Library · ta

Revelation 16

16:1 பின்பு, ஆலயத்திலிருந்து வந்த ஒரு குரல் அந்த ஏழு இறைதூதர்களிடம், “போங்கள், இறைவனுடைய கோபத்தின் ஏழு கிண்ணங்களையும் பூமியின் மேல் ஊற்றுங்கள்” என்று உரத்த சத்தமாய் சொல்வதைக் கேட்டேன். 16:2 முதலாவது இறைதூதன் போய் தனது கிண்ணத்தில் உள்ளதைத் தரையில் ஊற்றினான். அப்போது மிருகத்தின் அடையாளம் உள்ளவர்கள் மேலும் அதன் உருவச் சிலையை வணங்கியவர்கள் மேலும் வேதனை உண்டாக்கும் கொடிய புண்கள் ஏற்பட்டன. 16:3 இரண்டாவது இறைதூதன், தனது கிண்ணத்தில் உள்ளதைக் கடலில் ஊற்றினான். அது இறந்தவனின் இரத்தத்தைப் போல் மாறியது. அப்போது கடலிலுள்ள எல்லா உயிரினங்களும் இறந்து போயின. 16:4 மூன்றாவது இறைதூதன், தனது கிண்ணத்தில் உள்ளதை ஆறுகளிலும் நீரூற்றுகளிலும் ஊற்றினான். அவையெல்லாம் இரத்தமாகின. 16:5 பின்பு தண்ணீருக்குப் பொறுப்பாயிருந்த இறைதூதன் இப்படியாக சொன்னதைக் கேட்டேன். அவன், “இருக்கின்றவரும், இருந்தவருமான பரிசுத்தரே! நீர் நீதியுள்ளவர். நீர் நியாயமுள்ளவராய் இந்த நியாயத்தீர்ப்புகளை வழங்கியிருக்கிறீர். 16:6 இவர்கள் உமது பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும், இறைவாக்கினரின் இரத்தத்தையும் சிந்தியவர்கள். எனவே, நீர் அவர்களுக்கு இரத்தத்தைக் குடிக்கக் கொடுத்தது அவர்களுக்கு ஏற்ற தண்டனையே” என்றான். 16:7 அப்போது பலிபீடத்திலிருந்து: “ஆம், எல்லாம் வல்ல இறைவனாகிய கர்த்தாவே! உமது நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவை” என்று பதில் உரைப்பதைக் கேட்டேன். 16:8 நான்காவது இறைதூதன் தனது கிண்ணத்தில் உள்ளதை சூரியன் மேல் ஊற்றினான். அப்போது மனிதரை நெருப்பினால் சுட்டெரிக்கும் வல்லமை சூரியனுக்குக் கொடுக்கப்பட்டது. 16:9 அந்தக் கடும் வெப்பத்தினால் மக்கள் சுட்டெரிக்கப்பட்டபோது, அவர்கள் இந்த வாதைகளின் மேல் அதிகாரமுள்ள இறைவனின் பெயரை சபித்தார்களே தவிர, மனந்திரும்பி இறைவனுக்கு மகிமையைச் செலுத்த மறுத்தார்கள். 16:10 ஐந்தாவது இறைதூதன் தனது கிண்ணத்தில் உள்ளதை மிருகத்தின் அரியணையின் மேல் ஊற்றினான். அப்போது அவனுடைய அரசு இருளில் மூழ்கியது. வேதனையினால் மனிதர் தங்கள் நாவுகளைக் கடித்துக் கொண்டார்கள். 16:11 அவர்கள் தங்களுடைய வேதனையின் காரணமாகவும், அவர்களின் புண்களின் காரணமாகவும், பரலோகத்தின் இறைவனை சபித்தார்களே தவிர, தாங்கள் செய்ததைவிட்டு மனந்திரும்ப மறுத்தார்கள். 16:12 ஆறாவது இறைதூதன் தனது கிண்ணத்தில் உள்ளதை, யூப்பிரட்டீஸ் எனப்பட்ட பெரிய ஆற்றின் மேல் ஊற்றினான். அப்போது கிழக்கிலிருந்து வரும் அரசர்களுக்கு வழியை ஏற்படுத்தும்படி அதன் தண்ணீர் வற்றிப் போயிற்று. 16:13 அதற்குப் பின்பு தவளைகளைப் போல் காணப்பட்ட மூன்று தீய ஆவிகள் வெளிவரக் கண்டேன். அவை அந்த இராட்சதப் பாம்பின் வாயிலிருந்தும், மிருகத்தின் வாயிலிருந்தும், அந்தப் போலி இறைவாக்கினனின் வாயிலிருந்தும் வெளியே வந்தன. 16:14 அவை அற்புத அடையாளங்களைச் செய்து காட்டும் பிசாசுகளின் ஆவிகள். எல்லாம் வல்ல இறைவனுடைய பெரிதான நாளில் அவருக்கு எதிராக நடக்கப் போகும் யுத்தத்திற்காக, உலகம் முழுவதிலுமுள்ள அரசர்களை ஒன்றுசேர்க்கும்படி அவை புறப்பட்டுச் சென்றன. 16:15 “இதோ, நான் ஒரு திருடனைப் போல் வருகின்றேன்! விழிப்புள்ளவனாய் இருந்து, தனது ஆடைகளை அணிய ஆயத்தமாய் வைத்திருக்கின்றவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். அப்போது அவன் நிர்வாணமாய் நடக்காமலும், பகிரங்கமாய் வெட்கத்துக்கு உள்ளாகாமலும் இருப்பான்.” 16:16 அதன்பின்பு, அவை எபிரேய மொழியிலே அர்மகெதோன் என்று அழைக்கப்படும் இடத்திற்கு அரசர்களை ஒன்றுகூட்டிச் சேர்த்தன. 16:17 ஏழாவது இறைதூதன் தனது கிண்ணத்தில் உள்ளதை ஆகாயத்திலே ஊற்றினான். அப்போது ஆலயத்தில், அரியணையிலிருந்து வந்த ஒரு குரல் “செய்தாயிற்று!” என்று உரத்த சத்தமாய் சொல்வதைக் கேட்டேன். 16:18 அப்போது மின்னல்களும் பேரிரைச்சல்களும் இடிமுழக்கங்களும் பெரிய பூமியதிர்ச்சியும் ஏற்பட்டன. மனிதர் பூமியில் தோன்றிய நாள்முதல் அதுபோன்ற பாரிய பூமியதிர்ச்சி ஒருபோதும் ஏற்பட்டதில்லை. அந்த பூமியதிர்ச்சி அவ்வளவு பலமாய் இருந்தது. 16:19 மகா நகரமான பாபிலோன் மூன்று பகுதிகளாகப் பிளவுபட்டது. மற்ற மக்கள் இனங்களின் நகரங்கள் இடிந்து விழுந்தன. இறைவன் மகா பாபிலோனை நினைத்துப் பார்த்தவராய், திராட்சை மது நிரப்பி தம்முடைய கடுங்கோப கிண்ணத்தை அவளுக்குப் பருகக் கொடுத்தார். 16:20 தீவுகள் அனைத்தும் மறைந்து போயின. மலைகள் காணப்படவில்லை. 16:21 வானத்திலிருந்து மிகப் பெரிய ஆலங்கட்டிகள் மனிதர்கள் மேல் வந்து விழுந்தன. அவை ஒவ்வொன்றும் சுமார் நாற்பத்தைந்து கிலோ நிறையுடையதாய் இருந்தது. அந்த ஆலங்கட்டியினால் ஏற்பட்ட வாதையின் காரணமாக மனிதர்கள் இறைவனை நிந்தித்தார்கள். ஏனெனில் அந்த வாதை மிகவும் கொடியதாய் இருந்தது.