Library · ta

James 2

2:1 பிரியமானவர்களே, நமது மகிமையுள்ள ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்கின்ற நீங்கள், பக்கச்சார்புள்ளவர்களாய் நடந்துகொள்ள வேண்டாம். 2:2 உங்கள் திருச்சபையில், ஒருவன் தங்க மோதிரமும் பளபளப்பான உடை அணிந்தும், ஏழையான ஒருவன் கந்தல் உடையுடனும் வந்திருக்கும்போது, 2:3 நீங்கள் பளபளப்பான உடை அணிந்து வந்த மனிதனைப் பார்த்து, “நீங்கள் நல்ல இருக்கையில் அமர்ந்துகொள்ளுங்கள்” என்றும், அந்த ஏழையைப் பார்த்து, “நீ அங்கே நில்” அல்லது “எனது காலடியில் உட்கார்ந்துகொள்” என்றும் சொன்னால், 2:4 நீங்கள் உங்களுக்குள்ளே வேறுபாடு உள்ளவர்களாக தீய எண்ணத்துடன் மதிப்பிடுகின்றவர்கள் அல்லவா? 2:5 எனக்குப் பிரியமானவர்களே, கேளுங்கள். உலகத்தில் ஏழைகளாய்க் காணப்பட்டவர்களை இறைவன் விசுவாசத்தில் செல்வந்தர்களாகவும், அவரில் அன்பாயிருக்கின்றவர்களுக்கு வாக்குறுதியளித்தபடி இறையரசை சொத்துரிமையாகப் பெறுபவர்களாகவும் தெரிவு செய்யவில்லையா? 2:6 ஆனால் நீங்களோ, ஏழைகளை அவமதிக்கிறீர்கள். செல்வந்தர்கள் அல்லவா உங்களை அடக்கி ஒடுக்குகிறார்கள்? அவர்கள் அல்லவா உங்களை நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்கிறார்கள்? 2:7 அவர்கள் அல்லவா உங்களுக்கு அளிக்கப்பட்ட இறைவனின் சிறப்பான பெயரை நிந்திக்கிறார்கள்? 2:8 “உன்னில் அன்பாயிருப்பது போல், உன் அயலவனிலும் அன்பாயிரு” என்று வேதவசனத்தில் கூறப்பட்டிருக்கின்ற இந்த இறையரசின் சட்டத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மை செய்கின்றவர்களாய் இருப்பீர்கள். 2:9 ஆனால் நீங்கள் பக்கச்சார்புள்ளவர்களாய் நடந்தால், பாவம் செய்து சட்டத்தை மீறியவர்கள் என்று நீதிச்சட்டத்தினால் குற்றவாளிகளாகத் தீர்க்கப்படுவீர்கள். 2:10 ஏனெனில், யாராவது ஒருவன் நீதிச்சட்டத்தை முழுவதும் கைக்கொண்டு, ஒன்றில் மட்டும் தவறினால் அவன் முழுச் சட்டத்தையும் மீறிய குற்றவாளியாகிறான். 2:11 “தகாத உறவுகொள்ளாதே” என்று சொன்னவர், “கொலை செய்யாதே” என்றும் சொல்லியிருக்கின்றார். எனவே நீ தகாத உறவில் ஈடுபடாவிட்டாலும், கொலை செய்தால், நீ நீதிச்சட்டத்தை மீறியவன் ஆகின்றாய். 2:12 விடுதலையின் சட்டத்தின் அடிப்படையில் நீங்கள் நியாயம் தீர்க்கப்படப் போகின்றபடியால் பேச்சிலும், செயலிலும் கவனமாயிருங்கள். 2:13 ஏனெனில் இரக்கம் காட்டாதவனுக்கு இரக்கமற்ற நியாயத்தீர்ப்பே கிடைக்கும். நியாயத்தீர்ப்பிற்கு மேலாக இரக்கமே வெற்றி பெறும். 2:14 பிரியமானவர்களே! ஒருவன் தனக்கு விசுவாசம் உண்டு என்று சொல்வதோடு, அதற்கேற்ற நன்னடத்தையை கொண்டிராவிட்டால் அதனால் பயன் என்ன? அப்படிப்பட்ட விசுவாசம் அவனை இரட்சிக்குமா? 2:15 ஒரு சகோதரனாவது சகோதரியாவது உடையின்றியும், அன்றாட உணவின்றியும் இருக்கும்போது, 2:16 உங்களில் யாராவது அவர்களைப் பார்த்து, “சமாதானத்தோடு போய் வா. குளிர் காய்ந்துகொள், திருப்தியாக உணவருந்து” என்று சொல்லியும், அவரது உடலுக்குரிய தேவைகளைக் கொடுத்து உதவாமல்விட்டால், அதனால் பயன் என்ன? 2:17 இவ்விதமாய் விசுவாசம் நற்செயலுடன் சேர்ந்து இருக்காவிடின், அது மரணித்த விசுவாசமாகவே இருக்கும். 2:18 ஒருவன், “உங்களிடம் விசுவாசம் இருக்கின்றது, என்னிடமோ, நற்செயல்கள் இருக்கின்றன” என்று சொல்வானாகில், அதற்கு நான், “நற்செயல் இல்லாத உன் விசுவாசத்தை எனக்கு காண்பி” என்றும், “நான் என்னுடைய விசுவாசத்தை என்னுடைய நற்செயல்களின் மூலமாய் உனக்குக் காண்பிப்பேன்” என்றும் சொல்வேன். 2:19 ஒரே ஒரு இறைவன்தான் இருக்கின்றார் என்று நீ விசுவாசிக்கின்றாய். அது நல்லதுதான். பிசாசுகளும்கூட அதை விசுவாசிக்கின்றனவே, விசுவாசித்து நடுங்குகின்றனவே. 2:20 மடைமையான மனிதனே! செயலற்ற விசுவாசம் பயனற்றது என்பதைக் காண்பிக்க உனக்கு ஆதாரம் வேண்டுமோ? 2:21 நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம், தன்னுடைய மகனாகிய ஈசாக்கை, பலிபீடத்தின் மேல் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தபோது, தன்னுடைய செயலினால் அல்லவோ நீதிமான் என்று எண்ணப்பட்டார்? 2:22 ஆபிரகாமினுடைய விசுவாசமும், அவருடைய செயல்களும் ஒன்றாகச் செயலாற்றின. அவர் செய்த செயலினாலேயே அவருடைய விசுவாசம் முழுநிறைவு பெற்றது. 2:23 இவ்விதமாய், “ஆபிரகாம் இறைவனை விசுவாசித்தார். அந்த விசுவாசம் அவருக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது” என்று சொல்கின்றபடி வேதவசனம் நிறைவேறிற்று. அவர் இறைவனின் நண்பன் என அழைக்கப்பட்டார். 2:24 எனவே, ஒருவன் விசுவாசத்தினால் மட்டுமன்றி அவன் செய்கின்ற செயலினாலும் நீதிமானாக்கப்படுகிறான் என்று காண்கின்றீர்கள். 2:25 அவ்வாறே, ராகாப் எனப்பட்ட விலைமாது, இஸ்ரயேலரின் ஒற்றர்களை ஏற்றுக்கொண்டு, வேறு வழியாய் அவர்களை அனுப்பி வைத்த செயலினால், நீதியுள்ளவள் என்று எண்ணப்பட்டாள் அல்லவா? 2:26 உயிரற்ற உடலானது மரணித்துப் போன ஒன்று, அதைப்போலவே செயலற்ற விசுவாசமும் மரணித்த ஒன்றாக இருக்கின்றது.