Hebrews 2
2:1 எனவே நாம் கேட்டறிந்த உண்மைகளை அதிக கவனமாய் பற்றிக்கொள்ள வேண்டும். அப்போதுதான், நாம் அவைகளிலிருந்து விலகிப் போகாமல் இருப்போம்.
2:2 இறைதூதர்கள் மூலமாய் பேசப்பட்ட செய்தி உறுதிப்படுத்தப்பட்டபடியால் அதை மீறியதற்கும், கீழ்ப்படியாததற்கும் ஒவ்வொரு முறையும் நீதியான தண்டனை கொடுக்கப்பட்டது.
2:3 அப்படியானால், கிறிஸ்துவின் ஊடாக வருகின்ற இப்படிப்பட்ட பெரிதான இரட்சிப்பை நாம் அலட்சியம் செய்தால், நாம் எப்படித் தப்ப முடியும்? இந்த இரட்சிப்போ ஆண்டவர் இயேசுவினாலேயே முதலாவதாக அறிவிக்கப்பட்டது. அவர் சொன்னதைக் கேட்டவர்கள் அதை நமக்கு உறுதிப்படுத்தினார்கள்.
2:4 இறைவனும் அடையாளங்களினாலும், அதிசயங்களினாலும், பலவித அற்புதங்களினாலும், தம்முடைய விருப்பத்தின்படியே பரிசுத்த ஆவியானவருடைய வரங்களையும் பகிர்ந்து கொடுத்து, அதற்குச் சாட்சி அளித்தார்.
2:5 வரப்போகும் உலகத்தைக் குறித்து நாம் பேசுகின்றோமே, அதை இறைவன் தமது தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை.
2:6 வேதவசனத்தில் ஓரிடத்தில் இதைப்பற்றி இவ்வாறு உறுதியாக சாட்சி சொல்லப்பட்டுள்ளது: “இறைவனே! மனிதனில் நீர் கரிசனைகொள்வதற்கு அவன் யார்? மனுமகனில் நீர் அக்கறைகொள்வதற்கு அவர் எம்மாத்திரம்?
2:7 நீர் அவரை சில காலம் இறைதூதர்களைவிட தாழ்ந்தவர் ஆக்கினீர். அவரை மகிமையினாலும் மாண்பினாலும் முடிசூட்டினீர்.
2:8 எல்லாவற்றையும் அவர் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்” என்கிறார். இறைவன் எல்லாவற்றையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினார் என்பதிலிருந்து, இறைவன் அவருக்குக் கீழ்ப்படுத்தாமல் எதையுமே விட்டுவிடவில்லை என்பது தெளிவாகிறது. இருந்தபோதும் எல்லாம் அவருக்கு இப்பொழுதே கீழ்ப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.
2:9 மரணத்தைத் தழுவியதால் இப்போது மகிமையினாலும் மாண்பினாலும் முடிசூட்டப்பட்டுள்ள இயேசுவையே இதில் நாம் காண்கின்றோம். அவரே சிறிது காலம் இறைதூதர்களிலும் சற்று சிறியவராக்கப்பட்டவர். இறைவனுடைய கிருபையினாலே அவர் எல்லோருக்காகவும் மரணத்தை அனுபவிக்கும்படியாகவே இப்படி நடந்தது.
2:10 இறைவனுக்காகவும், இறைவனின் மூலமாகவுமே எல்லாம் இருக்கின்றன. எனவே, அநேக பிள்ளைகளை மகிமைக்குள் கொண்டுவருவதற்காக, அவர்களது இரட்சிப்பின் மூலகாரணரான கிறிஸ்துவை வேதனை அனுபவிக்கச் செய்து, அதன்மூலமாக முழு நிறைவுள்ளவர் ஆக்கியது இறைவனுக்கேற்ற செயலே.
2:11 பரிசுத்தமாக்குகின்ற அவரும், பரிசுத்தமாக்கப்படுகின்றவர்களும் ஒரே குடும்பத்தினரே. அதனாலேயே இயேசு அவர்களைச் சகோதரர் என்று அழைப்பதற்கு வெட்கம்கொள்ளவில்லை.
2:12 இயேசு அவர்களைக் குறித்து, “நான் உம்முடைய பெயரை எனது சகோதரர்களுக்கு அறிவிப்பேன், திருச்சபையின் முன்னிலையில் உம்முடைய துதிகளைப் பாடுவேன்” என்கிறார்.
2:13 மேலும், “நான் அவரில் என் நம்பிக்கையை வைப்பேன்” என்றும், “இதோ நான் இருக்கின்றேன். இறைவன் எனக்குக் கொடுத்திருக்கின்ற பிள்ளைகளும் என்னுடன் இருக்கின்றார்கள்” என்றும் கூறியுள்ளார்.
2:14 பிள்ளைகள் இரத்தமும் சரீரமும் உடையவர்களாய் இருக்கின்றபடியால், அவர்களுடைய மனித இயல்பில் இயேசுவும் பங்கு கொண்டார். அவருடைய மரணத்தினால் மரணத்தின் அதிகாரத்தைத் தன்னிடம் வைத்துக் கொண்டிருந்த பிசாசை அழிப்பதற்கும்,
2:15 தங்களுடைய வாழ்நாள் எல்லாம் மரணத்தைக் குறித்த பயத்தினாலே, அடிமைகளாய் இருந்தவர்களை விடுதலை செய்வதற்காகவும் அவர் மனித இயல்பில் பங்கு கொண்டார்.
2:16 இயேசு உதவி செய்வது நிச்சயமாக இறைதூதர்களுக்கு அல்ல, ஆபிரகாமின் சந்ததிக்கே.
2:17 இதன் காரணமாகவே, இயேசு எல்லாவிதத்திலும் தம்முடைய சகோதரர்களைப் போலாக வேண்டியிருந்தது. இறைவனுடைய ஊழியத்தில் அவர் இரக்கமும் உண்மையுள்ளவருமான தலைமை மதகுரு ஆவதற்காகவும், மக்களுடைய பாவங்களுக்கான பாவநிவர்த்தியைச் செய்வதற்காகவுமே, தம்முடைய சகோதரர்களைப் போலானார்.
2:18 இயேசு சோதனைக்குட்பட்டபோது வேதனைகளை அனுபவித்தபடியால், இப்போது சோதிக்கப்படுகின்றவர்களுக்கு அவர் உதவி செய்ய வல்லவராய் இருக்கின்றார்.