Revelation 12
12:1 பரலோகத்தில் ஒரு பெரிய அடையாளம் தோன்றியது. சூரியனை ஆடையாக அணிந்திருந்த ஒரு பெண் காணப்பட்டாள். அவளது பாதங்களின் கீழே நிலா இருந்தது. அவளது தலையின்மேல், பன்னிரண்டு நட்சத்திரங்களைக்கொண்ட ஒரு கிரீடம் இருந்தது.
12:2 அவள் கர்ப்பிணியாக இருந்தாள். குழந்தை பெறப் போகும் பிரசவ வலியில் இருந்தபடியினால், அவள் வேதனையில் கதறினாள்.
12:3 அப்போது பரலோகத்திலே இன்னொரு அடையாளம் தோன்றியது. சிவப்பு நிறமுடைய மிகப் பெரிய இராட்சதப் பாம்பு ஒன்று காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன; அதன் ஏழு தலைகளின் மீதும் ஏழு கிரீடங்கள் இருந்தன.
12:4 அதனுடைய வால், வானத்து நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கை வாரி எடுத்து, அவைகளை பூமியின் மேல் வீசியெறிந்தது. பிரசவிக்கும் தறுவாயிலிருந்த அந்தப் பெண், குழந்தையைப் பெற்ற உடனே, அந்தக் குழந்தையை விழுங்குவதற்காக அந்த இராட்சதப் பாம்பு அவள் முன்னால் நின்றது.
12:5 “எல்லா மக்கள் இனங்களையும் இரும்புக் கோலால் ஆளுகை செய்யும்” ஒரு ஆண் பிள்ளையை அவள் பெற்றெடுத்தாள். அவளுடைய பிள்ளை மேலே இறைவனிடத்திற்கும், அவருடைய அரியணைக்கும் இழுத்துக்கொள்ளப்பட்டது.
12:6 அந்தப் பெண்ணோ பாலைநிலத்திற்குத் தப்பி ஓடினாள். அங்கு இறைவனால் ஆயத்தப்படுத்தப்பட்ட இடத்தில் 1,260 நாட்கள் பராமரிக்கப்பட்டாள்.
12:7 பரலோகத்தில் யுத்தம் தொடங்கியது. மிகாவேலும், அவனுடைய தூதர்களும் அந்த இராட்சதப் பாம்புக்கு எதிராக யுத்தம் செய்தார்கள். அந்த இராட்சதப் பாம்பும் அதன் தூதர்களும் எதிர்த்து யுத்தம் செய்த போதிலும்,
12:8 அவை வெற்றி பெறவில்லை. அதனால் பரலோகத்தில் தமது இடத்தை அவை இழந்து போயின.
12:9 அந்தப் பெரிய இராட்சதப் பாம்பு கீழே தள்ளப்பட்டது. இதுவே முழு உலகத்தையும் ஏமாற்றுகிற பழங்காலத்துப் பாம்பு. பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்பட்ட இவனும், இவனுடைய தூதர்களும் பூமியிலே விழும்படி தள்ளப்பட்டார்கள்.
12:10 அப்போது பரலோகத்திலே உரத்த சத்தமான ஒரு குரல் இவ்வாறு ஒலிப்பதை நான் கேட்டேன்: “இப்போது, நமது இறைவனுடைய இரட்சிப்பும், வல்லமையும், அரசும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் வந்துவிட்டன. ஏனெனில் இறைவனுக்கு முன்பாக, இரவும் பகலும் நம்முடைய சகோதரர்களை குற்றம் சாட்டுகின்றவன், கீழே வீசித் தள்ளப்பட்டுவிட்டான்.
12:11 அவர்களோ ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தினாலும், தங்களுடைய சாட்சியின் வார்த்தையினாலும் அவனை வெற்றிகொண்டார்கள். அவர்கள் தங்களுடைய உயிர் மீது ஆசை வைக்கவில்லை. அதனால் மரணத்துக்கும் அஞ்சவில்லை.
12:12 ஆகையால் பரலோகங்களே! அவைகளில் குடியிருக்கின்றவர்களே! நீங்கள் மகிழ்ச்சிகொள்ளுங்கள். பூமிக்கும் கடலுக்கும் ஐயோ பேரழிவு, ஏனெனில் பிசாசு கீழே உங்களிடம் வந்திருக்கிறான்! அவன் தன்னுடைய நாட்கள் கொஞ்சம் என்பதை அறிந்து, கடுங்கோபம் கொண்டிருக்கிறான்.”
12:13 தான் கீழே தள்ளப்பட்டு பூமியில் வீழ்ந்ததைக் கண்ட இராட்சதப் பாம்பு, அந்த ஆண் குழந்தையைப் பெற்ற பெண்ணைத் துரத்திச் சென்றது.
12:14 பாலைநிலத்திலே தனக்கு ஆயத்தப்படுத்தப்பட்ட இடத்திற்குப் பறந்து போகக் கூடியதாக, அந்தப் பெண்ணுக்கு ஒரு பெரிய இராஜாளி பருந்தின் இரண்டு சிறகுகள் கொடுக்கப்பட்டிருந்தன. அவள் அந்த இராட்சதப் பாம்பின் பிடியில் அகப்படாமல், அங்கே ஒரு காலமும் காலங்களும் அரைக் காலமும் பராமரிக்கப்படுவாள்.
12:15 அப்போது அந்த இராட்சதப் பாம்பு வெள்ளப் பெருக்கால் அந்தப் பெண்ணை வாரிக் கொண்டுபோகும்படி, தன் வாயிலிருந்து ஆறு போன்று தண்ணீரை அவளுக்குப் பின்னால் கக்கி விட்டது.
12:16 ஆனால் பூமியோ தன் வாயைத் திறந்து, அந்த இராட்சதப் பாம்பு தன் வாயிலிருந்து கக்கிய அந்தத் தண்ணீரை விழுங்கி, அந்தப் பெண்ணுக்கு உதவி செய்தது.
12:17 அப்போது அந்த இராட்சதப் பாம்பு அந்தப் பெண்ணின் மேல் கடுங்கோபம்கொண்டு, இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தவர்களாய்,
12:18 இயேசுவினுடைய சாட்சியைக் காத்துக்கொள்கின்ற அவளுடைய சந்ததியில் எஞ்சியிருக்கிற மற்றவர்களுக்கு எதிராக யுத்தம் செய்யப் போனது.