத்தமாக்கியிருக்கிறார்.
10:11 ஒவ்வொரு மதகுருவும், நாள்தோறும் இறை சந்நிதியில் நின்று தனது பணிகளைச் செய்கின்றான். ஒருபோதும் பாவங்களைப் போக்க முடியாத பலிகளைத் திரும்பத் திரும்ப செலுத்துகிறான்.
10:12 ஆனால் கிறிஸ்துவாகிய இந்த மதகுருவோ, எல்லா காலங்களுக்கும் சேர்த்து பாவங்களுக்கான ஒரே பலியை செலுத்தியதன் பின் இறைவனுடைய வலது பக்கத்தில் அமர்ந்தார்.
10:13 அந்தவேளை முதல், “அவரின் எதிரிகள் அவரது அரியணையின் பாதபீடமாக ஆக்கப்படும் வரை ” அவர் அங்கே காத்திருக்கின்றார்.
10:14 ஏனெனில் பரிசுத்தமாக்கப்பட்டவர்களை ஒரே பலியினாலே அவர் என்றென்றும் பூரணப்படுத்தி விட்டார்.
10:15 பரிசுத்த ஆவியானவரும் இதைக் குறித்து நமக்கு சாட்சி கொடுக்கின்றார். அவர் முதலில் சொல்கின்றதாவது,
10:16 “அந்த நாட்களுக்குப் பின்பு, நான் அவர்களுடன் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே: நான் எனது சட்டங்களை அவர்களுடைய இருதயங்களில் வைப்பேன். அவற்றை அவர்களுடைய மனங்களில் நான் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்கின்றார்.”
10:17 பின்னும் அவர் தொடர்ந்து, “நான் அவர்களுடைய பாவங்களையும், சட்ட மீறுதல்களையும் இனி ஒருபோதும் ஞாபகத்தில் வைத்திருக்க மாட்டேன்” என்றார்.
10:18 எனவே, எங்கே பாவங்கள் மன்னிக்கப்பட்டதோ, அங்கே பாவங்களை நீக்குவதற்கான எவ்வித பலியும் இனிமேல் தேவையில்லை.
10:19 ஆகையால் சகோதரரே, இயேசுவினுடைய இரத்தத்தின் மூலமாய் மகா பரிசுத்த இடத்திற்குள் செல்வதற்குத் தைரியம் நமக்கு உண்டு.
10:20 அவருடைய உடலாகிய திரைச்சீலையின் மூலமாக ஒரு புதிதான உயிருள்ள வழியை அவர் நமக்குத் திறந்திருக்கிறார்.
10:21 இப்போது இறைவனுடைய வீட்டுக்குப் பொறுப்பாக நமது மேன்மையான தலைமை மதகுரு இருக்கின்றார் என்பதால்,
10:22 இரத்தம் தெளிக்கப்பட்டதால், நமது இருதயத்திலிருந்து குற்ற மனசாட்சி நீக்கப்பட்ட சுத்த இருதயமும் சுத்தமான தண்ணீரினால் கழுவப்பட்ட உடலும் கொண்டவர்களாக, உண்மை உள்ளத்துடன் பரிபூரண விசுவாசத்தோடு இறைவனை அணுகிச் சேருவோமாக.
10:23 நமக்கு வாக்குறுதி கொடுத்தவர் வாக்கு மாறாதவராய் இருப்பதனால், நாம் அறிக்கையிடுகின்ற நம்பிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்வோம்.
10:24 அத்துடன் நாம் அன்பாயிருப்பதிலும், நற்செயல்களைச் செய்வதிலும், எப்படி ஒருவரை ஒருவர் தூண்டி எழுப்பலாம் என்பதைப் பற்றிச் சிந்திப்போம்.
10:25 சிலர் சபையாக ஒன்றுகூடி வருவதை விட்டுவிடுகின்றதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நாமோ அப்படிச் செய்யாமல் கர்த்தருடைய நாள் நெருங்கி வருவதைக் காண்கின்றதனால் ஒருவரையொருவர் இன்னும் அதிகமாய் ஊக்குவிப்போம்.
10:26 நாம் சத்தியத்தை அறியும் அறிவைப் பெற்ற பின்னும் வேண்டுமென்றே பாவம் செய்துகொண்டு இருப்போமானால், இனிமேலும் பாவங்களை நீக்குவதற்கான பலி வேறொன்றும் இருக்காது.
10:27 ஆனால் பயப்படத்தக்கதான நியாயத்தீர்ப்பையும், இறைவனின் பகைவர்களைச் சுட்டெரிக்கின்றதான பற்றியெரியும் நெருப்பையுமே எதிர்நோக்க வேண்டும்.
10:28 மோசேயின் சட்டத்தை நிராகரித்தவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளால் குற்றம் நிரூபிக்கப்பட்டதும், இரக்கம் காட்டப்படாமல் மரணதண்டனை அடைந்தார்கள்.
10:29 அப்படியானால் இறைவனின் மகனை காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தமாக்கிய புதிய உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமாக எண்ணி கிருபையைக் கொடுக்கும் பரிசுத்த ஆவியானவரை அவமானப்படுத்தியவன், இன்னும் எந்தளவு கடுமையாகத் தண்டிக்கப்படுவான் என்பதைச் சிந்தியுங்கள்.
10:30 ஏனெனில், “பழிவாங்குதல் எனக்குரியது; நானே ஏற்றபடி பதில் செய்வேன்” என்றும், “கர்த்தர் தமது மக்களை நியாயம் தீர்ப்பார்” என்றும் சொல்லியிருக்கின்றவரை நமக்குத் தெரியும்.
10:31 வாழும் இறைவனின் கைகளில் விழுவது பயங்கரமானதே.
10:32 நீங்கள் புதிதாக அறிவொளி பெற்ற ஆரம்ப நாட்களில் பல வேதனைகளின் மத்தியில் பெரும் போராட்டத்தில் நிலைத்து நின்றதை நினைவிற்கொள்ளுங்கள்.
10:33 சில சமயங்களில் நீங்கள் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டீர்கள். இன்னும் வேறு சில சமயங்களில், இவ்விதம் துன்புறுத்தப்பட்டவர்களுடன் தோள் கொடுத்து நின்றீர்கள்.
10:34 சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் காண்பித்தீர்கள். உங்கள் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டபோது அவற்றைவிட மேன்மையானதும், என்றென்றும் நிலைத்திருக்கின்றதுமான உரிமைச் சொத்து உங்களுக்கு இருக்கின்றது என்பதை அறிந்திருந்ததனால், அதையும் மனமகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டீர்கள்.
10:35 ஆகையால் உங்களுக்கிருக்கும் அந்த மனவுறுதியை நீங்கள் இழந்து விடாதீர்கள். அது உங்களுக்கு ஒரு பெரிதான வெகுமதியைக் கொண்டுவரும்.
10:36 நீங்கள் விடாமுயற்சியுடையவர்களாய் இருக்க வேண்டும். அப்பொழுதே நீங்கள் இறைவனுடைய சித்தத்தைச் செய்து முடித்த பின் அவர் வாக்குக் கொடுத்ததைப் பெற்றுக்கொள்வீர்கள்.
10:37 ஏனெனில் “வருகின்றவர் கொஞ்சக் காலத்திலே, வந்துவிடுவார். அவர் தாமதிக்க மாட்டார்.
10:38 ஆனால், “எனது நீதிமான்கள் விசுவாசத்தினாலே வாழ்வார்கள். அவர்களில் ஒருவனாவது பின்வாங்கிப் போனால், நான் அவனில் பிரியமாயிருக்க மாட்டேன்” என்ற வேதவசனங்களை நாம் அறிவோம்.
10:39 நாமோ, விசுவாசத்திலிருந்து பின்வாங்கி அழிந்து போகின்றவர்களை அன்றி, விசுவாசித்து இரட்சிக்கப்படுகின்றவர்களை சேர்ந்தவர்களாயிருக்கிறோம்.